''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள் | Party Should Release Kalaignar Birthday Function Photo, Party Cadres Urge

வெளியிடப்பட்ட நேரம்: 07:54 (03/06/2017)

கடைசி தொடர்பு:07:54 (03/06/2017)

''தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை வெளியிடணும்!'' - உணர்ச்சி மயமாகும் உடன்பிறப்புகள்

கருணாநிதி 91-வது பிறந்தநாள்

2015-ம் ஆண்டு, ஜூன் 3-ம் தேதி, அதிகாலை 4 மணி. தமது பிறந்தநாளை முன்னிட்டு சி.ஐ.டி காலனி இல்லத்தில், மரக்கன்று ஒன்றை நடுகிறார் அவர். அருகிலிருந்த ராஜாத்தியம்மாள், சிறிய பாட்டிலில் பிடிக்கப்பட்ட  தண்ணீரை அந்த கன்றுக்கு ஊற்றுகிறார். இதைக்கண்டு, ''பாத்துமா... ரொம்ப சிந்திடப்போகுது'' என்று கிண்டல் செய்கின்றனர் குழுமியிருந்த சீனியர் தலைவர்கள். அப்போது, ''தண்ணீர் சிந்தினால் தவறில்லை. கண்ணீர் சிந்தினால்தான் பிரச்னை'' என வெளிப்படுகிறது ஒரு கரகரத்த குரல். அனைவரும் அமைதியாக அடுத்த வார்த்தையை எதிர்பார்த்திருக்க, சில நொடி இடைவெளிக்குப் பிறகு, ''கருணாநிதி வீட்டில் பெண்கள் கண்ணீர் சிந்துகிறார்கள் என்பார்களே'' என்கிறார் குறும்புடன். ஆம், கன நேரத்தில் எந்த இடத்தையும் தன்வயப்படுத்தும் சொல்நயம் கொண்ட அந்தக் குறும்புக்காரரின் பெயர்தான் மு.கருணாநிதி!

 ஜூன் 3-ம் தேதியான இன்றைய தினம் 94-வது வயதில் அடியெடுத்து வைக்கும் மு.கருணாநிதி, தமது சட்டமன்றப் பயணத்திலோ 60-ம் ஆண்டை நிறைவு செய்கிறார். இதையொட்டி தேசிய அளவிலான பெரும் தலைவர்களை அழைத்து வந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வைரவிழாவாகக் கொண்டாடுகிறது தி.மு.க! இது தி.மு.க-வினருக்கு இரட்டைத் திருவிழா மகிழ்ச்சியை அளித்தாலும், மறுபுறம் அவர்கள் முகத்தில் சோக ரேகைகள் இழையோடுவதைப் பார்க்க முடிகிறது. காரணம், 'கருணாநிதியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, பிறந்தநாளன்று, அவரை நேரில் சந்திப்பதை தவிர்ப்பதே அவருக்கு நாம் தரும் பிறந்தநாள் பரிசு' என்று தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்திருப்பதுதான். 

கருணாநிதி

தொண்டர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் :

"கட்சிக்காரங்களுக்கு பொங்கல், தீபாவளி கொண்டாடுறதை விட, தலைவரோட பிறந்தநாளைக் கொண்டாடுறதுதான் உச்சபட்ச மகிழ்ச்சி. ஒரு மாசத்துக்கு முன்னாடியே பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, முத்தமிழ் விழா என்று வீதிதோறும் நடத்த ஆரம்பிச்சிடுவோம். அவர் பிறந்தநாள் அன்னைக்கு காலையில வெளியே வருகிற, அவரைப் பாக்குறதுக்காக முதல்நாள் இரவே, அவர் வீட்டு முன்னாடி திரண்டிடுவோம். வீட்டுல இருந்து தன்னுடைய கைகளை அசைத்தபடி வெளியே வரும் அவரைப் பார்க்கும்போது எங்களுக்கு ஏற்படுற சிலிர்ப்பு அலாதியானது. இப்போ அதை நாங்க மிஸ் பண்றது வருத்தம்தான். ஆனாலும் தலைவரோட உடல்நிலை காரணமான்னு சொல்றதால ஏத்துக்கிறோம். அவர் நல்லாருந்தா அதுவே போதும்" என்கிறார்  சென்னை பாபு.

வழக்கமான பிறந்தநாள் நடைமுறை :

மேற்கு மாவட்டத்திலிருந்து வந்த சட்டக் கல்லூரி மாணவர்  நேரு, "வழக்கமா பிறந்தநாள் அப்போ சி.ஐ.டி காலனியிலுள்ள கனிமொழி வீட்டில்தான் தலைவர் கருணாநிதி தங்குவார். விடியற்காலையிலேயே எழுந்து மரக்கன்று நடுவாரு. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் செய்துட்டு வர்றாரு. பின்பு கோபாலபுரம் வீட்டுக்குச் செல்வார். அங்க செயல் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தோடு வந்து வாழ்த்துவார். பொதுவா எப்போதுமே அவர் பிறந்தநாள் அன்று, அதைக் குறிப்பிடும்படி ஏதாவது வித்தியாசமாகச் செய்வார்கள். அவர் வயதைக் குறிப்பிடும்படி பழம், மலர்கள் வைத்து பசுமை வரவேற்பை இரண்டாண்டுக்கு முந்தைய பிறந்தநாளின்போது செய்திருந்தாங்க. அப்புறம் சீனியர் தலைவர்கள் திரள கேக் வெட்டி கொண்டாடுவார் கருணாநிதி. அதன்பின் மிகச் சீக்கிரமாகவே அண்ணா நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவாரு. அங்கே வண்ண வண்ண உடைகளில் பெண்களும், ஆண்களும் திரண்டு மலர்த் தூவி வரவேற்கும் காட்சி, கலர்புல் கண்காட்சியா இருக்கும். அங்க ஆசிரியர் கி.வீரமணி புத்தகங்களைப் பரிசளிப்பார். இந்த நிகழ்வு முடிந்தபின், கோபாலபுரம் வீட்டுக்குத் திரும்புவார். அங்க குவிந்திருக்கிற, உறவுகளின் வாழ்த்துகளை ஏத்துக்குவாரு. பிறகு சில மணி நேர இடைவெளிக்குப் பிறகு தொண்டர்களைச் சந்திக்க அண்ணா அறிவாலயம் போவாரு. அங்க உடன்பிறப்புகள் வரிசைகட்டி நிற்போம். குணா படத்துல 'பார்த்த விழி' பாட்டு பாடிக்கிட்டு  கமல் போவாரே... அப்படி, மேடையில தலைவரைப் பார்க்க நாங்க பரவசத்தோடு போவோம். சிலர் பரவச உச்சத்தில் காலில் விழுந்து கும்பிட, 'யாரும் கால்ல விழக்கூடாது'ன்னு ஸ்டாலின் சொல்லிக்கிட்டே இருப்பாரு. அறிவாலயம் முன்னாடி இருக்கிற பூங்கா வரைக்குமே வரிசை நிக்கும். பொறுமையா எல்லோரையும் பார்த்துட்டு, வீடு திரும்புவார் தலைவர் கருணாநிதி. மாலை பொதுக்கூட்டம் நடக்கும். அந்தநாளே திருவிழா போல இருக்கும். ஆனால் அவர் உடல்நிலை காரணமா இந்தப் பரவசங்களை இந்த முறை நாங்க தியாகம் செய்றோம். 

தொண்டரின் முக்கியக் கோரிக்கை :

தலைவர் வைர விழா மலரைப் பார்வையிடுகிற வீடியோவை வெளியிட்டாங்க. அதுபோல தலைவர் பிறந்தநாள் கேக் வெட்டுற மாதிரி அல்லது எங்களைப் புன்னகையோடு பாக்குற மாதிரி வீடியோ வெளியிடணும். முடிஞ்சா, அந்த வீடியோவை மாலை நடக்குற வைரவிழாவுல வெளியிடணும். தொலைக்காட்சிகள்ல அப்பப்போ ஒளிபரப்பணும். அறிவாலயத்து பூங்கா வாசல்ல டி.வி வச்சு இதை ஒளிபரப்பணும். அது தலைவரை எதிர்பார்த்து வர்றவங்களுக்கு ஒரு சின்ன சந்தோசமா இருக்கும்" என்றார் ஏக்கத்தோடு.

'டா' போட்டு அழைக்கும் கருணாநிதி :

ரேகா பிரியதர்ஷினி ''நான் 26 வயசுலயே சேலம் மேயரா பொறுப்பேற்றேன். முதன்முதல்ல தலைவரைச் சந்திச்சு வாழ்த்து வாங்க போனபோது, 'என்னம்மா, குழந்தைய மேயராக்கிட்டோமோ' என்று வேடிக்கையா சொன்னாரு. 'சின்ன வயசுல நல்ல பொறுப்புக்கு வந்திருக்க, அதை மறக்காம பணியாற்றணும்' என்றும் வாழ்த்தினார் தலைவர்'' என்கிறார் சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி. தொடர்ந்து பேசும் அவர், ''தலைவரைப் பார்க்க எப்பப் போனாலும் அரசியல் பேசுவதற்கு முன்பாக, 'என்னடா குழந்தை, ஏற்காடு எப்படி இருக்கு?' திருமணிமுத்தாறு எப்படியிருக்கு? அதை மறுபடியும் தூய்மையான நீரோடும் ஆறா மாத்தணும்'ன்னு எங்க சேலத்தைப் பத்தியே பேசுவாரு. மாடர்ன் தியேட்டர்ல பணி புரிந்த அனுபவத்தை உணர்வுபூர்வமா பகிர்வாரு. அத கேட்கும்போது எழுத்து மேல எவ்வளவு உயிர்ப்பா இருக்காருன்னு புரிஞ்சுப்பேன். எத்தனை முறை சந்திச்சாலும் அவர் பிறந்தநாள் அன்னைக்கு அவரைச் சந்திக்கிறதுல கிடைக்கிற சந்தோஷமே தனி.'' என்றார் உணர்வுபூர்வமாக.

போராடுவதே பெண்ணினத்தின் அடையாளம் :

உமாராணி செல்வராஜ் பேசும்போது, "நான் சேலம் எம்.பி தேர்தல்ல தோல்வியைச் சந்திச்சேன். அதன்பிறகு தலைவரைப் போயி பார்த்தேன். 'என்னடா நீ ஜெயிப்பன்னு நினைச்சேன். சரி பரவாயில்ல. இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்தில, பெண்கள் இந்தளவு முன்னேறி வந்ததுக்குப் பெரியார், அண்ணா கொள்கைகள் மட்டுமல்ல, பெண்களோட போராட்டக் குணமும்தான் காரணம். தோல்வியைக் கண்டு துவளாதே... தொடர்ந்து போராடு. அதுதான் பெண்ணினத்தின் அடையாளம்'ன்னு தலையில கைவைத்து ஆசிர்வதிச்சாரு. அவரோட உரையாடுற ஒவ்வொரு கனமும் நமக்கு ஏதோ க்ளுகோஸ் குடிச்ச மாதிரி ஒரு பவர் கிடைக்கும். பிறந்தநாள் அன்னைக்குப் புத்தகங்கள் பரிசளிப்போம். அதுவும் வரிசையில நின்னு தலைவரைச் சந்திக்கிறது தனி ஆனந்தம். இந்தமுறை தலைவரை நேர்ல பார்க்கமுடியாதுன்னாலும் பிறந்தநாள் அன்னைக்கு சென்னையில இருக்கணும்ன்னு கிளம்பி வந்துட்டேன். வைரவிழாவை ஜமாய்க்கணும்" என்றார் உற்சாகமாக.

'10 ரூபாய்' எங்களுக்குச் சொத்து பத்திரம் :

திருநெல்வேலி ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு பேசும்போது, "பொதுவா தலைவர் கருணாநிதியை, அடிக்கடி சந்திக்கிறஉமாராணி வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். பிறந்தநாள் அப்போ சந்திக்கப் போவேன். ஒருமுறை, 'உன்னை அடிக்கடி சந்திக்க முடியும். ஆனா தொண்டர்கள் என்னைப் பாக்க இன்னைக்கு ரொம்பத் தொலைவில் இருந்து வந்திருக்காங்க. அதனால அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். நீ கொஞ்சம் பொறுமையா இரு' என்றார் வேடிக்கையாக. அவரைப் பொறுத்தவரை மூத்த நிர்வாகிகள், சாதாரண தொண்டர்கள் என்ற பேதமில்லை. எல்லோருமே ஒரே தராசில் சமமாக நிறுத்தப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள்தான். எப்போதுமே தைப்பொங்கல் தமிழர் திருநாள் அன்று எல்லோருக்கும் பத்து ரூபாய் சலவை நோட்டு கொடுப்பார். எனக்கு ஒருமுறை அவரோட பிறந்தநாள் அன்னைக்கே கொடுத்தாரு. அதைச் சொத்து பத்திரம் மாதிரி பத்திரமா வச்சிருக்கேன்" என்றார் பரவசத்தோடு.

கருணாநிதியின் எழுத்து, சொல்நயம், அரசியல், என அவரின் பன்முகத்தன்மையின் மீதான பந்தமே தொண்டர்களுக்கும் அவருக்குமான  ஆன்மப் பூர்வ உறவாகும். 'மற்ற நாள்களில் வாய்ப்பு அமையுமோ, இல்லையோ... பிறந்தநாள் அன்று கருணாநிதியைக் கட்டாயம் சந்திக்க முடியும்' என்ற நம்பிக்கை தி.மு.க தொண்டனுக்கு உண்டு. ஆனால், தற்போது அதில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும், அவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுமையாக அதை ஏற்றுக்கொண்டுள்ளனர் அவரின் உடன்பிறப்புகள். 'தமிழக அரசியலில் தந்தைப் பெரியார் ஒரு கருத்தியல் திருப்புமுனை! அந்தக் கருத்தியல் களத்தில், பேரறிஞர் அண்ணா, ஓர் அரசியல் போர்முனை! அந்தப் போர்முனையில் கடந்த 80 ஆண்டுகளாக கருத்தியல் வீச்சுடன் களமாடும் முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு விடியல் வாள்முனை!' என்று கருணாநிதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். வாய் திறந்து பேசாவிடினும் கருணாநிதி எனும் வாள்முனையின் கூர்மை இன்னும் மழுங்கிவிடவில்லை.


டிரெண்டிங் @ விகடன்