வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (02/06/2017)

கடைசி தொடர்பு:13:30 (02/06/2017)

“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்! - பாகம் 1 ⁠⁠⁠⁠

ரஜினி  தொடர்

2016...தமிழக அரசியலில் மிகமுக்கியமான ஆண்டு! ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து வரலாறு படைக்கப்பட்ட வருடம். அந்த சாதனையைப்படைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பரில் இறந்தும் போனார்.

2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலே மாறிப்போனது. அதுவரை ஊமைகளாக இருந்த ‘மாண்புமிகுக்கள்’ எல்லாம் மீடியா முன்பு பேச ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் பேட்டி தர மாட்டார்களா என மைக்குடன் பத்திரிகையாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிய காலம்போய், பைட் கொடுப்பதற்காக, மைக்கைத் தேடி அமைச்சர்கள் அலையத் தொடங்கினார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சி ஆதரிக்கத் தொடங்கியது. 

தன் படத்துக்கு சிக்கல் வந்தபோது, ‘‘நாட்டை விட்டு வெளியேறுவேன்’’ என ‘விஸ்வரூபம்’ எடுத்தார் கமல். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவர் காட்டிய அதிகபட்ச எதிர்ப்பு இதுதான். சென்னையை பெருவெள்ளம் புரட்டிப்போட்டபோது, ‘‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது? அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது’’ எனத் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் பிறகு ‘‘வேறு மாதிரியாக எழுதிவிட்டார்கள்’’ என ஜகா வாங்கினார். ஜெயலலிதா இறந்த பிறகு, கமலுக்கும் வீரம் வந்துவிட்டது. ‘107செயற்கை உறுப்பினர்களை ஏவியவரைவிட 104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்’ என கூவத்தூர் கூத்தை கிண்லடித்தார். ‘தப்பான ஆளு, எதிலும் வெல்லும் ஏடாகூடம்’ என்றெல்லாம் கமல்போட்ட ட்வீட்கள் தமிழக அரசியலைத் திணறடித்தன.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலாவும் பாய்ச்சல் காட்டினார். ஜெயலலிதாவைப் போலவே மேக்-அப் போட்டுவந்து, ‘‘அக்கா... கோட்டையைவிட்டுக் கிளம்பிட்டீங்களா... மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் பேசிய பேச்சின்போது கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் சிந்தினார். ஜெயலலிதா பயன்படுத்திய கார், சேர் மற்றும் அவரைப் போன்றே ஹேர்ஸ்டைல் என சசிகலா மாறிப்போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணம்தான்.

‘துணிச்சல்காரி’ என பெயர்பெற்ற ஜெயலலிதா, இந்த உலகத்துக்கு விட்டுச் சென்றது துக்கத்தை அல்ல. தைரியத்தை! ஒரு மரணம், அரசியல் நகர்வுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை.சிலரின் குருதியில் ‘தைரியம் மற்றும் பாசிட்டிவ்’ குரூப் ரத்தத்தையும் செலுத்திவிட்டுப் போயிருக்கிறது. இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் விதிவிலக்கல்ல.‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.’’ என்று 21 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கிய ரஜினியின் உதடுகளின் உறைப்பு காலப்போக்கில் கரைந்துபோனது.பிறகு சூப்பர்ஸ்டாரே, ஜெயலலிதாவுக்கு ‘தைரியலட்சுமி’ பட்டம் எல்லாம் கொடுத்தது அக்மார்க் தடம் மாறுதல்கள். 

ரஜினி

ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, ரஜினி தடம் மாறியிருக்கிறார். அண்மையில் ரசிகர்களைச் சந்தித்தபோது அவர், ‘‘போர் வந்தால் களத்தில் குதிப்போம்... இங்கே சிஸ்டம் கெட்டுக்கிடக்கு... பச்சைத் தமிழன்’’ என்றெல்லாம் முழங்கி இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திரையில்பேசிய அரசியல் வசனங்களை அவர் உயிருடன் இல்லாதபோது, நிஜத்தில் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார். கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டுவந்த ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்கிற பேசுபொருள், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘ஆண்டவன் கட்டளை’ இந்தமுறை நிஜமாகும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. கடந்த காலங்களில் அரசியல் பேசிவிட்டு போய்விடுவார். இந்தமுறை அரசியல் புள்ளிகளையும் பத்திரிகையாளர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘‘ரஜினியின் அரசியல் என்ட்ரி இந்தமுறை நிச்சயம் நடக்கும்’’ என்பதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வந்த பலரின் கணிப்பாக இருக்கிறது.

ஜெயலலிதா இல்லை...கருணாநிதி அரசியலில் தீவிரமாகச் செயல்படும் நிலையில் இல்லை... அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. இப்படியான வெற்றிடத்தில் கால்பதிக்க நினைக்கிறார் ரஜினி. அவருக்கு அரசியல்கைகூடுமா? அவரின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? ரஜினியின் முதல் அரசியல் அத்தியாயம் எங்கே ஆரம்பித்தது? அதற்கான தொடக்கப்புள்ளி எங்கே விதைக்கப்பட்டது? அத்தனையும் இந்தத் தொடரில் அலசுவோம். அரசியலை ரஜினியோடு முடிச்சுப்போட்டு, முதன்முதலில் பேச ஆரம்பித்தார்களே, அந்த தருணத்தில் இருந்து இன்றைய ராகவேந்திரா தரிசனம்வரை அவ்வளவும் இங்கே இடம்பெறும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்