வெளியிடப்பட்ட நேரம்: 09:49 (07/06/2017)

கடைசி தொடர்பு:09:49 (07/06/2017)

ரஜினி அரசியல் அறியத் துவங்கிய தருணம்! இவர் வழி... தனி வழி...?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 2

ரஜினி தொடர்

1980-களில் ஆக்‌ஷன் படங்களில் வேரூன்றி இருந்தார் ரஜினி. 'பில்லா', 'முரட்டுக் காளை', 'தில்லுமுல்லு', 'மூன்று முகம்', 'பாயும் புலி', 'அடுத்த வாரிசு', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'மிஸ்டர் பாரத்', 'வேலைக்காரன்' என அடுத்தடுத்து படங்கள் ஹிட்டடித்துக் கொண்டிருந்தன. ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற உச்சத்தைநோக்கிப் போய்க் கொண்டிருந்தார் ரஜினி. கிட்டத்தட்ட அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தை எம்.ஜி.ஆர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ரஜினியிடமிருந்து அரசியல் ரியாக்‌ஷன் வெளிப்படவே இல்லை.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்-தான். அரிதாரம் பூசியவர்கள்கூட அரியணையில் அமரலாம் என்கிற பார்முலாவைப் பார்த்துதான் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் என்.டி.ராமராவ், பின்னர் அரசியலில் குதித்து ஆட்சியில் அமர்ந்தார். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஜெயலலிதாவுக்கும் ‘அரசியல் காய்ச்சல்’ தொற்றிக்கொள்ள... அ.தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அ.தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளர், ராஜ்யசபா எம்.பி என அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இப்படியான அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தன் மொத்தக் கவனத்தையும் கோலிவுட்டில்தான் செலுத்தினார் ரஜினி. கோட்டைப்பக்கம் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள், அப்போதும் இப்போதுபோலவே அரசியலுக்கு வரச்சொல்லி ரஜினியை இழுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், ரஜினிக்கு அப்போது பெரிய அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை. எல்லா அரசியல்வாதிகளிடமும் நட்போடு இருந்தார். அவருடைய அரசியல் என்பது வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஓட்டுப்போடும் சராசரி மனிதரைப் போலத்தான் ரஜினி அன்றைக்கு இருந்தார்.

ரஜினி


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆனார் அவரது மனைவி வி.என். ஜானகி. இவரும் சினிமாவிலிருந்து வந்தவர்தான். எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்தன. அதனால் ஜானகி அம்மாள் அமைச்சரவை ஒரு மாதம்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை கூடியபோது, வரலாறுகாணாத வன்முறை வெடித்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சியும் ஒரு வருடத்துக்குள் கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே பிளவுபட்ட அ.தி.மு.க. ஒன்றானது. பின்னர் 1991-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வென்று, முதன்முறையாக ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். கோடம்பாக்கத்திலிருந்து கோட்டையைப் பிடித்த மூன்றாவது முதல்வர் ஆனார் ஜெயலலிதா. 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த அந்தக்கணத்திலிருந்து அரசியலை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார் ரஜினி. அதற்குக்காரணமே, ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் ரஜினிக்கோ அல்லது தமிழக சூழலுக்கோ பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் ஜெயலலிதாவால் தமிழகத்தின் அரசியல் தலைகீழானது.

1991-1996-ம் ஆண்டுவரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்கள். சர்வாதிகாரப் போக்குடன் நடந்த அந்த ஆட்சியின்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தடபுடலாக நடந்த வளர்ப்பு மகன் திருமணம், வக்கீல்கள் விஜயன், சண்முகசுந்தரம்மீது தாக்குதல், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கடி, ஊழல்கள், சசிகலா குடும்பத்தினர் சொத்துக்குவிப்பு, நில அபகரிப்புகள், நீதிபதி உறவினர்மீது கஞ்சா வழக்கு, தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தங்கியிருந்த ஓட்டல்மீது தாக்குதல் என நிறைய அடாவடிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.ஓட்டுப்போட்ட சாமான்யன் இதையெல்லாம் பார்த்து கொதித்துக் கொண்டிருந்தபோது, ரஜினியும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ‘அரசியல்’ அறிய ஆரம்பித்தார்.

உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தைக் கொட்டித்தீர்த்து,வெடித்துவிட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினி....

இந்த தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

 

-தொடரும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்