மண்ணின் மைந்தன் GSLV மார்க் III... தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்! #GSLVMK3

னது கிரீடத்தில் மற்றுமொரு வைரத்தை சேர்த்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ. இதுவரை செலுத்திய செயற்கைகோள்களிலேயே அதிக எடை கொண்டதான ஜி.சாட் 19 செயற்கைகோளை, GSLV மார்க் III ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. இந்த சாதனை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே...

GSLV மார்க் III

1. PSLV மற்றும் GSLV மார்க் II-விற்கு அடுத்து இந்தியா பயன்படுத்தவிருக்கும் மூன்றாவது ராக்கெட் இந்த GSLV மார்க் III. இதற்கு முன்பு பி.எஸ்.எல்.வி பற்றி பார்ப்போம். SLV, ASLV ஆகியவற்றிற்கு அடுத்த மூன்றாம் தலைமுறை ராக்கெட்தான் PSLV. இந்தியா முதன்முதலில் திரவ எரிபொருளைப் பயன்படுத்தி ஏவிய ராக்கெட்டும் இதுதான். 

2. 1994 முதல் 2017-ம் ஆண்டு வரை பி.எஸ்.எல்.வி 46 இந்திய செயற்கை கோள்களையும், 180 வெளிநாட்டு செயற்கை கோள்களையும் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. சந்திரயான் 1 , மங்கள்யான் போன்றவை அதில் குறிப்பிடத்தகுந்தவை.

3. PSLV தவிர்த்து இஸ்ரோ பயன்படுத்தி வந்த மற்றொரு ராக்கெட் GSLV மார்க் II. நான்காம் தலைமுறை ராக்கெட். 2014-ம் ஆண்டு முதல், PSLV போலவே இதுவும் இஸ்ரோவுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டாக அமைந்து வருகிறது. இதுவரை நான்குமுறை இஸ்ரோவிற்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. 

4. GSLV மார்க் II ராக்கெட்டிற்கு அடுத்த தலைமுறைதான் இந்த GSLV மார்க் III ராக்கெட் (GSLV MK III). மார்க் II ராக்கெட்டால் 2200 கி.கிராம் எடை வரையிலான செயற்கைகோள்களை மட்டுமே சுமந்து செல்ல முடியும். ஆனால் GSLV மார்க் III ராக்கெட்டால் 4000 கி.கிராம் எடையுள்ள செயற்கைகோள்கள் வரை சுமந்து செல்ல முடியும்.  இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு. 

5. அதன்படி இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த GSLV MK III ராக்கெட், ஜிசாட் 19 செயற்கை கோளை சுமந்துசென்று அதன் GTO சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது. இந்த ஜிசாட் 19 செயற்கை கோளானது இந்தியாவின் தகவல் தொடர்புக்கு பயன்படும் ஜியோஸ்டேஷனரி கம்யூனிகேஷன் சாட்டிலைட் ஆகும். 

GSLV MK III

6. ஜியோசாட் 19-தான் இந்தியா இதுவரை விண்ணிற்கு அனுப்பிய செயற்கைகோள்களிலேயே அதிக எடை கொண்டது. இதன் எடை 3136 கிலோகிராம். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். GSLV MK III ராக்கெட்டின் மொத்த உயரம் 43.43 மீட்டர். மொத்த எடை 640 டன். சுமார் 200 ஆசிய யானைகளின் எடைக்கு சமமானது இது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது.

7. GSLV மார்க் MK ராக்கெட் / ஜியோசாட் செயற்கைகோள் ஆனது 19 இன்று 5.28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான  கவுண்டவுன் நேற்று பிற்பகல் 3.58 மணிக்கு துவங்கியது.

8. GSLV MK III ராக்கெட் வெற்றியடைந்துள்ளதால், இந்தியா இனிமேல் அதிக எடைகொண்ட செயற்கை கோள்களை ஏவுவதற்காக ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதனால் இஸ்ரோவிற்கான செலவும் குறைந்துவிடும். 

GSLV mark III D1 rocket

9. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்திற்கான செயற்கை கோள்கள் வெளிநாடுகளில் இருந்தே ஏவப்பட்டது. ஆனால் இனிமேல் இந்தியாவே அவற்றை விண்ணில் செலுத்தலாம். இதற்கு முன்பு 3,404 கி.கிராம் எடை கொண்ட ஜிசாட் 18 செயற்கைகோளை ஏரியன் ராக்கெட்டுகள் மூலம், ஃபிரெஞ்ச் கயானாவில் இருந்து செலுத்தியது இஸ்ரோ. ஆனால் இனி GSLV MK III இருப்பதால், அந்த தேவை ஏற்படாது. 

10. 2014-ம் ஆண்டே GSLV MK III வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. தகவல்தொடர்பு மட்டுமின்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கும் இந்த GSLV MK III ராக்கெட் பயன்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுசெய்யும் திட்டத்திற்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!