வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (06/06/2017)

கடைசி தொடர்பு:16:31 (06/06/2017)

திருமாவளவனுக்கு தி.மு.க மீது என்னதான் கோபம்?

தேசிய தலைவர்கள்

தினகரன் ஜாமீனில் விடுவிப்பு, அ.தி.மு.க என்ற கட்சிக்குள் ஆயிரம் புகைச்சல்கள், பி.ஜே.பி-யின் அரசியல் கணக்கு என தமிழக அரசியல் நீறுபூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருந்தாலும், தமிழகத்தின் தற்போதைய ஹாட் தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா வைபவம்தான். இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட தேசிய அளவிலான தலைவர்கள் பலரும் பங்கேற்றுப் பேசினர். ஆனால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களில் சிலர் பங்கேற்கவில்லை. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ,தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இருவரும் தொடர்ந்து கருணாநிதியை விமர்சித்து வருபவர்கள் என்பதால், அவர்கள் நிகிழ்ச்சியில் பங்கேற்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே . 

ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதில், இரா.முத்தரசனும் ஜி.ராமகிருஷ்ணனும் பங்கேற்றனர். ஆனால், தொல்.திருமாவளவன் பங்கேற்கவில்லை. இந்த நிலையில்  வைரவிழா நிகழ்வு குறித்து தொல்.திருமாவளவன் அதிருப்தி தரும் வகையிலான கருத்துகளை வெளியிட்டுள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ஐ.ஐ.டி மாணவர் சூரஜை தொல் .திருமாவளவன் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தி.மு.க  தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டப்பேரவை வைரவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தேசியத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து மதச் சார்பின்மை கருத்துகளை வலியுறுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. 

விழா நடத்தியவர்களுக்கு அகில இந்திய அளவிலான அரசியல் பார்வை

இருப்பினும், தமிழகத் தலைவர்களை அழைத்துக் குறிப்பாகக் கருணாநிதியுடன் சமகாலத்தில் அவரை எதிர்த்தோ, ஆதரித்தோ அரசியல் செய்தவர்களைப் பேச வைத்திருந்தால், அவர் குறித்த நிறைய விஷயங்களை அவர்கள் பேசியிருப்பார்கள். அதன்மூலம் நாமும் அவரைப்பற்றிக்  கூடுதலாக அறிந்திருக்க முடியும்.அந்த அடிப்படையில் மேடையில் பேச வைக்காதது ஏமாற்றமே'' என்றார் . அவருடைய இந்தப் பேச்சு  தமிழக அரசியல் களத்தில் உற்றுநோக்கப்படுவதோடு விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. திருமாவளவன்  ஏன் விமர்சித்துள்ளார். அவருக்கு தி.மு.க மீது ஏதேனும் கோபம் இருக்கிறதா  என அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். 

திருமாவளவன்

இது தொடர்பாகத் தொல்.திருமாவளவனிடம் பேசினோம். " தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு வந்தது. தமிழகத்  தலைவராக ஒரு பார்வையாளராக மட்டுமே அழைத்திருந்தனர். 'தேசிய அளவில் தலைவர்களை அழைக்கிறோம். எனவே, பார்வையாளராகத் தமிழகத் தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், எனக்குக் காஞ்சிபுரம்  மாவட்டத்தில் வேறு ஒரு  நிகழ்ச்சி இருந்த காரணத்தால் வைரவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதனால் வருத்தமோ கோபமோ எதுவுமே இதில் இல்லை. தமிழகத் தலைவர்களை அழைத்துப்  பேசச் சொல்லியிருந்தால், கருணாநிதியின் 60 ஆண்டுகாலச் சட்டப்பேரவை பணிகள் குறித்து விரிவாகப் பேசியிருப்பார்கள். ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், நான் உள்ளிட்ட பலரும் அவருடன் பணியாற்றியவர்கள் என்பதால் இதனைச் சொல்கிறேன். ஆனால், அப்படி நடந்திருந்தால் நேரமும் அதிகமாக ஆகியிருக்கும். அவ்வாறு நிகழ்வில் பங்கேற்றிருந்தால் முதலமைச்சராக இருந்தபோது அவர் செயல்படுத்திய திட்டங்கள், சட்டமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் போன்றவற்றை விரிவாகப் பேசியிருக்கலாம். குறிப்பாக அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் போன்றவை  மிகவும் புரட்சிகரமானவை. சாதி மத பாகுபாடு இன்றி ஒரே ஊரில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்கிறவகையில் அந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அப்படியான ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தவர் அவர் மட்டுமே. பெரியாரின் சிந்தனைகளைத் திட்டங்களாகப் பிரதிபலிக்கச் செய்தவர். இப்படி அவருடைய செயல்பாடுகளை நினைவுகூர்ந்து பேசியிருந்தால் வைரவிழா என்ற அந்தத் தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்திருக்கும். அதனை நான் குறையாகச் சொல்லவில்லை. நன்றாக இருந்திருக்கும் என்று மட்டுமே சொல்கிறேன். விழா நடத்தியவர்களுக்கு அகில இந்திய அளவிலான அரசியல் பார்வை. அதனால் அதனை குறை சொல்லவில்லை" என்றார். 

''திருமாவளவனுக்கு வருத்தம் இருக்கலாம்!''

திருமாவளவனின் இந்த அதிருப்தி குறித்து தி.மு.க-வின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் பேசினோம். ''மாநிலத் தலைவர்கள் எங்களுடைய தலைவரைப் புகழ்ந்துபேசுவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். இந்த மாநிலத்தின் அடிப்படையில்தான் எங்களுடைய தலைவருக்கு அகில இந்திய அளவில் பெருமை கிடைத்தது. அதனால் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டிப் பேசுவது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சிதான். குறுகிய நேரத்தில் தேசியத் தலைவர்கள் பேசிவிட்டுப் போகவேண்டிய நிலை இருந்தது. இதுபோன்ற நிகழ்வுக்கு நேரத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. அப்படிக் கட்டமைக்காமல்போனால், 'தலைவர்கள் நேரம் ஆகிவிட்டது' என்று கிளம்பிவிட்டால், செய்திகள் வேறுமாதிரி வரும் எனக் கூடுதல் கவனம் செலுத்தினோம். மாநில அளவிலான தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றால், நாங்களும் விழா நடத்தத் தயாராகத்தான் உள்ளோம்'' என்றவரிடம், "திருமாவளவனுக்குத் தி.மு.க மீது கோபம் உள்ளதா" என்ற கேள்வியை முன்வைத்தோம்.

கே. பி ராமலிங்கம்''திருமாவளவனுக்குக் கோபம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால், வருத்தம் உள்ளது என்பதை அவருடைய கருத்துகள் வாயிலாக உணர முடிகிறது. அவர் அதற்கு வருத்தப்படத் தேவையில்லை. தலைவர் கலைஞரோ அல்லது தி.மு.க-வோ, திருமாவளவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை எந்தக் காலத்திலும் குறைத்துக்கொண்டதில்லை. அவருக்குரிய முக்கியத்துவம் தி.மு.க-வில் எந்தக் காலத்திலும் இருக்கும். தலைவர் கலைஞரும் அவரை மரியாதையோடுதான் நடத்தியிருக்கிறார். அவரும் எங்களுடைய தேர்தல் நேரத்தில் வெற்றிக்காகவும், மக்களுக்கான பிரச்னைகளைக் கையில் எடுத்துப் போராடியபோதும் ஆதரவோடுதான் இருந்திருக்கிறார். அதனால், அவர் இதில் வருத்தப்படத் தேவையில்லை. அவ்வாறு அவர் வருத்தப்படும் அளவில் நாங்கள் நடந்துகொண்டிருந்தால் திருத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்றார். 

இருதரப்பிலும் இருந்து அவர்களுடைய வாதங்களை நியாயப்படுத்திக்கொண்டாலும் அது உண்மையில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ''கடந்த காலங்களில் திருமாவளவன் தி.மு.க-வுக்கு அதிருப்தி தரும் வகையில்தான் நடந்துகொண்டார்.விவசாயிகள் பிரச்னை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமாக இருந்தாலும் சரி,மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து செயல்பட்ட போதும் சரி அவருடைய நிலைப்பாடு மாறுபட்டு இருந்தது.அதேபோன்று சசிகலாவைச் சந்தித்தது எனச் சிலவற்றில் தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துவந்துள்ளார். கடந்தகால நிலைப்பாட்டைவைத்து தி.மு.க ஒதுக்கப் பார்க்கிறதோ என்ற அதிருப்தி திருமாவளவனுக்கு இருக்கலாம்.அதேநேரத்தில், கருணாநிதி அவருக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஸ்டாலின் கொடுக்கவில்லை. மேலும்,வைரவிழாவுக்குச் சரியான முறையில் அழைக்கப்படாதது எனப் பல விஷயங்கள் சேர்ந்துதான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளது'' என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறுகின்றனர்.

எது எப்படியோ துன்பமாக இருந்தாலும் இன்பமாக இருந்தாலும் வெளியே வராமல் போகாது என்பது அவர்களின் கருத்து.


டிரெண்டிங் @ விகடன்