Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

அ.தி.மு.க-வில் தனி அணியானதா ‘நமது எம்ஜிஆர்’?

திமுகவில் எந்த அணிக்கு உரிமை உள்ளது எனச் சட்டரீதியாக வழக்கு நடந்துவரும்நிலையில், அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்ஜிஆர் நாளிதழ், திடீர்ப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

அதிமுக

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இரு வேறு அணிகளாக எதிரெதிர்த் திசைகளில் பயணித்தாலும், மத்திய பாஜக அரசை ஆதரிப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு நிற்கின்றன. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வருகைதருமாறு பிரதமர் மோடியை இரண்டு அணிகளின் தலைவர்களான - பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் டெல்லிக்குச் சென்று நேரில் சந்தித்து அழைப்புவிடுத்தனர். குறிப்பாக, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் போன்ற சில விவகாரங்களில் எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, மத்திய அரசை ஆதரிக்கிறது, பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு. 

நீட் தேர்வுகூட உயர்கல்வி சார்ந்த ஒரு விவகாரம்; அதனால் நேரடியாகப் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே என்பது ஒரு கருத்து. அதைப்போலத்தான் மாட்டிறைச்சி விவகாரமும் என்கிறார்கள். ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்போ சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களையும் அன்றாடம் நேரடியாகப் பாதிக்கக்கூடியது என்றாலும்கூட, அதிலும் மத்திய அரசுக்கு எதிராக வாய்மூடி மௌனமாகவே இருந்துவருகிறது, எடப்பாடி அரசு. சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில அரசை வறுத்தெடுக்கிறார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட மற்ற எதிர்க்கட்சிகளும் கடுமையாகச் சாடுகின்றன. முதன்மையாக, மாநில உரிமைகளை மத்திய அரசு படிப்படியாக காலிசெய்துவருகிறது; அதற்கு மாநில அரசு சார்பில் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்காவிட்டாலும், சிறிதளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தவில்லை என்பது இக்கட்சிகளின் முக்கியக் குற்றச்சாட்டு.

இவ்வளவுக்குப் பிறகும் ஆளும் கட்சியிடமிருந்தோ ஆட்சிக்குத் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியிடமிருந்தோ பதில் எதுவும் வராதநிலையில், ஜூன் 1ஆம் தேதி ’நமது எம்ஜிஆர்’ நாளேட்டில், மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வெளியான நாளில்தான், டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்குப் பிணை கிடைத்துள்ளது.

தினகரன்

முன்னதாக, அதிமுகவின் சசிகலா அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தினகரன் கைதுசெய்யப்பட்டிருந்தார். அதற்கு முன்னர் நான்கு நாள்களாக டெல்லியில் வைத்து அவர் விசாரிக்கப்பட்டிருந்தார். அதையொட்டி  தினகரனுக்கு மிக நெருக்கமானவரான அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் உள்பட பல இடங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு, அவரிடமும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இப்படித் தினகரன் தரப்பின்மீது கடுமை காட்டியபோதும் அதைப் பற்றிய செய்திகளை, ஜெயா டிவியிலோ நமது எம்ஜிஆர் நாளேட்டிலோ வெளியாகவில்லை. 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சசிகலாவுடன் சிறையிலிருக்கும் இளவரசியின் மகன் விவேக்தான், தற்போது ஜெயா டிவியில் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார். நமது எம்ஜிஆர் நாளேடும் அவர்களின் குடும்பத் தரப்பினரை மீறிப் போகவில்லை. இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியன்று சித்திரகுப்தன் எனும் பெயரில் நமது எம்ஜிஆர் நாளேட்டின் ஆசிரியர் மருது அழகுராஜ், ’மூச்சுமுட்ட பேச்சு, மூன்றாண்டு போச்சு’எனும் தலைப்பில் அரைப் பக்கம் நையாண்டி செய்துள்ளார். ’நாடு கடக்கும் அரசா, மாடு காக்கும் அரசா’ எனத் தொடங்கி, ’எந்திர தந்திர மந்திரத்தை நம்பியே, எகத்தாளத்தில் நடக்குது தாமரையின் வீச்சு’ என முதல் முறையாக, மத்திய பாஜக அரசைப் பற்றி விமர்சனத்தை வைத்துள்ளது, அதிமுக.

இது குறித்து நமது எம்ஜிஆர் நாளேட்டி ஆசிரியர் மருது அழகுராஜிடம் கேட்டதற்கு, “வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்வதற்காக, வருத்தங்கள் இருந்தாலும் மாநில மக்களின் பிரதிநிதியாக மத்திய அரசோடு இணக்கத்தோடு இயைந்துபோய் நடந்துகொள்வது, ஆட்சியின் முடிவு. அதற்கு கட்சி இடையூறாக இருக்காது. அதே சமயம் அத்துமீறி ஏவப்படும் விமர்சனங்களுக்குப் பதிலடி தருவது, கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டின் கடமை. அதைச் செய்திருக்கிறோம்” என அழுத்தமாகச் சொல்கிறார்.

பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் என இரண்டு அணிகள் இருக்க, தினகரன் வெளியே வந்துள்ளநிலையில் நமது எம்ஜிஆர் தனிக் குரலாக ஒலிக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement