வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (03/06/2017)

கடைசி தொடர்பு:18:29 (03/06/2017)

எம்.ஜி.ஆரை சிரிக்க வைத்த கருணாநிதி! #HBDKalaignar94 #வைரவிழா

கருணாநிதி

மிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் அமர்ந்திருந்த பேரவை அது... எம்.ஜி.ஆர். முதல்வராக அமர்ந்திருக்க, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை அடக்க முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறைந்தபாடில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்தார் அவர். "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்று சொன்னதும், அதுவரை அமளியுடன் காணப்பட்ட பேரவை சிரிப்பொலியால் அதிர்ந்தது. தனக்கு எதிரே முதல்வராக இருந்த தனது நண்பர் எம்.ஜி.ஆரையும் சிரிக்க வைத்த அந்த நபர்தான் 'கலைஞர் மு கருணாநிதி'. 

எழுத்தும், பேச்சாற்றலும் கருணாநிதியின் மிகச்சிறந்த முகவரியாகும். ஆனால், இன்று அவரின் உடல்நிலை நலிவுற்றதன் காரணமாக முகவரியைத் துறந்து, கோபாலபுரம் இல்லத்தில் ஒரு குழந்தையைப் போல மெளனமாக அமர்ந்திருக்கிறார். "எங்கள் தலைவர் மெளனமாக இருந்தாலும், அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பதே எங்களுக்கான ஆன்ம பலம்" என்கின்றனர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, கோபாலபுரம் முன் குவிந்த தி.மு.க உடன்பிறப்புகள். ஆம், "தலைவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, தொண்டர்கள் யாரும் நேரில் வரவேண்டாம்" என தி.மு.க தலைமைக்கழகம் உத்தரவிட்டுள்ள போதிலும், அதை அவரகள் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
2017, ஜூன் 3-ம் தேதி அன்று கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி, அவரது வீட்டின் முன் பெருந்திரளானோர் திரண்டனர். கோபாலபுரம் இல்லம் வண்ணமயமாகக் காட்சியளித்தது. 94 வயதை குறிப்பிடும் வகையில், விதவிதமான பழங்களைக் கொண்ட வீட்டின் முகப்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது, பசுமையான உணர்வைக் கொடுத்தது.  

என்றாலும், வீட்டிற்குள் தொண்டர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சீனியர் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் மட்டும் கருணாநிதியைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். "தலைவர் கொஞ்சம் தாமதமாகத்தான் எழுந்தார். இரத்த அழுத்தம் செக்கப் உள்ளிட்ட வழக்கமான பரிசோதனைகளை மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர். அதன்பின் புத்தாடை அணிந்து தலைவர் மாடியில் அமர்ந்ததும், நான்கு, ஐந்து பேராக அவரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, தூரத்தில் நின்றே பார்க்க அனுமதிக்கப்பட்டதால், தொலைவில் இருந்தே வணக்கம் தெரிவித்தோம். செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வந்து தலைவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார். பின் தயாளு அம்மாளும் புத்தாடை அணிந்து தலைவர் அருகில் அமர்ந்தார். பின் உறவினர்கள் திரள கேக் வெட்டப்பட்டது. செல்வி அக்கா கேக் வெட்டி, தலைவருக்கு கொஞ்சமாக ஊட்டி விட்டார். அடுக்குமொழி, குறும்பு நிறைந்த வழக்கமான எங்கள் தலைவரை இந்தமுறை பார்க்க முடியாமல் போனது, வருத்தமாகத்தான் உள்ளது. ஆனாலும் அவர் நலமோடு இருக்கிறார் என்பதை நேரில் அறிந்து கொண்டதே எங்களுக்கு சந்தோஷம்தான். விரைவில் அவர் குணமடைந்து நல்ல நிலைக்குத் திரும்புவார் என்ற எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றார் வீட்டிற்குள் சென்றுவந்த தென்மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முக்கிய நிர்வாகி.

இனிப்பு வழங்கும் உடன்பிறப்புகள்

வெளியே திரண்டிருந்த தி.மு.க தொண்டர்களோ, கருணாநிதியின் பாடல்களைப் பாடியும், வசனங்களைப் பேசியும் பிறந்தநாளை கொண்டாடியவண்ணம் இருந்தனர். சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் வீட்டின் முன்பு கூடியிருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். திருநெல்வேலி மாவட்டத்தினரோ, தங்கள் மாவட்டத்தின் ஸ்பெஷலான 'அல்வாவை' அனைவருக்கும் விநியோகித்து மகிழ்ந்தனர். "தலைவர் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, பிறந்தநாள் கொண்டாட்டங்களில், பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை. மேள, தாளம் முழக்கங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும், "கோபாலபுரத்தில் உள்ள எங்கள் கட்சித் தலைவரின் வீட்டுமண்ணை மிதித்ததே எங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறோம்" என்றார் நந்தகுமார் என்ற தொண்டர். மேலும் அவர், "விகடன் இணையதளத்தில தலைவர் கேக் வெட்டுற வீடியோவை வெளியிடணும்னு தொண்டர்கள் குரலை காலையில பதிவு செஞ்சிருந்தீங்க. இப்போ, தலைவர் கேக் வெட்டுகிற வீடியோவை செயல் தலைவர் வெளியிட்டிருக்காரு. இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோசமான விஷயம்." என்றார் உணர்வுப்பூர்வமாக. 

கோபாலபுரத்திற்கு வருகைதந்த கட்சியினருக்கு காலை மற்றும் மதிய உணவு அருகில் உள்ள வீட்டில் பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடித்த தி.மு.க-வினர் அனைவரும் நேரடியாக கருணாநிதியின் சட்டமன்றப் பணி வைரவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தை நோக்கிப் புறப்பட்டனர்...

நேரில் வர முடியாத பலர் சமூக வலைதளங்களில் தி.மு.க. தலைவருக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். லக்ஷ்மிகருணாநிதியின் பிறந்தநாள் ஹேஷ்டேக் இன்று உலகளவில் 7-வது இடத்திலும், இந்தியளவில் 3-வது இடத்திலும், தமிழ்நாட்டில் முதலிடத்திலும் ட்ரெண்ட் ஆகி, தி.மு.க-வினரை குஷிப்படுத்தியுள்ளது. தலைவரின் பிறந்தநாளில் இதுபோன்ற நிகழ்வானது, "தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள, ஏன் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களின் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது" என்கின்றனர் உடன்பிறப்புகள். முகநூலில், கருணாநிதி குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒருபதிவு என்று நள்ளிரவு 12 மணியிலிருந்து  பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார் மதுரை ஆசிரியை லக்ஷ்மி. அவரிடம் பேசினோம்.

"நான் எந்த அரசியல் கட்சியையும் சேராதவள். தனிப்பட்ட முறையில் எனக்கு கலைஞர் கருணாநிதியைப் பிடிக்கும். அவர் எழுத்துக்களை படித்து, ரசித்துதான், நான் எழுதக் கற்றுக்கொண்டேன். அவருடைய தமிழ்ப்பற்று மீது எனக்கு அளவுகடந்த வெறி உண்டு. அவர் கவிதைகளில் உயிர் இருக்கும். அவர் பேச்சு என்றால் எனக்கு கொள்ளை பிரியம். இப்போது உடல்நிலை சரியில்லாமல், நினைவாற்றல் குறைந்து காணப்படுகிறார். ஆனால் 93 வயது வரை அவரின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பது அவரின் 'சென்ஸ் ஆப் ஹியூமர்'. டைமிங்கில் அவர் அடிக்கும் ஜோக்கிலும் கூட பல ஆழமானக் கருத்துக்கள் இருக்கும்." என்றார் உற்சாகம் குறையாமல்.

ஒரு திருவிழாவைப் போலவே கருணாநிதியின்  பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர் அவரின் அபிமானிகள்.


டிரெண்டிங் @ விகடன்