வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (06/06/2017)

கடைசி தொடர்பு:19:34 (06/06/2017)

"நான் ராஜீவ் காந்தி மகன் வந்திருக்கேன்!" - கருணாநிதியிடம் நெகிழ்ந்த ராகுல்!

ராகுல்காந்தி

பொதுவாகத் தலைவர்களைப்போலவே அவர்களின் மகன்களும் நெருக்கமாக இருப்பார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா காந்தியுடன் கருணாநிதிக்கு இருந்த சகோதரத்துவம், அவர்களின் மகன்களான ராகுல் காந்திக்கும், ஸ்டாலினுக்கும் இடையே இருந்ததில்லை. அவர்களுக்கிடையே பகையுமில்லை, உறவுமில்லை என்பதான அணுகுமுறையே காணப்பட்டன. ஆனால், இவையனைத்தும் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்கு முந்தைய காட்சிகளே. வைரவிழா கொண்டாட்டத்திலோ ராகுலும், ஸ்டாலினும் காட்டிய நட்பின் நெருக்கம் 'ஹாய் ரமேஷ், ஹாய் சுரேஷ்' என 'முஸ்தபா முஸ்தபா' பாடுமளவுக்குத் தீவிரமாக இருந்தது. ஸ்டாலின் என்றில்லை, ஒட்டுமொத்த தி.மு.க-வினரிடமும் ராகுல் காட்டிய நெருக்கம், அதிலும் குறிப்பாகப் பேராசிரியர் க.அன்பழகன் பேசும்போது தொண்டை கரகரப்பில் இரும, உடனே அருகிலிருந்த ராகுல், தண்ணீர் எடுத்துக்கொடுத்து உபசரிக்கும் அன்பு என இவை அனைத்தும் ராகுலைப் புதுத் தோற்றத்தில் வெளிக்காட்டியது. எப்படி ஏற்பட்டது இந்த மாற்றம்? கருணாநிதி முதல்வராக இருந்த முந்தைய ஆட்சியின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போது அரசியல் சுற்றுலாவாகத் தமிழ்நாடு வந்தார் ராகுல். அப்போது முதல்வர் என்ற மரியாதை நிமித்தமாகக்கூடக் கருணாநிதியைச் சந்திக்கவில்லை ராகுல். அப்போது இது அரசியல் சர்ச்சையாக எழுந்தது. தி.மு.க-வினரிடமும் கடுமையான வேதனை வெளிப்பட்டது. ஆனால், இன்றோ ஸ்டாலின் வீட்டில் பொங்கல் சாப்பிடுகிறார், கருணாநிதியைக் கட்டியணைக்கிறார்.

எப்படி ஏற்பட்டது இந்த அன்னியோன்யம்? 

"சமீபத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தபோது, ஸ்டாலின் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் சட்டை பாக்கெட் கிழிந்த சம்பவங்களையும் பார்த்தோம். 'இது, சட்டமன்றத்தில் ஜனநாயகப் படுகொலை' என்று டெல்லியில், கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஜனாதிபதியைச் சந்தித்துப் புகார் அளித்தார் ஸ்டாலின். புகார் கொடுத்துவிட்டு சோனியா காந்தி உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க அவரது இல்லத்துக்குச் சென்றார். இந்தச் சந்திப்புக்காகத் தமது மகன் ராகுலை அழைத்திருந்தார் சோனியா. அப்போதுதான் ஸ்டாலின் - ராகுலுக்கு இடையிலான இடைவெளி குறைந்து நெருக்கம் தொடங்கியது" என்று சொல்லும் தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், அதுகுறித்து விரிவாக விளக்கத் தொடங்கினர். "தமிழக அரசியல் சூழல், மத்திய அரசு நிர்வாகம் குறித்தெல்லாம் பேச்சுகள் பயணித்தது. ஸ்டாலின் முன்னிலையில், கருணாநிதியின் சாதனைகள் குறித்து சோனியா விளக்கினார். இளைஞர் அணிச் செயலாளராக ஸ்டாலின் கடந்துவந்த பயணத்தையும் மகனுக்கு விளக்கினார் சோனியா. இப்படியான கலந்துரையாடலுக்குப் பிறகு, அங்கிருந்த புத்தக நிலையத்தை ஸ்டாலின் பார்வையிட்டார். புத்தகங்கள் குறித்து விளக்கினார் ராகுல். இதில், இருவருக்குமிடையிலான இடைவெளி குறைந்தது. இதைக் குறைத்ததில் சோனியாவின் பங்கு முதன்மையானதாகும். அந்தச் சந்திப்பில் ஸ்டாலினுக்காக ஸ்பெஷலாக இனிப்புகள் செய்துகொடுத்தார் ராகுல். அதன்பிறகு, ஸ்டாலின் - ராகுல் நட்பு அவ்வப்போது தொலைபேசியில் உரையாடும் அளவுக்கு வளர்ந்தது. தலைவர் கருணாநிதி வைரவிழா அழைப்பிதழை ராகுலிடம் கொடுத்தபோது, 'நான் அவசியம் கலந்துகொள்கிறேன். அது எனக்கான பாக்யம்' என்று தனது அன்னை சோனியாவிடம் பகிர்ந்துள்ளார், ராகுல். டெல்லியில் தொடங்கிய தோழமையின் தொடக்கம், வைரவிழாவில் இருவருக்குமிடையே கூடுதல் பிணைப்பானது" என்றனர் விரிவாக. 

குழந்தைகளுடன் ராகுல்காந்தி

''பொங்கல் எப்படிச் செய்வது?'' - ராகுல் ஆர்வம் 

''வைரவிழாவுக்கு ராகுல் கிளம்பும்போதே, அவரை தமது வீட்டுக்கு வர அழைப்புக் கொடுத்திருந்தார் ஸ்டாலின். 'என்ன ட்ரீட் கொடுக்கப் போறீங்க' என்று ராகுல் கேட்க, 'தமிழர் ஸ்பெஷல் ட்ரீட் உண்டு' என்றார் ஸ்டாலின். 'எனக்கு வடை, பொங்கல் சாப்பிட விருப்பம்' என ராகுல் கேட்க, அத்தனை இனிப்பு வகைகளையும் சமைத்து அசத்திவிட்டனர் ஸ்டாலின் குடும்பத்தினர். ராகுல், ஸ்டாலின் வீட்டுக்கு வந்ததும், வீட்டிலுள்ள குட்டீஸ்கள் திரள வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் வடை, பாயாசம், சர்க்கரைப் பொங்கல் என்று விருந்தோம்பலில் சிறப்புச் செய்தனர் ஸ்டாலின் குடும்பத்தினர். 'எப்படியிருக்கு தமிழர் ஸ்பெஷல்' என்று ஸ்டாலின் கேட்க, 'தமிழ் என்றாலே ஸ்பெஷல்தானே' என டைமிங்காக ரிப்ளை செய்தார் ராகுல். சர்க்கரைப் பொங்கலில் முந்திரி கலக்கப்பட்டதைச் சுவைத்து, 'டேஸ்டியா இருக்கு. இதை எப்படிச் செய்வது' என்று குடும்பப் பெண்களிடம் ஜோவியலாக விசாரித்தார் ராகுல். பிறகு, குட்டீஸ்களுடன் இணைந்து விளையாடிக்கொண்டு, பாட்டுப் பாடிக்கொண்டு என்று அவரிருந்த 35 நிமிடங்களும் கலகலப்பாகக் கழிந்தது'' என்று வெயில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர் நம்மிடம் பகிர்ந்தார். 

ராகுலின் தமிழ்ப் பாசம்  

''ராகுலுக்கு ஏற்பட்ட மனமாற்றத்துக்குத் தி.மு.க தரப்பிலிருந்து வந்த நெருக்கமான அணுகுமுறை மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசரின் கருத்துப் பரிமாற்றங்களும் ஒரு காரணம்" என்கின்றனர் கதர்சட்டையினர். தொடர்ந்து பேசிய அவர்கள், "தேசிய அரசியலில் கருணாநிதியின் முக்கியப் பங்கு குறித்தும், தேசிய அரசியலில் திராவிட அரசியலின் தாக்கம் குறித்தும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறினார். 'தனிப்பெரும்பான்மையுடன் மோடி ஆட்சி செய்கிறார், அகில இந்திய அளவில் பி.ஜே.பி-க்கு கருணாநிதியை சந்தித்த ராகுல் எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறோம். இதற்கு தமிழ்நாட்டில் தி.மு.க-வின் பங்களிப்பு அவசியம்' என்றும் வலியுறுத்தினார் திருநாவுக்கரசர். இப்படியான தொடர் முயற்சிகளுக்குப் பிறகே அணுக்கமான சூழல் ஏற்பட்டது. வைரவிழாவில், 'எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேடையில் இருக்கும் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் எல்லாம் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்திருக்கிறோம் என்று ராகுலின் பேச்சுக்குப் பின்னால் உள்ள தமிழ்ப் பாசத்துக்குத் திருநாவுக்கரசுவின் முயற்சிகளும் காரணம்'' என்றனர்.

ஹீ இஸ் லெஜண்ட்...

''வைரவிழாவுக்கு அடுத்தநாள், கருணாநிதியைக் காண அவரின் கோபாலபுரம் இல்லத்துக்கு நேரடியாகச் சென்றார் ராகுல். கருணாநிதியைச் சந்தித்தபோது, 'நான் ராஜீவ் காந்தி மகன் வந்திருக்கேன்' என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் ராகுல். மெல்லிய புன்னகை, கருணாநிதியின் இதழ்களில் இழையோடியது. ராகுல், கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். பின்னர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். அங்கு வீட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கருணாநிதியின் படங்களை ஸ்டாலின் காட்டி, விளக்கினார். ஆர்வமோடு அதைப் பார்த்தார் ராகுல். கருணாநிதியின் எழுதிய புத்தகங்கள் குறித்தும் ஸ்டாலின் விளக்கினார். 'ஹீ இஸ் லெஜண்ட்' எனப் புருவம் உயர்த்தினார் ராகுல்'' என்கின்றனர் அவருடன் பயணித்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள்

.ராகுல் மற்றும் ஸ்டாலின் இருவருக்குமே தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயமுள்ளது. பிரதமர் கனவில் இருக்கும் ராகுலுக்கும், முதல்வர் கனவில் இருக்கும் ஸ்டாலினுக்கும் முன்னுள்ள முதன்மைச் சவால் - மோடி. தங்கள் சவாலை வெல்ல, சூழல் இருவரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்தத் தோழமைப் பயணத்தின் நீள,அகலத்தைக்  காலமே தீர்மானிக்கும். 


டிரெண்டிங் @ விகடன்