அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தின் பின்னணி!

துணைவேந்தர்

ண்ணா பல்கலைக்கழகத்துக்கு இன்னும் துணைவேந்தர்  நியமிக்கப்படவில்லை. துணைவேந்தரைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழு ஆளுநருக்கு மூன்று பேரை பரிந்துரை செய்திருந்தது.

அனுபவம் மிக்க பேராசிரியர்  

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் எல்.கருணாமூர்த்தி என்பவரும் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஒருவர். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் இருக்கிறார். 1985 ஆம் ஆண்டில் இருந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இவர், துணைவேந்தர் ஆவதற்கு எல்லாத் தகுதிகளையும் கொண்டிருக்கிறார் என்று அண்ணாகருணாமூர்த்தி பல்கலைக்கழக வட்டாரத்தில் சொல்கின்றனர். எனினும் இவரை ஆளுநர் தேர்வு செய்யவில்லை.
இதேபோல கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எபினேசர் ஜெயக்குமார். இவரும் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியானவர்தான் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். அதேபோல சென்னை ஐஐடி பேராசிரியர் எஸ் மோகன் என்பவரும் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பம் செய்திருந்தார். இவரையும் தேர்வுக் குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இவரையும் ஆளுநர் தேர்வு செய்யவில்லை.

ஆளுநர் அதிருப்தி  

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்குழு பரிந்துரை செய்த 3 பேரிடமும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்டர்வியூ செய்தார். அவர்கள் மூவருமே துணைவேந்தராக தகுதி வாய்ந்தவர்கள் அல்ல என்பது அவருக்குத் தெரிய வந்ததாம். இதனால் ஆளுநர் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
மூன்று பேரில் யாரையுமே ஆளுநர் ஏற்காதது குறித்து கல்வியாளர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.  இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம். " துணைவேந்தர் பதவிக்காக 80 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் தகுதி வாய்ந்த 3 பேரை தேர்வுக் குழு பரிந்துரை செய்திருந்தது. மூன்று பேருமே துணைவேந்தருக்குத் தகுதியானவர்கள்தான். அதிலும் கருணாமூர்த்தி 1985 ஆம் ஆண்டு முதல் எங்கள் பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றி வருகிறார். எல்லா வகையிலும் தகுதியானவர்.  ஆனால், தகுதியானவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று தெரியவில்லை. சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் துரைசாமியை, கேரளாவில் ஆளுநர் சதாசிவம் பரிந்துரை செய்ததாகக் கூறுகின்றனர். அவர், மேற்கு மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதாலேயே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரை துணைவேந்தராக நியமிக்கச் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். கல்வித் தகுதி என்பதையெல்லாம் தாண்டி துணைவேந்தர் தேர்வில் ஜாதி மேலாதிக்கம் செலுத்தியிருக்கிறது" என்றார் வேதனையுடன்.

தலைமைப் பண்பு தேவை

துணைவேந்தர் நியமனத்தில் தகுதி என்பதைவிட ஜாதி, பணம் ஆகியவை முக்கிய பங்கு வகிப்பதாக கல்வியாளர் ஒருவர் நம்மிடம் வேதனையுடன் கூறினார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான அனந்தகிருஷ்ணனிடம் பேசினோம். "அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்ட மூன்று பேரையும் ஆளுநர் நிராகரித்திருக்கிறார். அவர்கள் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவதற்கு அதையும் தாண்டி சில தகுதிகள் தேவை. தலைமைப் பொறுப்புக்குத் தகுதி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் தெரிந்த ஒருவராக இருக்கவேண்டும். இந்த மூவரிடமும் தலைமைப் பண்பு இல்லை என்றும், இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் தெரிந்தவர்களாக அவர்கள் இல்லை என்றும் ஆளுநர் நினைத்ததாகச் சொல்கிறார்கள். இனிமேலும் தாமதப்படுத்தாமல் விரைவில் தகுதி வாய்ந்த துணைவேந்தர் ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நியமிக்க வேண்டும்" என்றார்.
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு 4 மாதத்துக்குள் புதிய துணைவேந்தரை நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!