வெளியிடப்பட்ட நேரம்: 08:44 (06/06/2017)

கடைசி தொடர்பு:08:43 (06/06/2017)

டெல்டா மாவட்டங்களில் சென்ற ஆண்டைவிட 90% நெல் உற்பத்தி குறைவு... யார் காரணம்? #MustRead

நெல்  டெல்டா


காவிரி டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டு சம்பா பருவ நெல் உற்பத்தி 90 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால், 1500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தனது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன், திருவாரூர் மாவட்டத்தில் 5 லட்சம் மெட்ரிக் டன், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3.16 லட்சம் மெட்ரிக் டன் நெல்   கொள்முதல் செய்தது. மொத்தம் 12 லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதலானது. ஆனால் இந்த ஆண்டு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 991 மெட்ரிக் டன் அளவே நெல் கொள்முதல் ஆகியுள்ளது.

கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய காவிரி நீரை தர மறுத்ததாலும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை பெய்யாததாலும் வரலாறு  காணாத வறட்சி ஏற்பட்டது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள், சம்பா நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாத நெருக்கடி நிலைக்கு ஆளானார்கள். நாற்று உற்பத்திசெய்வதற்குக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், மழையை நம்பி நேரடி நெல் விதைப்புசெய்தார்கள். மழை இல்லாததால், விதைநெல்லும் கருகிப்போனது.

இந்த அவலநிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பலர், தங்களது வயல்களை தரிசாகவே போட்டுவிட்டனர்.  காவிரி டெல்டா மாவட்டங்களில், 10 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஏக்கருக்கு குறைந்தபட்சம் 2 டன் வீதம் 20 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு, வறட்சியின் காரணமாக சுமார் 3 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி நடைபெற்றது. இதிலிருந்து 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்திசெய்யப்பட்டு, கொள்முதல் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி கொள்முதல்  நிலையங்களில், 2 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் குறைவான நெல்லே கொள்முதல் ஆகியுள்ளது. அரசியல் குளறுபடிகளின் காரணமாக, தமிழக அரசு சம்பா நெல் கொள்முதலில் கொஞ்சம்கூட கவனம் செலுத்தவில்லை. வறட்சியின் காரணமாக நெல் சாகுபடிப் பரப்பு பெருமளவு குறைந்திருந்தாலும்கூட, போர்வெல் மூலம் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது என கணக்கெடு த்து அதற்கேற்ப போதியளவு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திருக்க வேண்டும். ஆனால் இதை தமிழக அரசு கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. நெல் கொள்முதல் தொடர்பாக திட்டமிட, ஆண்டுதோறும் வேளாண் அமைச்சர், உணவுத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறைகளின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நடைபெறவில்லை. 

இதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. மிகவும் சிரமப்பட்டு போர்வெல் தண்ணீர்மூலம் நெல் சாகுபடிசெய்த விவசாயிகள், தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனைசெய்து, பல நாள்கள் கழித்துதான் அதற்குரிய பணத்தைப் பெற்றார்கள். நெல் கொள்முதல் நிலையங்கள் சற்று கூடுதலாகத் திறக்கப்பட்டிருந்தால், நெல் கொள்முதல் அளவு இன்னும் கூடியிருக்கும் என்கிறார்கள் விவசாயிகள். இது ஒருபுறமிருந்தாலும் நெல் உற்பத்தி 90 சதவீதம் குறைந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போர்வெல் வைத்திருக்கும் விவசாயிகள்கூட முழுமையாக நெல் சாகுபடியை மேற்கொள்ளவில்லை. மின்வெட்டு காரணமாகவும் நிலத்தடிநீர் வறண்டுபோனதாலும் இவர்களில் பலர் சம்பா நெல் சாகுபடியை மேற்கொள்ளவில்லை.

நெல் காவிரி டெல்டா

நெல்லுக்கு லாபகரமான விலை கிடைக்காததாலும் போர்வெல் விவசாயிகளில் ஒரு பகுதியினர் நெல் சாகுபடியை கைவிட்டார்கள். ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,570 ரூபாய்தான் கொள்முதல் விலையாக அரசு வழங்குகிறது.  கூடுதல் விலை கிடைத்து, ஓரளவுக்காவது லாபம் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தால், டீசல் மோட்டாருக்கு செலவுசெய்தாவது நெல் சாகுபடியை மேற்கொள்வார்கள். குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் 2,250 ரூபாய் கொள்முதல் விலை கிடைத்தால், ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள். 90 சதவிகிதம் நெல் சாகுபடி குறைந்ததால், 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து அதிக அளவு நெல், தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும். 

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகத்துக்காகத்தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த ஆண்டு பற்றாக்குறையைப் போக்க, இந்திய உணவுக் கழகம் தனக்குத் தேவையான நெல்லை, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப், அரியானா, கர்நாடகா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யும். இந்த மாநிலங்களில் அதிகளவில் நெல் உற்பத்தி நடைபெறுகிறது. வறட்சியினால் தமிழ்நாட்டில் நெல் குறைந்ததால், மற்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் பலன் அடைவார்கள். காவிரி டெல்டா விவசாயிகளுக்கோ இது பேரிழப்பு. ஒவ்வொரு விவசாயியும் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள்.

திரையரங்கில், தனது சாதனைகளை காணொளிமூலம் மக்களிடம் கொண்டுசெல்கிறது தமிழக அரசு. அதில் ஒரு வீடியோவில், “நெல் தட்டுப்பாட்டை மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதிசெய்து சரிக்கட்டிவிட்டோம்” எனச் சொல்லும் காலம் விரைவில் வரும். அப்போதும், அதிகார வர்க்கத்துக்கு என்ன தவறு செய்திருக்கிறோம் என்பது மட்டும் புரியவே போவதில்லை. 


டிரெண்டிங் @ விகடன்