ஏரியின் முடிவும்... தி.நகரின் தொடக்கமும்! அங்காடி தெருவின் கதை - பகுதி 2

அங்காடி தெருவின் கதை

2015-ம் ஆண்டு சென்னையில் பெய்த மழை மறக்கூடிய ஒன்றல்ல. சென்னையில் அப்படி ஒரு மழை இதற்கு முன் எப்போதும் பெய்ததில்லை. ஹெலிகாப்டரில், விமானத்திலிருந்து அன்றைக்கு ஏரியல் வியூவில் பார்த்தவர்களுக்கு சென்னை நகரைப் பார்த்தவர்களுக்கு, சென்னை ஒரு பெரிய ஏரிபோல தோற்றம் அளித்தது.

ஏரியைத் தூர்த்து உருவான நகர்

வேதனையின் உச்சத்தில் கண்ணில் திரண்ட கண்ணீர் மழையோடு, மழையாக கரைந்து போன நிலையில், வீட்டுக்குள் எஞ்சிய பொருட்களுடன் படகுகளில் பயணித்த அனுபவங்களைச் சென்னை வாசிகள் அவ்வளவு தூரம் மறக்க மாட்டார்கள். சரி அது ஒரு புறம் இருக்கட்டும். இன்றைக்கு ஏரிகள் ஆக்கிரமிக்கப்படுவது பற்றி பசுமை ஆர்வலர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால், 1920-ம் ஆண்டு ஒரு பெரிய ஏரியைத் தூர்த்துத்தான் தி.நகர் உருவாக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? நம்பினாலும், நம்பா விட்டாலும் அதுதான் உண்மை. பழைய தடத்தைத் தேடித்தான் அடையாறு ஆறு கோட்டூர்புரம், நந்தனம், சைதாபேட்டை, அசோக்நகர், மேற்கு மாம்பலம், தி.நகர் பகுதிகளில் 2015- டிசம்பரில் பயணித்தது. இயற்கையை ஏமாற்ற முடியாது என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். லாங் டேங்க் ஏரி நகரமாக்கப்பட்டது போலத்தான் இன்றைக்கு சென்னைப் புறநகரிலுள்ள ஏரிகளும் நகரமயமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் புலம்பலை தற்காலிகமாக நிறுத்திவிட்டு வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கலாம்.

1911-ம் ஆண்டு சென்னை எழும்பூர் முதல் காஞ்சிபுரம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் ரயில்கள் இயங்கத் தொடங்கியதும், நகரை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மாம்பலம் என்ற கிராமமும் அதைச் சார்ந்த பகுதிகளிலும் நூறு ஆண்டுகள் கழித்து ஒரு பிரமாண்டமான நகராக உருவாவதின் தொடக்கமாக இந்த ரயில் பாதை இருந்தது. காஞ்சிபுரத்திலிருந்து  நெசவாளர்கள் துணி மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு மாம்பலம், மயிலாப்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

ஏரியை மூட திட்டம்

நாளுக்கு நாள் சென்னை நகரை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஜார்ஜ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் ஜனநெருக்கடி அதிகரித்ததால் அந்தக் காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், 1923-ம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த நீதிகட்சி சார்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. அரசின் டவுண் பிளானிங் டிரஸ்ட் என்ற அமைப்பு இதற்கான திட்டங்களைத் தீட்டியது. இதற்காக மாம்பலம் கிராமத்தை ஒட்டி இருந்த LONG TANK ஏரி மற்றும் ஏரியை ஒட்டி இருந்த பகுதிகள் என மொத்தம் 1600 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அப்போது இந்த LONG TANK  அடையாறு ஆற்றில் தொடங்கி, லயோலா கல்லூரி வரை 6 கி.மீ தொலைவுக்குப்(கீழே உள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) பரந்து விரிந்திருந்தது. அப்போதைய வரலாற்றுக் குறிப்புப் படி  செங்கல்பட்டு மாவட்டத்தில் சைதாப்பேட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் ஏரி இருந்திருக்கிறது. இன்னொரு ஆச்சர்யமான சுவாரஸ்யமான தகவலும் உண்டு. LONG TANK ஏரியில் மெட்ராஸ் போட் கிளப் சார்பில் படகு சாகச நிகழ்வுகள் (sailing and rowing )நடைபெற்றன. மெட்ராஸ் போட் கிளப் அமைப்பின் இணையதளத்தில், 19-ம் நூற்றாண்டின் இறுதியில், லாங்க் டேங்க் ஏரியில் படகு சாகச  நிகழ்ச்சிகள் நடைபெற்றதாகக் கூறப்பட்டிருக்கிறது. போட்கிளப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள, கிளப்பின் வரலாறு குறித்த  புத்தகத்திலும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சென்னை தி.நகர்

தண்ணீர் ததும்பும் ஏரி

"1893-ம் ஆண்டு நல்ல மழை பெய்திருந்ததால், LONG TANK ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இதனால், அந்த ஏரியில் கதீட்ரல் கார்னரில் இருந்து சைதாபேட்டை வரை படகுப்போட்டி நடைபெற்றது. ஏரியில் பயணிப்பது எப்போதுமே சுகமான அனுபவம். ஆனால், ஒரே ஒரு வருத்தம் என்னெவென்றால், மாலை நேரங்களில் சூரிய ஒளியின் கதிர்கள் தண்ணீரில் பட்டு நம் முகத்தில் எதிரொலிக்கும் போது கண்கள் கூசும். இதை மட்டும் பொறுத்துக்கொண்டால், இந்த ஏரி படகு பயணம் என்பது அற்புதமானது. அதே போல 1903-ம் ஆண்டு சென்னையில் பெய்த பெரும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, LONG TANK  ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. ஏரியில் இருக்கும் தண்ணீர் மற்றும் அடையாறு ஆற்றில் ஓடும் தண்ணீர் கண்ணாடி போல் தெளிவாக இருக்கும்"

இவ்வளவு அற்புதமான இந்த ஏரியைத்தான் தூர்க்க செய்து தி.நகர் உருவாக்கப்பட்டது. ஏரியை மூடும் முன்பு சென்னை மாநகராட்சியில் இது குறித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது என்ன நடந்தது தெரியுமா? அது அடுத்த அத்தியாயத்தில்....

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!