வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (05/06/2017)

கடைசி தொடர்பு:19:13 (05/06/2017)

ஜருகுமலையை மீட்டெடுக்க உதவும் விதைப்பந்து தூவல்! ஆர்வலர்களின் செயல்திட்டம்

நாம் இழந்த காடுகளை, மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் விதைப்பந்துகளின் பங்களிப்பு முக்கியமானது. 

விதைப்பந்துகளை

உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் விதமாக சேலம் ஏவிஸ் மற்றும் சக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள்; சூழலியலாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர், பத்தாயிரம் விதைப்பந்துகளை சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜருகுமலையில் தூவி விட்டு வந்துள்ளனர். இந்நிகழ்வு பற்றி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து பேசினோம்:

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஜூன் ஐந்தாம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரையும் ஒன்றினைத்து சேலத்தில் உள்ள ஜருகுமலையில் பத்தாயிரம் விதைப்பந்து தூவ முடிவு செய்தோம். விதைப்பந்துகளின் சிறப்புகள் பயன்கள் பற்றி ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். பின்பு நாமும் இயற்கையை காக்க இதுபோன்ற முயற்சி செய்து பார்ப்போம் என்ற யோசனையின் அடிப்படையில் விதைப்பந்துகளை உருவாக்க முடிவு செய்து உள்ளோம்.தென் மேற்கு பருவமழை தற்போது தொடங்க உள்ள நிலையில், இதைச் செய்வது இன்னமும் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது.

உருவாக்கிய விதைப்பந்துகளை தூவ சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. தன்னார்வலர்கள் ஏராளமானோர் தாங்களாகவே முன்வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதற்கும் புவி வெப்பமாவதற்கும் காரணம் காடுகளை அளித்ததன் விளைவே ஆகும். இந்த நிலை எதிர்காலத்தில் தொடருமானால் நாம் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்கவும், இயற்கையை காக்கவும் எடுத்து வரும் முயற்சிகளில் விதைப்பந்து தூவும் நிகழ்வும் ஒன்று ஆகும். 

விதை

விதைப்பந்து என்பது மண், கால்நடைகளின் சாணம், நாட்டு விதை ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை ஆகும். வேம்பு, மழை வேம்பு, புங்கம், அத்தி, புளியம் விதைகள் என ஒரு லட்சம் நாட்டு விதைகளைக் கொண்டு பத்தாயிரம் விதைப்பந்துகளை பள்ளி மாணவர்களை கொண்டு உருவாக்கினோம். இந்த வகையான நாட்டு விதைகள் இயல்பாகவே நம்முடைய மலைப்பகுதியில் இங்கு நிலவும் காலநிலைகளை தாங்கி வாழ்பவை ஆகும். இதனால்தான் நாங்கள் விதைப்பந்துகளை உருவாக்கும்போதே நாட்டு விதைகளை தேர்ந்தெடுத்தோம். நாம் இழந்த காடுகளின் பசுமையை மீண்டும் உருவாக்க சரியானவழி விதைப்பந்துகளை காடுகளில் தூவுவதே ஆகும். விதைப்பந்து மூலம் தூவிய  விதைகள்  எலி எறும்பு போன்ற உயிரினங்களால் எளிதில் பாதிக்கப்படாது. எனவே நாம் தூவி விதைபந்தானது மழை பொழிந்து ஈரப்பதம் ஏற்பட்டு விதைகள் முளைக்கும்வரை பாதுகாப்பாக இருக்கும். விதைகள் துளிர்விட்ட பின்பும் நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதுபோன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தும்போது இயற்கை சுற்றுச்சூழல் மீது தானாகவே ஈர்ப்பு வந்துவிடும். இதனால் எதிர்காலத்தில் இயற்கைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும். நிறைய மாணவர்கள் இந்த நிகழ்வின் மூலம் காடுகளையும் அங்கு நிலவும் சூழ்நிலைகளையும் அறிந்து கொண்டு உள்ளனர். 

 ஜருகுமலை கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை அடர்த்தியாக வளர்ந்து பசுமையாக  காணப்பட்ட ஏராளமான மரங்கள் தற்போது இல்லை பருவமழை பொழியாதது வறட்சி போன்ற காரணங்களால் ஏராளமான மரங்களை ஜருகுமலை இழந்து விட்டது. இழந்த பசுமையை மீட்கவும், சுற்றுச்சூழலையும், இயற்கையையும் காக்க எங்களால் ஆன முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பே பத்தாயிரம் விதைப்பந்துகள் என இரண்டு முறை இருபதாயிரம் விதைப்பந்துகளை தூவி உள்ளோம். தற்போதுவரை முப்பதாயிரம் விதைப்பந்துகளை தூவி உள்ளோம் என்றனர்.

சுற்றுச்சூழல்

விதைப்பந்துகளை உற்சாகமாக தூவி கொண்டு இருந்த சிறுவர்களிடம் பேசியபோது:

‘முதல்முறையாக விதைப்பந்துகள் என்பது என்ன, அதனுடைய பயன்கள் என்ன? என்பது பற்றியெல்லாம்  எங்களுடைய ஆசிரியர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். தெரிந்துகொண்ட உடனே எங்களுக்கும் விதைப்பந்துகளை செய்து காடுகளில் தூவ வேண்டும் என்ற ஆசை வந்தது. பள்ளிகளிலும் ஏராளமான விதைப்பந்துகளை செய்தோம். நாங்கள் செய்த பந்துகளை காடுகளில் இன்று தூவி உள்ளோம்' என்றனர் மகிழ்ச்சியோடு.

நம்பிக்கையோடு இவர்கள் தூவி உள்ள பத்தாயிரம் விதைப்பந்துகள், வளர்ந்து பசுமையான காடுகளாக உருவான ஜருகுமலை நாளை கட்டாயம் சொல்லும் இவர்களின் உழைப்பையும் நம்பிக்கையையும் என்றும் உறுதியாக நாம் நம்புவோம்.

- லோ.பிரபுகுமார், க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிகையாளர்கள்)