வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (07/06/2017)

கடைசி தொடர்பு:19:30 (07/06/2017)

"உயிரைக் கைல பிடிச்சுட்டு இருக்கோம்..!" - தவிக்கும் 'டாஸ்மாக்' லாரி டிரைவர்கள்

டாஸ்மாக்ன் நாட்டு மக்களை குடிகாரர்களாக ஆக்க, அவர்களது வாழ்க்கையைச் சீர்குலைக்க, எந்தவொரு அரசும் இத்தனை பிரயத்தனங்களை எடுக்காது. ‘குடி’யால் கணவரை இழந்து பெண்கள் தவிப்பதை எந்தவொரு அரசும் விரும்பாது. நாட்டின் எதிர்கால நம்பிக்கைகளான இளைஞர்கள், குடிப்பழக்கத்தால் குட்டிச்சுவராவதை எந்த அரசும் ஏற்றுக்கொள்ளாது. பள்ளிச் சிறுவர்கள்கூட குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பதை எந்தவொரு அரசும் துளியும் சகித்துக்கொள்ளாது. ஆனால், தமிழக அரசு அதற்கு முற்றிலும் விதிவிலக்காகத் திகழ்கிறது. இங்கு அரசுக்கு டாஸ்மாக் மூலமான வருமானமே இலக்கு!

"டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது" என்று கணக்குப்பார்க்கவும், அடுத்த ஆண்டுக்கான இலக்கை அதிகமாக நிர்ணயிக்கவும் தெரிந்த நம் அரசாங்கத்துக்கு டாஸ்மாக்கால் ஏற்படும் பிரச்னைகள், தீமைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லைபோலும்.  உச்சநீதிமன்ற உத்தரவால், நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்டு, தற்போது மூடப்பட்ட கடைகளை வேறு எங்காவது திறந்துவிட வேண்டும் என்று அரசு அதிகாரிகள் துடியாய்த் துடிக்கிறார்கள். "எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம்" என்ற மனுவோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பெண்களிடமோ... கொளுத்தும் வெயிலிலும் வேலைவெட்டியெல்லாம் விட்டுவிட்டு, வீதியில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களிடமோ... பேசிப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் வலி என்னவென்று தெரியும். வேதனை என்னவென்று புரியும். அதுசரி, இங்கு அடித்து விரட்டுவதற்குத்தானே ஆட்கள் இருக்கிறது!

டாஸ்மாக்கால், குடிப்பவர்களின் குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. டாஸ்மாக்கில் வேலைசெய்பவர்களின் நிலைமையும் பரிதாபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கோயம்புத்தூரில் தெற்கு, வடக்கு என்று இருக்கும் இரண்டு டாஸ்மாக் குடோன்களும் இப்போது ஹவுஸ்புல் ஆகிவிட்டது. மதுபாட்டில்களை வைக்க இடமில்லாததால், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஹவுஸிங்போர்டு பகுதியில் சாலையோரத்தில் ‘சரக்குகளோடு’ லாரிகளை  நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் அறிந்து அங்கு சென்றோம்.

கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட லாரிகள், மதுபாட்டில்கள் அடங்கிய பெட்டிகளோடு வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தன. வெளியில் தெரியாதபடி துணிகளால் போர்த்தப்பட்டிருந்தாலும், உள்ளே மதுபாட்டில்கள்தான் உள்ளன என்பது, அந்த ஏரியாவாசிகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.  "டிரைவர்கள் யாரும் பார்த்து விடக்கூடாது" என்று அவசர அவசரமாக  படமெடுத்துக் கொண்டிருந்த நம்மை ஒரு லாரியின் இடுக்கிலிருந்து வெளிவந்த டிரைவர் வளைத்துப் பிடித்துவிட்டார்.

 

டாஸ்மாக் வாகனங்கள்

"எதுக்குப் படமெடுக்கிறீங்க; என்ன விஷயம்?" என்று கேட்டார். "இந்த லாரிகள் எல்லாம் டாஸ்மாக் குடோனுக்கு வந்த லாரிகள்தானே? அந்த லாரிகளை ஏன் இங்கே நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்டோம். 
அருகில், டிரைவர்கள் குழுமியிருந்த இடத்துக்கு நம்மை அழைத்துச் சென்று குறைகளை கொட்டத்தொடங்கினர்.

“கோர்ட் உத்தரவால நெடுஞ்சாலைகளில் இருந்த முக்கால்வாசி டாஸ்மாக் கடைகளை மூடிட்டாங்க சார். ஆனால், அரசு அதிகாரிங்களோ டாஸ்மாக்  கொள்முதலை கொஞ்சம்கூட குறைக்கவே இல்லை. பத்துப் பதினைஞ்சு கடைகள்ல வித்த சரக்கு, இப்போ ரெண்டே கடைகள்ல வித்துருது.  ஆனால், பத்து பதினைந்து கடைகள்லயும் 'ஸ்டாக்' வைக்கிற அளவு மதுபாட்டில்களை இரண்டு கடைகளில் எப்படி வைக்கமுடியும்.?  கடைகளில் போதிய இடமில்லை. குடோன்லயும் இடமில்லை. அதனால ரெண்டுமாசமா சரக்கோட இங்க லாரிங்க நின்னுகிட்டுதான் இருக்கு. ஏதாவது ஒரு கடையில் பாட்டில்கள் தீர்ந்துடுச்சுன்னு, தகவல் வந்ததும்,  அங்குபோய் இறக்கிட்டு மறுபடியும் ஏத்துறதுக்கு கம்பெனிகளுக்குப் போயிடணும். அதுவரைக்கும் இப்படி சாலையோரமா நிறுத்தி வச்சுக்கச் சொல்லிட்டாங்க. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல இடங்களிலும் மக்கள் தீவிரமா போராடிக்கிட்டு இருக்கிற இந்த சூழல்ல, எங்க பார்த்தாலும் கடைகளை அடிச்சு உடைச்சுக்கிட்டு இருக்கிறாங்க. 

ஆனா, அதிகாரிகளோ, 'லாரிய நீ எங்க வேணும்னாலும் நிறுத்தி வச்சுக்கோ. நாங்கள் அழைக்கும்போது கொண்டுவா'-ன்னு சொல்றாங்க. நாங்க எப்படி இவ்வளவு விலை மதிப்புடைய மதுபாட்டில்களையும் சாலையில லாரிய நிப்பாட்டி எப்படிப் பாதுகாக்க முடியும், சொல்லுங்க.?" என்று அங்கலாய்க்கிறார்கள் டிரைவர்கள்.

டாஸ்மாக்

இன்னொரு டிரைவர் கூறுகையில், “சார்.. இங்க லோக்கல்ல உள்ள எல்லோருக்குமே இது, டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்துள்ள லாரிங்கனு நல்லாத் தெரியும். ராத்திரி நேரத்துல பலபேர் லாரியின் பக்கவாட்டுல கையைவிட்டு. மது பாட்டில்கள திருடுறாங்க. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான பாட்டில்கள் இப்படி திருடு போயிடுச்சு. அவற்றுக்கு நாங்கதான் தெண்டம் கட்டணும். அதுக்கு பயந்துக்கிட்டே இப்பல்லாம் நாங்க யாரும் ராத்திரியில தூங்குறதே இல்லை. தூக்கமே போச்சு. பாத்ரூம் போகவோ, குளிக்கவோ முடியலை. அவ்வளவு சிரமத்தோட லாரிகள்ல உள்ள மதுபாட்டில்களைப் பாதுகாத்துக்கிட்டு இருக்கோம். அதுபோன்று பாட்டில்கள திருடுறவங்க ரெண்டுபேரை ஒருநாள் ராத்திரி புடிச்சுட்டோம்... ஆனா, அவங்க கொஞ்சம்கூட கூச்சமே இல்லாம, 'டேய்.. ரோட்டுல சரக்கோட லாரியை நிறுத்தி வச்சுக்கிட்டு எங்களை மிரட்டுறீங்களா.? இங்க நிக்கிறது சரக்கு லாரிங்கன்னு ஊர் மக்களை கூட்டிகிட்டு வந்தேன்னு வச்சுக்கோ, லாரிகள கொளுத்தி விட்ருவாங்க'ன்னு மிரட்டுறாங்க. நாங்க என்ன பண்ண முடியும்? இந்தப்பக்கம் அதிகாரிங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு ஆகணும். அந்தப்பக்கம் மக்கள் எதிர்ப்பை பயன்படுத்தி, லாரியில இருந்து பாட்டில்கள  திருடுறாங்க. எங்களுக்கு வயித்துப்பொழப்பு சார் இது.." என்றார். அவரது குரலில் சோகம் இழையோடியது.

'என்ன பொழப்பு இது?' என்றபடி தொடர்ந்து பேசிய அவர், "டிரைவிங்தான் நமக்குத் தொழில். சாராயம் ஏத்துறது இல்லை. இது இல்லைன்னா இன்னொன்னு. ஒவ்வொருமுறை சரக்குலோடு ஏத்திகிட்டு போகும்போதும் எனக்கு பயங்கர குற்ற உணர்ச்சியாவே இருக்கும். எவன் குடும்பத்தையோ கெடுக்கற மதுபாட்டில்களைத்தானே, எமன் மாதிரி ஏத்திக்கிட்டு அந்த வண்டிய ஓட்டிகிட்டு போறோம்னு தோணும். மனசெல்லாம் மறத்துப்போச்சு தம்பி. மக்களின் வாழ்க்கையைப் பறிக்கும் இந்த டாஸ்மாக்கை மூடிட்டு வேறவேல கொடுத்தாங்கன்னா நிம்மதியா செய்வோம்" என்றவரின் கண்களில் ஒரு தெளிவைக் காண முடிந்தது.


டிரெண்டிங் @ விகடன்