வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (03/06/2017)

கடைசி தொடர்பு:14:59 (03/06/2017)

அமெரிக்காவின் குற்றச்சாட்டும்...பேராசிரியர் ஜெயராமன் கைதும்...!

மீத்தேன் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்

செயற்பாட்டாளர்கள், அரசியல் தெரிந்தவர்கள்... சமீபகால அரசின் நடவடிக்கைகளை எமர்ஜென்சியுடன் ஒப்பிடுகிறார்கள். எதிர் கருத்துகளும், உரையாடல்களும்தான் ஜனநாயகத்தில் பலம். அதை, அரசு சிதைக்கப் பார்க்கிறது என்கிறார்கள். அது, உண்மைதான் என்பதுபோல இருக்கின்றன சமீபத்திய கைதுகள். முதலில் மெழுகுவத்தி ஏந்த வந்ததற்காகத் திருமுருகனைக் கைதுசெய்து குண்டாஸில் போட்ட தமிழக அரசு, இப்போது பேராசிரியர் த.ஜெயராமனைக் கைது செய்திருக்கிறது. ஜெயராமன், கதிராமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி குழாய்களால் விபத்துகள் நேர்கின்றன, நிலத்தடிநீர் வளம் குறைந்துவிட்டது. அதனால், இனி புதுக் குழாய்கள் பதிக்கக் கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சாத்வீகமான முறையில் போராடினார். அவர்மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் எல்லாம் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்திருக்கிறது அரசு. 

தொடர் கைதுகள் மூலம் என்ன சொல்ல வருகிறது அரசு...?

திருமுருகன், ஜெயராமன்ஈழம் என்பதையெல்லாம் கடந்து திருமுருகன் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை எதிர்த்து வந்தார். ஜெயராமன்தான் மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். இவர்களைக் கைதுகளின்மூலம் முடக்கி, எந்த எதிர்ப்பும் இல்லாமல் மீத்தேன் திட்டத்தை முன்னெடுக்கலாம் என்று அரசு நினைக்கிறதா...?  இது குடியாட்சி அல்ல... கார்ப்பரேட் ஆட்சி. கார்ப்பரேட் நலன்களை யார் எதிர்த்தாலும், அடக்குமுறை ஏவுவோம் என்பதுதான், அரசு தரும் சமிக்ஞையா...? 

அண்மையில் சந்தித்த  பிரிட்டன் ஊடகவியலாளர் ராப்சன் சொன்னார்,  “உலகம் முழுவதும் செயற்பாட்டாளர்கள்தான் அரசுகளால் குறிவைக்கப்படுகிறார்கள். சீனா... அமெரிக்கா என சித்தாந்தங்கள் வெவ்வேறு கொண்ட தேசங்களாக இருந்தாலும், அவர்களின் பொது எதிரி சூழலியலாளர்கள்தான்” என்று. இதன் பின்னணியில்தான் திருமுருகன், ஜெயராமன் கைதைப் புரிந்துகொள்ள வேண்டும்போல... ஹூம். இந்தக் கைது இன்னொரு குற்றச்சாட்டையும் மெய்யாக்கி இருக்கிறது. அது ட்ரம்பின் குற்றச்சாட்டு.  

அமெரிக்காவின் குற்றச்சாட்டும்...பேராசிரியர் ஜெயராமன் கைதும்...!

இந்தியா தன் படிம எரிபொருள் பயன்பாட்டை 2030-க்குள் குறைத்துக்கொள்ள வேண்டும். அதாவது, நிலக்கரி, கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் நாற்பது சதவிகிதம்வரை குறைத்துக்கொண்டு நீடித்த வளங்குன்றா ஆற்றல் பயன்பாட்டை நோக்கி நகர வேண்டும்  என்கிறது பாரீஸ் ஒப்பந்தம். நேற்று இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, நேரடியாக இந்தியாவைக் குற்றம்சாட்டியது. ட்ரம்ப், “இந்தியாதான் மிகப்பெரிய அளவில்  சூழலை மாசுப்படுத்தி வருகிறது. நிலக்கரிச் சுரங்கங்களை இரட்டிப்பாக்கி வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.   

அவரது குற்றச்சாட்டுகள் உண்மை என்பதுபோலத்தான் இருக்கிறது பேராசிரியர் ஜெயராமனின் கைது. ஆம், ''பாரீஸ் ஒப்பந்தம் என்ன சொல்லியதோ, எந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டதோ, அந்த ஒப்பந்தத்தின்படி நடந்துகொள்ளுங்கள்; வளங்குன்றா ஆற்றலைப் பயன்படுத்துங்கள்; பூமிக்கடியில் ஆயிரம் மீட்டருக்குத் துளையிட்டு வாயுவை எடுத்துச் சூழலியலை மாசாக்காதீர்கள்'' என்றார் ஜெயராமன். இதுகுறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வை உண்டாக்கினார்; போராடினார். இதற்காகத்தான் அரசு, ஜெயரமானைக் கைதுசெய்து பிணையில் வரமுடியாத பிரிவுகளில் எல்லாம் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து இருக்கிறது; ட்ரம்பின் குற்றச்சாட்டையும் மெய்யாக்கி இருக்கிறது தமிழக அரசு.

“அரசுகள்தான் மக்களை அரசியல்படுத்துகிறது!”

ஜி.ஏ.வடிவேலுஎமர்ஜென்சியை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிய, சுதந்திரப் போராட்ட வீரரான ஜி.ஏ. வடிவேலுவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் உரையாடிக்கொண்டிருந்தபோது, மெள்ள எமர்ஜென்சி குறித்த தன் நினைவுகளைத் திரட்டி, எழுபதுகளில் தான் கைதுசெய்யப்பட்ட நிகழ்வை விவரித்தார். அவர் வார்த்தைகளிலேயே, “அப்போது தர்மபுரியில் வசித்த ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி, நான் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தேன். என் போராட்டத்தை ஒடுக்க நினைத்த அரசு என்னைக் கைதுசெய்தது. என் கைதின் மூலம் பிறரையும் அச்சுறுத்தலாம் என்று நினைத்து, என் கைகளில் விலங்கிட்டு வீதிவீதியாக அழைத்துச் சென்றது. ஹூம்... அரசு செய்த பெரும்பிழை அதுதான் என்று நினைக்கிறேன். ஆம், நான் கைதுசெய்யப்பட்டிருப்பதைக் கண்டு மக்கள் அஞ்சுவார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால், மக்கள் அதன்பின்தான் வீரியமாகப் போராடத் தொடங்கினார்கள். அப்போது மட்டுமல்ல... எப்போதும் அரசுகள் அப்படித்தான் இயங்குகின்றன; அடக்குமுறையின்மூலம் மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நம்புகின்றன. ஆனால், கைதின் மூலம், அடக்குமுறையின் மூலம் சாமான்ய மக்களை அரசுகள்தான் அரசியல்படுத்தி வருகின்றன” என்றார்.  எமர்ஜென்சியை எதிர்த்தவர்,  ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் நெருங்கிப் பழகியவர்  சொன்னால் சரியாகத்தானே இருக்கும்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்