வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (10/06/2017)

கடைசி தொடர்பு:08:34 (10/06/2017)

கேரளாவில் தோல்வியடைந்த மது விலக்கு...! தமிழகத்தில் சாத்தியமாகுமா?

மதுவிலக்கு

மிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை உச்சத்தை எட்டத்துவங்கிய நேரத்தில், மதுவிலக்கு குறித்த அறிவிப்பை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தியது கேரளா அரசு. 'மலையாள மண்ணில் இருந்து தமிழகம் கற்க வேண்டிய பாடம் இது' என்ற முழக்கங்கள் அப்போது பரவலாக எழுந்தன. அதேநேரம் முழுமையான மதுவிலக்கை நோக்கி எப்படி பயணிக்க முடியும் என்ற பார்வையில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது கேரளா. 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுவிலக்கை நோக்கி நடைபோடத்துவங்கிய கேரளா, 3 ஆண்டுகள் கூட நிறைவடையாத சூழலில் இப்போது பின்வாங்கியுள்ளது. மதுவிலக்கு அறிவிப்பு என்பது தோல்வியடைந்திருப்பதாக அறிவித்துள்ளது.

கேரளாவில் மதுவிலக்கு ஏன் சாத்தியப்படவில்லை? இடதுசாரி முன்னணி வாபஸ் வாங்கியது ஏன்? கேரளாவின் பின்வாங்கல் தமிழகத்தில் தீவிரமடைந்த மதுவிலக்கு கோரிக்கையை பாதிக்குமா? தமிழகத்தில் மதுவிலக்கு என்பது சாத்தியம் தானா என்பன போன்றவை இப்போது விவாதங்களாக எழுந்திருக்கின்றன.

மதுவிலக்கு

கேரளாவும் மதுவும்...

இந்தியாவில் மது அருந்துபவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளாதான். மொத்த மது உற்பத்தியில் 15 சதவீதத்துக்கும் மேல், கேரளாவில் இருப்பவர்கள் அருந்துவதாக சொல்லப்படுகிறது. தனிநபர் மது அருந்தும் அளவும் கேரளாவில்தான் அதிகமாம். எல்லாவற்றுக்கும் மேல் மது அருந்துபவர்களின் வயது மிகவும் குறைவாக இருப்பதும் கேரளாவில்தான் என்கிறார்கள். மற்ற மாநிலங்களில் சராசரியாக 16 வயது வரையிலானவர்களில் துவங்கி மது அருந்துவதாக சொல்லப்படும் நிலையில், கேரளாவில் இது 12 வயதாக இருக்கிறது.

மது அருந்துவதில் மற்ற மாநிலங்களை விட பல வகைகளில் வித்தியாசப்படுகிறது கேரளா. பெரும்பான்மையான குடும்பங்களில் வீட்டிலிருந்தே மது அருந்துவதும், குடும்பத்துடன் மது அருந்துவதும் கலாசார பழக்கமாகவே கேரளாவில் இருந்து வருகிறது. இதனால் சுதந்திர இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்த முடியவில்லை. இப்போது மதுவிலக்கு என்பது தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.

மதுவிலக்கு

கேரளாவில் மதுவிலக்கு அறிவிப்பு வந்தது எப்படி?

இப்படியான சூழலில் கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது என்பதை பலரும் ஆச்சர்யமாகவே பார்த்தார்கள். "இந்த மாநிலம் மது அடிமைகளின் இருப்பிடமாக மாறி விடக்கூடாது. இனி வரும் தலைமுறை பாதுகாப்பான ஆரோக்கியமான சமாதானமான வாழ்வைப்பெற மதுவிலக்குவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. படிப்படியாக விலக்கு கொண்டு வரப்படும். 10 ஆண்டுகளில் மாநிலத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைக்கு வரும்," என கேரளா முதல்வராக இருந்த உம்மன் சாண்டி அப்போது சொன்ன போது பலரும் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் அவரின் இந்த சவாலான நிலைப்பாடு  பலரால் பாராட்டப்பட்டது. அதுவரை கடும் விமர்சனத்துக்குள்ளான கேரளா முதல்வர் உம்மன் சாண்டி, மது எதிர்ப்பாளர்களால் பாராட்டப்பட்டார்.

மக்கள் நல்வாழ்வுதான் நோக்கம் என கேரளா அரசால் சொல்லப்பட்டாலும், கேரளாவின் இந்த மதுவிலக்கு அறிவிப்புக்கு வேறு இரு காரணங்களும் சொல்லப்பட்டது. முதலில் கேரளா காங்கிரஸ் அரசின் மீது இருந்த அவப்பெயர். இரண்டாவது அப்போது காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரனுக்கும், முதல்வர் உம்மன் சாண்டிக்குமிடையே ஏற்பட்டிருந்த மோதல் போக்கு.

2011 முதல் 2014 வரையிலான 3 ஆண்டுகள் என்பது கேரளா காங்கிரஸ் கட்சிக்கு சிறப்பாக இருக்கவில்லை. மக்களிடம் நல்ல அபிப்ராயத்தை பெற்றிருக்கவில்லை. இதை சரிகட்டவே அரசு இந்த அறிவிப்பை கொண்டு வருவதாக சொல்லப்பட்டது. அடுத்து கட்சியின் தலைவர் வி.எம்.சுதீரனுக்கும், உம்மன் சாண்டிக்குமிடையேயான மோதல். அப்போது காலாவதியான பார்களின் உரிமத்தைப் புதுப்பிக்கக் கூடாது என்ற காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரனின் நடவடிக்கை கேரளா அரசை கட்டுப்படுத்தியது.

அரசு செயல்பாட்டில் கட்சித்தலைவர் தலையிடுவது என்பதை உம்மன் சாண்டி ஏற்கவில்லை. அதேநேரம் வி.எம்.சுதீரனின் நடவடிக்கை பல தரப்பினரிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நேரத்தில்தான் 'காலாவதியான பார்கள் மட்டுமல்ல. மிச்சமிருக்கும் பார்களும் உடனடியாக மூடப்படும்' என உம்மன் சாண்டி அறிவித்தார்.

'சுதீரனுக்கு கிடைக்க வேண்டிய இமேஜை தன் வசமாக்கிக்கொள்ளும் முயற்சி இது' என்றும் விமர்சிக்கப்பட்டது. எது எப்படியோ, மதுவிலக்கு என்பதை நோக்கி கேரளா தன் பயணத்தை மேற்கொண்டது என்பது மதுவிலக்கை அமல்படுத்தாத தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக இருந்தது. உம்மன் சாண்டியையும், காங்கிரஸையும் பிடிக்காதவர்கள் கூட அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்றிருந்தனர்.

மதுவிலக்கு

இடது சாரிகள் பின்வாங்கியது ஏன்?

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தாலும், 'கேரளாவில் முழு மதுவிலக்கு சாத்தியமில்லை. காங்கிரஸ் ஆட்சியிலேயே மதுவிலக்கு திரும்ப பெறப்படும்' என்ற பேச்சு பரவலாக ஒலித்தது. ஆனால் 2 ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மதுவிலக்கை முழுமைப்படுத்துவதை நோக்கியே சென்றது. இந்த சூழலில் 2016 சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில், இடது முன்னணி ஆட்சிக்கு வந்தது. இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கு பின்னர் இப்போது மதுவிலக்கு நடவடிக்கையில் இருந்து கேரளா அரசு பின்வாங்கியிருக்கிறது.

5 நட்சத்திர விடுதி தவிர எங்கும் மது கிடைக்காது. மது பார்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது என்ற நிலை கேரளாவில் இருந்த நிலையில், சில தளர்வுகளை கேரளாவின் இடது சாரி அரசு கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, "5 நட்சத்திர விடுதிகள் மட்டுமல்லாது, இதர நட்சத்திர விடுதிகளிலும் மதுபானங்கள் கிடைக்கும். மீண்டும் பார்கள் திறக்கப்படும். விமான நிலையங்களில் மதுவிற்பனையகம் திறக்கப்படும்" என அறிவித்துள்ளது கேரளா அரசு. மது விலக்கு என்பது என்பது நோக்கமல்ல. மது தவிர்ப்பு என்ற நிலையை அடைவோம் என்றும் அம்மாநில முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் மதுவிலக்கு எனும் நிலையை எப்போதும் முன்மொழிந்ததில்லை. தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை தீவிரமானபோது கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுவிலக்கு என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லை. மக்கள் எதிர்ப்பை மீறி திணிக்கக்கூடாது என்பதாகவே அக்கட்சியின் நிலை அமைந்திருக்கிறது. எனவே இந்த பின்வாங்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை கொள்கை ரீதியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

மதுவிலக்கு

கேரளாவில் மதுவிலக்கு ஏன் சாத்தியமாகவில்லை...?

கேரளா மாநிலத்தில் மதுவிலக்கு சாத்தியமாகமல் போனதற்கு மூன்று முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று மது விலக்கு காரணமான போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இரண்டாவது வெளிநாட்டு பயணிகளின் வருகை குறைந்து சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மது விற்பனையின் மூலம் கிடைக்கும் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான வருமானம் பாதிக்கப்பட்டது.

"மது விலக்கால் போதை பொருள்களின் பயன்பாடு அதிகரிக்கத்துவங்கியிருக்கிறது. இது மக்களை மேலும் பாதிக்கும். எனவே சில தளர்வுகளை முன்னெடுத்துள்ளோம். மது விலக்கு எனும் இடத்தில் இருந்து, மது தவிர்ப்பு எனும் நிலையை அடைய வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தூய்மையான கள் விற்கப்படும். மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் விடுபட மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்" என கேரளா இடது சாரி அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.

மதுவிலக்கு

தமிழகத்திலும் எதிரொலிக்குமா?

கேரளாவில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டிருப்பது என்பது, கேரளாவை கடந்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மதுவிலக்கு கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வருகின்றன. 2014க்கு பின்னர் இது தீவிரமடைந்தது. இதற்கு கேரளாவின் மதுவிலக்கு அறிவிப்பும்கூட ஒரு காரணம். இதையடுத்தே 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியமைந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என தி.மு.க.வும், 'படிப்படியாக மதுவிலக்கு' என அ.தி.மு.க.வும் சொல்லத்துவங்கியது.

இந்த சூழலில் கேரளாவில் மதுவிலக்கு திரும்ப பெற்றிருப்பது என்பது நிச்சயம் தமிழகத்தில் மதுவுக்கு எதிரான போராட்டங்களுக்கு சற்று பின்னடைவாகத்தான் இருக்கும். "மதுவிலக்கு கொள்கையில் உலகம் முழுவதும் தோற்றுப்போன கொள்கை. சுதந்திர இந்தியாவில் மதுவிலக்கு அமலில் இருந்த இரு மாநிலங்கள் ஒன்று காந்தி பிறந்த குஜராத் மாநிலம். மற்றொன்று தமிழகம். தமிழகத்தில் பிற்காலத்தில் மதுவிலக்கு திரும்ப பெறப்பட்டு, மீண்டும் அமலாகி, மீண்டும் திரும்பப் பெறப்பட்டது. இப்போது அரசே மது விற்பனை செய்கிறது.

அண்மையில் கேரளா, பீகார் இரு மாநிலங்களும் மதுவிலக்கு அறிவிப்பை வெளியிட்டு அதை செயல்படுத்தத் துவங்கின. இந்த சூழலில்தான், கேரளா, பீகாரைப்போல, தமிழகத்திலும் மதுவிலக்கு அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இப்போது இதில் கேரளா மதுவிலக்கை திரும்ப பெற்றுள்ளது என்பது நிச்சயம் மதுவிலக்கை நோக்கி தமிழகத்தை கொண்டு செல்வதில் சுணக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தமிழகம் வேறு கேரளா வேறு என்பது உணர்ந்து இயங்கினால் இதை எளிதில் கடந்து செல்ல முடியும்.

தமிழகம் வேறு... கேரளா வேறு...

மதுவிலக்கு கொள்கையை பொறுத்தவரை கேரளாவுக்கும், தமிழகத்துக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. சுதந்திர இந்தியாவில் கேரளாவில் மதுவிலக்கை அமல்படுத்துவது என்பது நிறைவேறவே இல்லை. பல தலைவர் முயன்றும், அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தது. காரணம், கேரளாவில் மது அருந்துவது என்பது கலாச்சார பழக்கமாகவே மாறிப்போனது.

ஆனால் தமிழகம் கேரளாவில் இருந்து வேறுபட்டது. தமிழகத்தில் பல ஆண்டுகள் மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது. கேரளாவைப்போல மது அருந்துவது என்பது தமிழகத்தில் கலாசார பழக்கமாக இல்லை. எனவே இதில் கேரளாவை ஒப்பிட்டு தமிழகத்திலும் மதுவிலக்கு என்பது வெற்றி பெறாது என்பது சொல்லி ஒதுக்கி விட முடியாது. கேரளாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் கவனமில்லாத, பொறுப்பில்லாத குடி என்பது அதிகம். இதுவே பெரும் குற்றங்களுக்கு காரணமாகவும் இருக்கிறது. எனவே தமிழகம் மதுவிலக்கை நோக்கி செல்ல வேண்டியது அவசியம்.

ஆனால் மக்களை சமாதானப்படுத்தி, குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை எப்படி திறப்பது என்பதைப்பற்றியே தமிழக அரசு சிந்தித்து கொண்டிருப்பதுதான் வேதனை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்