வெளியிடப்பட்ட நேரம்: 22:25 (08/06/2017)

கடைசி தொடர்பு:22:25 (08/06/2017)

விவசாயிகள் போராட்டம்... மத்திய பிரதேச துப்பாக்கிச் சூடு சொல்வதென்ன?

விவசாயிகள் போராட்டம்

விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேச மாநில விவசாயிகள்,கடந்த 2 -ம் தேதியில் இருந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மான்ட்சர்  மாவட்டத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், காட்டுமிராண்டித்தனமாகப் போலீஸார் நடத்திய தூப்பாக்கிச்சூட்டில் 5 விவசாயிகள் உயிரிழந்தனர். மத்திய பிரதேச அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகளின் இந்தப் படுகொலையைக் கண்டித்து மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன. அப்போது விவசாயிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பெசாரிகால் பகுதியில் உள்ள போலீஸாரின் சோதனைச்சாவடிகளையும், வாகனங்களையும் தீவைத்துக் கொளுத்தினர். அதேபோன்று, உஜ்ஜைனியில் நடந்த போராட்டத்தில் 5 போலீஸாரும், 3 விவசாயிகளும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த குடும்பங்களைச் சந்திக்கச் சென்ற அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து போலீஸார் அங்கிருந்து அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்தத் துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய பிரதேச போராட்டக் களத்தில் உள்ளவர்களிடம் பேசிய சுதேசி அந்தோலன் அமைப்பைச் சேர்ந்த பிஜுவிடம் பேசியபோது, "விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை, கடன் தள்ளுபடி போன்றவற்றை வலியுறுத்தி கடந்த 5 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில், எந்த விதிமுறையும் இன்றி விவசாயிகள் மீது போலீஸார் லத்தி சார்ஜ் நடத்தினர். அதன்பின்னர், கடந்த 6-ஆம் தேதியன்று மான்ட்சர் என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் பேரணி தொடங்கியது. பேரணியைத் தடுத்து நிறுத்தி போலீஸார் சாலையை மறித்து நின்றனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் வெடித்தது.அந்த மோதலில் 5 விவசாயிகளை சுட்டுக் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ராஷ்டிரிய கிஷான் மஸ்தூர் சங்கத்தைச் சேர்ந்த சிவக்குமார் ஷர்மா மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதில், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். திட்டமிட்டே அரசு  தாக்குதல் நடத்தியதாகத் தெரிய வந்துள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்கள் கொலைகாரர்களாக மாறினார்கள் என்பதே உண்மை. இந்தப் படுபாதகச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மத்திய பிரதேச முதலமைச்சர் பதவி விலக வேண்டும். விவசாயிகளைக் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய போலீஸாரையும் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் ஓயாது'' என்றார். 

 அய்யாகண்ணுஇதுதொடர்பாகப் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர்  அய்யாகண்ணு, ''விவசாயிகளை இந்த அரசு அடிமையாகப் பார்க்கிறது.அடிமைகள் போராடினால் அவர்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. விவசாயிகளைக் கொலைசெய்துள்ள மத்திய பிரதேச அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும்வரை எங்களுடைய போராட்டம் ஓயாது. மேலும், மத்திய பிரதேச அரசின் இந்த அராஜகத்தைக் கண்டித்து அகில இந்திய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதற்கான அறிவிப்பை வரும் 16-ஆம் தேதி தெரிவிக்க உள்ளோம்'' என்றார்.

மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடி அமைச்சர்களுடன்  ஆலோசனை நடத்தினார். அதில் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் கலந்தகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றதாகவும் சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்துக்குத் துணை ராணுவப் படைகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆனாலும், தொடர்ந்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான் அரசுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

வன்முறை நடந்த பகுதிக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். ஆனால், அவரைப் போலீஸார் அந்தப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர். 

ராகுல்காந்தி

வறட்சி காரணமாக 2016-இல் மட்டும் மத்திய பிரதேசத்தில் 1,600 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 2011 - 2015-ஆம் ஆண்டுகளில் மட்டும்  6,076 பேர்  உயிரிழந்துள்ளதாகத் தேசியக் குற்றப் பிரிவு ஆவணக் காப்பம் தெரிவிக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்