வெளியிடப்பட்ட நேரம்: 09:23 (02/06/2017)

கடைசி தொடர்பு:09:33 (02/06/2017)

வேகமாக பரவும் போதைக் காளான்... தப்பிக்குமா கொடைக்கானல்?! #VikatanExclusive

காளான்

கொடைக்கானல் என்றதும் பறந்து விரிந்த மலைகள், பசுமையை போர்த்திய  பள்ளத்தாக்குகள், மேக கூட்டங்கள், புல்வெளிகள், குகைகள்  என பல விஷயங்களை அதன் அடையாளமாக சொல்லலாம். ஆனால் சில காலமாக இதையெல்லாம் தவிர்த்து சர்வதேச அளவில் "போதைக் காளான்" என்ற ஒன்றை அடையாளமாக கொண்டிருக்கிறது இப்போதிருக்கிற கொடைக்கானல். காடுகளில் இயற்கையாக கிடைக்கக்கூடிய ஒரு வகை காளானை தான்  போதைக் காளான் என்கின்றனர். சிலோசைப்பின் என்கிற போதை தரும் வேதி பொருள் இவ்வகை காளான்களில் இருப்பதால் கறுப்பு பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது போதைக் காளான். 

கொடைக்கானலில் காளான் கிடைக்கும் இடங்களாக வட்டக்கானல், பெரும்பள்ளம், வில்பட்டி, மன்னவனூர் பகுதிகளை சொல்கிறார்கள். கொடைக்கானல் காவல்துறை போதைக் காளான் விற்பனையைத் தடை செய்யும் விதமாக பல வழிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன் வட்டக்கானல்  போகிற வழியில் சோதனைச்சாவடி அமைத்திருக்கிறார்கள். இரண்டு  கண்காணிப்பு கேமிராக்களை பொருத்தி வட்டக்கானல் போய் வருகிற எல்லா  வாகனங்களையும் சோதனை செய்வதால் வட்டக்கானல் பகுதியில் இப்போது போதைக்காளான் கிடைப்பதில்லை என்கின்றனர்  அப்பகுதி மக்கள். இது குறித்து வட்டக்கானல் பகுதியில் இருந்த ஒருவரிடம் விசாரித்த போது  "என்கிட்டே கேட்ட மாதிரி வேற யார்கிட்டயும் கேட்றாதீங்க உள்ள புடிச்சி போட்ருவாங்க" என்கிறார் 

கொடைக்கானலில் இவ்வளவு கட்டுப்பாடுகள், கண்காணிப்பு இருந்தும் போதைக்  காளான்கள் தாராளமாக கிடைக்கின்றன என்கிறார் பெயர் சொல்ல விரும்பாத சுற்றுலா வழிகாட்டி ஒருவர். ஒரு விடுதி உரிமையாளரை சந்தித்து காளான்கள் எங்கு கிடைக்கும் என கேட்டதற்கு "காலைல ஏழு மணிக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கம் போய்டுங்க தம்பி, சுற்றுலா வழிகாட்டிகள் நெறய பேர் இருப்பாங்க, என்ன பொருள் எங்க கிடைக்கும்னு எல்லாமே அவங்களுக்கு தெரியும். அவங்களே வந்து கேப்பாங்க,அப்டி இல்லனா சந்தேகப்படும்படியா யாராவது இருந்தா நீங்களே கேளுங்க,அவங்க எங்க கிடைக்கும்னு சொல்லிடுவாங்க” என்கிறார். 

கொடைக்கானல் புறநகர் பகுதிகளில் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் விடுதிகளில் தான் போதைக் காளான் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த விடுதிகளுக்கென தனியாக சுற்றுலா வழிகாட்டிகள்  இருக்கிறார்கள். அவர்கள்  நான்கைந்து பேராக கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிற இளைஞர்களிடம்,  "சார் ரூம் வேணுமா, காட்டேஜ் இருக்கு சார், ரொம்ப கம்மியான காட்டேஜ் சார்,  ஹில் வியூ காட்டேஜ் சார், ட்ரெக்கிங் ஃபெசிலிட்டி இருக்கு சார்” எனக் கூறி   அவர்களைக் குறிப்பிட்ட அந்த  விடுதிகளுக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு வழங்கப்படுகிற உணவில் அவர்களுக்கே தெரியாமல் போதைக்  காளானை கலந்து கொடுத்து விடுகின்றனர். அதை உணவாக எடுத்து கொள்கிற இளைஞர்கள் ஒரு வித மயக்கத்திற்கு நிலைக்கு சென்று விடுகிறார்கள். காளானின் போதை எட்டு மணி நேரத்தில் இருந்து பன்னிரண்டு மணி நேரம் வரை இருக்கும் என்பதால், இளைஞர்கள்  சுற்றுலாத் தளங்களுக்கு செல்லாமல்  போதை மயக்கத்தில் விடுதிகளிலேயே இருந்து விடுகின்றனர். அப்படி இருக்கிற இளைஞர்களிடம் விடுதி காப்பாளர்கள் அளவிற்கு அதிகமான பணத்தையும் கறந்து விடுகின்றனர். 

காளான்


காளானின் போதைக்கு அடிமையாகிற இளைஞர்கள் சுற்றுலா வந்து போன அடுத்த சில வாரங்களிலேயே மீண்டும் அதே விடுதிகளுக்கு வருகிறார்கள். வரும் போது புது புது நண்பர்களை அழைத்து வருவது தான் வேதனையான விஷயம்.  ளைஞர்கள்களுடன் வருகிற பெண் நண்பர்களின் நிலை வேறுமாதிரியாக இருக்கிறது. போதை மயக்கத்தில் எல்லை மீறுகின்றவர்களை விடுதியில் இருப்பவர்கள் ரகசிய கேமரா மூலம் படம் பிடித்து பின் பணம் பறிக்கும் சம்பவமும் நடப்பதாக சொல்கிறார்கள் கொடைக்கானல்வாசிகள். 

கொடைக்கானல் பகுதியில் பதினைந்து வருடங்களுக்கு மேல் விடுதி நடத்தி வரும் ஒருவர் கூறுகையில் "கேரளா கர்நாடகல இருந்து வர முக்கால்வாசி பேர் போதைக் காளானுக்குதான் கொடைக்கானலுக்கே வராங்க, எல்லாருமே பசங்கதான். எங்க காட்டேஜில தங்குற சிலர் கைல அயர்ன் பாக்ஸ் வச்சிருப்பாங்க. எதுக்கு வச்சுருக்காங்கனு அப்போ எனக்கு தெரியாது, வாங்கிட்டு வர காளானை அப்படியே சாப்பிடாம காளானை நசுக்கி ஆம்லேட்டுல தூவி சாப்பிடுவாங்க, ஆம்லெட் போடுறதுக்கு ஸ்டவ், சட்டி எல்லாம் தேவைப்படும்.அதுனால வரும் போதே அயர்ன்பாக்ஸ் எடுத்து வந்துடுறாங்க. அதுல ஆம்லெட் போட்டு சாப்டுருவாங்க. சிலர் போதையில் பதினைந்து சப்பாத்தி வரை சாப்பிடுவாங்க. பாக்குற நமக்கே  ஆச்சரியமா இருக்கும்” என்கிறார். 

எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் நாளொன்றுக்கு இருநூறு ரூபாயில் இருந்து முன்னூறு ரூபாய் வரை தான் வருமானமாக வருகிறது. ஆனால் காளான் விற்பனையில் ஈடுபட்டால் நாளொன்றுக்கு ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை வருமானம் கிடைப்பதால் சிலர் இதில் ஈடுபடுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டஜன் நூறு ரூபாய்க்கு விற்பனை ஆன காளான்கள்  இப்போது ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை விற்பனையாகின்றன. சுற்றுலா வருகிற பயணிகள் எவ்வளவு பணம் கொடுத்தேனும் வாங்குவதற்கு தயாராக இருப்பதால் காளான் விற்பவர்கள் பல  வழிகளில் காடுகளில் இருந்து காளான்களை பறித்து வருகின்றனர். மேலும் விறகுக்காக காடுகளுக்குள் செல்லும் பெண்களிடம் இவ்வளவு பணம்  தருகிறோம் என விலை பேசி அவர்களின் மூலமாகவும் காளான்களை பெற்றுவருகிறார்கள். 

பல சிறப்புகளை தன்னகத்தே கொண்ட கொடைக்கானல் "போதை" என்கிற ஒரு வார்த்தையில் சுருங்கி போவதை தடுத்தாக வேண்டும். அடுத்த தலைமுறை பசுமையாக இருக்க வேண்டுமெனில் சிலவற்றை வேரோடு பிடுங்கியாக வேண்டிய கட்டாயம் நமக்கும் இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. 

-ஜார்ஜ் ஆண்டனி


டிரெண்டிங் @ விகடன்