வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (02/06/2017)

கடைசி தொடர்பு:18:51 (02/06/2017)

அன்புக்கு இன்னொரு பெயர் அப்துல் ரகுமான்! #RIP

ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது, அந்த இளைஞன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்று தயங்கி வந்து, ‘‘நீங்கள் தமிழ்மகன் சார் தானே?’’ என்றான்.

எனக்கும் போன பிறவியில் பார்த்த மாதிரி புகைபோல நினைவுக்கு வந்தது... ‘‘நீங்..?’’ நீ என்பதா, நீங்கள் என்பதா?

‘‘மேகநாதன் சார்.’’

அப்படி ஒரு பெயரை என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை. அந்தப் பெயரைச் சொன்னால் எனக்கு சட்டென நினைவுவரும் என்ற நம்பிக்கையில் அவர் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டேயிருந்தார்.

‘‘இந்திரஜித் சார்!’’

‘‘அட நீயா?’’

‘‘ஆமா சார். பெயரை மாத்திக்கிட்டேன்.’’

அவன் பெயர் இந்திரஜித். அவனுக்கு மேகநாதன் எனச் செல்லப் பெயர் வைத்தது கவிக்கோ அப்துல் ரகுமான்.

அப்துல் ரகுமான்

 

கலாநிதி மாறன் அனைத்துப் பக்கங்களும் வண்ணத்தில் என்ற அறிவிப்போடு ‘தமிழன்’ நாளிதழ் தொடங்கினார். இது நடந்தது 1991-ம் ஆண்டில்.

அந்த நாளிதழின் இணைப்பிதழாக மூன்று இதழ்கள் உருவாகின. அதற்குச் சிறப்பாசிரியராக அப்துல் ரகுமான் இருந்தார். அந்த மூன்று இதழ்களைக் கவனிக்கும் பொறுப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் சுகுமாரன் ஆகியோரோடு நானும் இருந்தேன். அங்கு அலுவலக உதவியாளராக இருந்தவர்தான் இந்திரஜித்.

சொன்ன வேலையைச் சரியாகச் செய்யாதவர். விளையாட்டுத்தனமானவர். ஒருமுறை அப்துல்ரகுமான், அவரிடம் சிகரெட் வாங்கிவரச் சொன்னார். அவர் சொன்ன பிராண்டுக்குப் பதில் வேறு ஒன்றை வாங்கிவந்தார் இந்திரஜித். அடுத்த முறை சரியாகச் சொல்லி அனுப்பினார். மீண்டும் வேறு ஒரு சிகரெட்டை வாங்கிவந்தார். கலைஞர் வருவதற்குள் ஒரு சிகரெட் பிடித்துவிட்டுத் தயாராகலாம் என்ற பதற்றம் கவிஞருக்கு. உதவியாளரோ, மூன்றாவது முறையும் தவறாக வாங்கிவந்தார். கோபத்தில் கவிஞர், ‘‘அறிவு உனக்குக் குறைவாக இருக்கிறது’’ என்று சொல்லிவிட்டார். முட்டாள் என்று சொல்லவில்லை.

உதவியாளரோ, அவர் திட்டினார் என்பதையே உணர்ந்தார் இல்லை. எங்களுக்கும்தான் தெரியவில்லை. ஆனால், கவிஞர் அன்று வெகுநேரம் யோசனையில் ஆழ்ந்தவராக இருந்தார். அவரை அழைத்து, ‘‘ஒரு தடவை சொன்னா மனசுல உள் வாங்கிக்கணும். அதனால்தான் உன்னைத் திட்டிட்டேன்’’ என்றார். வழக்கமான சிரிப்போடு, ‘‘எப்ப சார்?’’ என்றான் இந்திரஜித். கவிஞருக்கு அப்போதுதான் மனசே லேசானது.

கவிஞர் அப்துல் ரகுமானோடு சுமார் ஆறு மாதங்கள் பழகினேன். பண்பான மனிதர். உலக இலக்கியங்கள் குறித்து நிறைய பேசுவார். கண்ணதாசனோடு தனக்கிருந்த நட்பு, கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய உழைப்பு என நிறைய...

அப்துல் ரகுமான்

கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அதாவது, அவருடைய வார்த்தைகளிலிருந்து அதைக் கண்டுபிடிப்பது கடினம். இரண்டு மூன்று நாள்கள் வரிசையாகத் தாமதமாக வந்தேன். ‘‘சீக்கிரமா வந்தாத்தான் நல்லது’’ என்று மட்டும் சொன்னார். ‘குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி’ அது.

இந்திரஜித், தன் பெயரை மேகநாதன் என மாற்றிக்கொண்டதும் மொழிப்பற்றினால் அல்ல; அவருடைய அன்புக்காகத்தான்!

அப்துல் ரகுமான் கவிதைகள் சிலவற்றை இங்கே நினைவுகூர்வோம்.

தேர்தல்

புறத்திணை சுயம்வர மண்டபத்தில்

போலி நளன்களின் கூட்டம்.

கையில் மாலையுடன்

குருட்டு தமயந்தி.

 

சிலப்பதிகாரம்

பால் நகையாள்

வெண்முத்துப் பல்நகையாள்

கண்ணகியாள் கால் நகையால்

வாய்நகைபோய்க்

கழுத்து நகை இழந்த கதை!

 

காதல்!

நாம்
நிர்வாணமாக இருந்தோம்
ஆடையாகக் கிடைத்தது
காதல்

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்