வெளியிடப்பட்ட நேரம்: 06:59 (11/06/2017)

கடைசி தொடர்பு:06:59 (11/06/2017)

"பா.ம.க -வின் மதுவிலக்கு முயற்சி பாராட்டுக்குரியது..."-வரவேற்கும் வன்னிஅரசு

மதுவிலக்கு போராட்டம்

'சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்டதே விடுதலைச் சிறுத்தைகள். உயர்ந்த இலக்கை அடையத் தேர்தலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்கிறோம். அந்தத் தேர்தலில் முக்கிய வெற்றிகளைப் பெற, சமகாலத்தில் மக்கள் பிரச்னைகளில் பங்கெடுப்பதும், அதன் தீர்வுகளுக்கான  போராட்டங்களை முன்னெடுப்பதும் எங்கள் செயல் உத்திகளாகும்"- தமது கட்சியின் இலக்கு நோக்கிய பயணத்துக்கான விளக்கவுரையை இவ்வாறு தொகுத்து கூறுவார் , விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.  அந்த வகையில், சமீபத்தில் மதுவிலக்குக்கான அரசியலைக் கையில் எடுத்துள்ளது விடுதலைச் சிறுத்தைகள்.

தமிழ்நாடு முழுக்க மக்கள் தன்னெழுச்சியாகவும், அமைப்பாகவும் திரண்டு, அரசு டாஸ்மாக் கடைகள் முன் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். 'வேண்டும் வேண்டும் மதுவிலக்கு வேண்டும்' என்ற அவர்களின் முழக்கம் விண்ணை முட்டுகிறது. பெண்கள் தங்கள் கையில் கிடைத்த பொருட்களின் மூலம், டாஸ்மாக்கை அடித்து நொறுக்குகின்றனர். தாம்பரம் பகுதி மக்களின் போராட்டம், 'அக்னி' பிழம்பாகவே வெடித்தது. ஆம், தாம்பரம்-கிஷ்கிந்தா சாலையில் உள்ள அரசு மதுக்கடையை , அடித்து, நொறுக்கி தீக்கிரையாக்கினர்  அச்சுற்று வட்டாரப் பகுதி மக்கள். இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சியாகும். இதற்காக 22 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்து விட்டுப் பிணையில் வெளி வந்திருக்கிறார்  அதன் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு. வெளி வந்த மறுகணம், 'மது ஒழிப்பு அரசியலைக் கைவிடமாட்டோம். தொடர்வோம் ' என்கிறார் நம்மிடம்.  இந்தப் போராட்டம் தொட்டு, மதுவிலக்கு அரசியலைப் பரவலாக்குவது வரை என தங்கள் முயற்சிகள், செயல்பாடுகள் குறித்து , அவர் நம்மிடம் பகிர்ந்தவைகள்..இதோ!

"நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை நீக்கக் கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தாம்பரம்-கிஷ்கிந்தா சாலையில் உள்ள டாஸ்மாக் கடை தொடர்ந்து சட்டவிரோதமாக  24 மணி நேரமும் இயங்கியபடியே இருந்தது. கடையை மூட வேண்டும் என்று வன்னிஅரசு வலியுறுத்தினோம். தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, விடுதலைச் சிறுத்தை நிர்வாகிகள், ஊர் மக்களிடம் , ஆர்.டி.ஓ பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அங்கு மது விற்பனைத் தொடர்ந்தது. நாங்கள் போராடியதற்கு முதல்நாள் இரவு, வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய ஒரு பெண்ணிடம், டாஸ்மாக்கில் குடித்துவிட்டுத் திரும்பியவர்கள் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார்கள். இந்தக் கொடுமை, அந்தப் பகுதி மக்களையும் , எங்களையும் மிகவும் கொந்தளிக்க செய்ய, அடுத்தநாளே ஆயிரக்கணக்கான மக்களுடன் அந்த டாஸ்மாக் முன் திரண்டோம். மக்கள் போராட்டத்தால், மதுக்கடையே  தீக்கிரையாக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே இது முதல் சம்பவமாக இருக்கலாம். மக்கள் மனதில் மதுவுக்கு எதிராக கனன்று கொண்டிருக்கும் கோபத்தீ-யின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்கலாம். இதையொட்டி, 'பொதுச் சொத்தைச் சேதப்படுத்தினார்கள் ' என்று 23 பேரைக் கைது செய்தது காவல்துறை. மாஜிஸ்திரேட் முன் நிறுத்தப்பட்டபோது, 'மதுக்கடை தான் அரசின் சொத்து என்றால், அது மக்களை இழிவுபடுத்துவதற்கு சமம்' என்று என் தரப்பு விளக்கமாகத் தெரிவித்தேன். 

பா.ம.க கையில் எடுத்ததால்தான் விடுதலை சிறுத்தைகளும் மதுவிலக்குப் போராட்டங்களைப் போட்டியாக நடத்துகிறது எனப் பேசப்படுகிறது. இது முற்றிலும் தவறு. உண்மையில் பா.ம.க-வுடன், வேறு பலரும் இணைந்து முயற்சித்தாலும், 'மதுக்கடைகள் மூடப்படவேண்டும்' என்ற பா.ம.க -வின் சட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டவே செய்கிறோம். அதேநேரம், வெறும் சட்டப் போராட்டத்தோடு அவர்கள் சுருங்கிவிட்டனர். மக்களைத் திரட்டிய போராட்டங்களை விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. கடந்த ஆண்டிலேயே 'மதுவை ஒழிப்போம்' என்று நெஞ்சில் பேட்ச் குத்திக் கொண்டு தமிழ்நாடு முழுக்க, ஒரு வாரம் தொடர் மது ஒழிப்புப் பரப்புரை செய்தோம். எங்கள் கட்சியில் குடி, போதை பழக்கத்தில் இருக்கும் யாரும் மாநில பொறுப்புகளில் நியமிக்கப்படுவதில்லை. அந்தப் பழக்கமே கூடாது என்று கறாராக உத்தரவிட்டவர்  எங்கள் தலைவர் தொல் .திருமாவளவன்" என உணர்வுப்பூர்வமாக பேசிக்கொண்டிருந்தவரை இடைமறித்தோம். 'நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்  ஆனாலும் வருந்தக்கூடிய விஷயமாக , உங்கள்  கட்சி உறுப்பினர்கள் பலர் இக்கொடிய பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார்களே ! என்றோம்.

தீக்கிரையாக்கப்பட்ட டாஸ்மாக்

"உண்மைதான். எளிய, விளிம்பு நிலை மக்கள் மதுவிலிருந்து மீள்வதற்கு நாங்கள் மாவட்டந்தோறும் மருத்துவ முகாம்ங்கள்  நடத்துகிறோம். மது எப்படிக் குடும்பத்தை, சமூத்தைச் சீரழிக்கிறது என்று விளக்குகிறோம். அந்த வகுப்புகளில் மதுக் கொடுமைகளால் சிதையும் குடும்பங்களின் கனவுகள், எதிர்காலம் குறித்த உருக வைக்கும் வீடியோக்களும் ஒளிபரப்புகிறோம். மதுப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்களை அழைத்து வந்து அவர்களின் அனுபவங்களைப் பகிரச் செய்கிறோம்.  கட்சிக்குள்ளும், எங்கள் கட்சி செல்வாக்குள்ள  பகுதிகளிலும் இப்பரப்புரையை ஒரு இயக்கமாகவே தொடர்கிறோம்.  அதேநேரம் அதிகாரம் என்பது அரசாங்கத்தின் கையில் உள்ளது. மக்களை மீட்கவேண்டிய அரசே, விளிம்புநிலை மக்களை குறிவைத்து மதுக்கடைகளைத் திறக்கிறது. எரியுறதை பிடிங்கிட்டா, புகையிறது தானா அடங்கிடும். எனவேதான் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக எங்கள் போராட்டங்களை கூர்மைப்படுத்தி வருகிறோம். பூரண மதுவிலக்கே எங்கள் இலக்கு" எனும்போதே அவர் செல்பேசி ஒலிக்கிறது. 'இதோ வந்துடுறேன்" என செல்பேசியில் பதிலளித்தவர், திரும்பி நம்மிடம், "மது விலக்கு குறித்து பேச பயிற்சி முகாமிலிருந்து அழைப்பு. விடை பெறுகிறேன் தோழா" என்றார் வன்னிஅரசு. 

"மது"- வீழ்த்தப்பட வேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


டிரெண்டிங் @ விகடன்