வெளியிடப்பட்ட நேரம்: 15:49 (11/06/2017)

கடைசி தொடர்பு:15:49 (11/06/2017)

'பொறுப்பு முதல்வர் வெங்கையா அவர்களே... துணைமுதல்வர் எடப்பாடி அவர்களே...!' - திருமுருகனுக்கு ஆதரவாக இயக்குநர்கள்

திருமுருகன் காந்தி

தலைப்பைப் படித்ததும் யாரும் அதிர்ந்துவிட வேண்டாம்! நாட்டு நடப்பு இந்த அளவுக்கு மக்களைப் பேசவைத்திருக்கிறது என்றே சொல்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். மே பதினேழு திருமுருகனுக்கு ஆதரவாக -அவர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. 

மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேர் மீது, குண்டர் சட்டத்தை ஏவியதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக, கடந்த 10ஆம் தேதியன்று சென்னை, அம்பேத்கர் திடலில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், அரசியல் அமைப்புகளின் தலைவர்கள் அடங்கிய, அரசு அடக்குமுறைக்கு எதிரான குடிமைச்சமூகம் எனும் குழுவினர், குண்டர்சட்ட ஏவலைக் கண்டித்துப் பேசினர். 

வி.சி.க. தலைவர் திருமாவளவன் பேசுகையில், ” அரசியல் இயக்கமாக இருந்து கட்சியாக மாறிய காலகட்டத்தில், வட தமிழகத்தில் விடுதலைச்சிறுத்தைகள் உறுப்பினர்  என்று சொன்னாலே, அவர்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது; அரசியல் செயற்பாட்டில் மட்டும் இருந்தவர்களை வழிப்பறி செய்ததாக எல்லாம் வழக்குப் பதிந்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தார்கள்; இது போன்ற அடக்குமுறையைச் சமாளிப்பதற்காகவும் அரசியல் கட்சியாகப் பரிணமிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. தேர்தல் அரசியல் எனும் வழுக்குப்பாறையில் காலைவைப்பதாக ஆகிவிட்டது.. அதைப்போலவே இறுதியுத்தம் நடந்த காலத்திலும் அதே திமுக ஆட்சியில் செங்கல்பட்டில் காலவரையற்ற உண்ணாவிரதம் அமர்ந்தபோது விடுதலைச்சிறுத்தைகள் 26 பேர் மீது குண்டர்சட்டம் ஏவப்பட்டது. இப்போது மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திய தோழர்கள் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இது அப்பட்டமான அரச பயங்கரவாதம். எல்லா பயங்கரவாதங்களிலும் கொடியது அரச பயங்கரவாதம்தான். திருமுருகன் உட்பட நான்கு பேரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலைசெய்யவேண்டும்” என்று காட்டம் காட்டினார்.

பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன், இப்படியான குண்டர் தடுப்புச் சட்ட ஏவல் மூலம் மக்கள் எழுச்சிகளை ஒடுக்கிவிடலாம் என மைய, மாநில அரசுகள் நினைக்குமானால், அது முட்டாள்தனமாகவே இருக்கமுடியும் என்றார். மேலும், “ மே பதினேழு இயக்கமோ அல்லது அண்மைக்கால இளைஞர்களின் பங்களிப்பிலான பல்வேறு மக்கள்திரள் எழுச்சிகளிலோ எந்த ஒரு சிறு வன்முறையாவது நிகழ்ந்தது என அரசு சொல்லமுடியுமா? மூன்று ஆண்டுகளாக ஆயிரம் நாட்கள் நடந்த கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்ற மக்களால் வன்முறை நடந்தது என ஏதாவது ஒரு நிகழ்வைக் கூறமுடியுமா? மெரினா கடற்கரைப் போராட்டத்தில் 5 இலட்சம் மக்கள் திரளில் சிறு வன்முறை என சொல்லமுடியுமா? அரசுதானே வன்முறையில் ஈடுபட்டது. அமைதிவழியிலான மக்கள்போராட்டத்தைப் பற்றி தவறாகச் சித்தரித்து அதை அடக்கிவிடலாம் என நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் ஒன்று இருக்கமுடியாது” என்றார் ஆழி செந்தில்நாதன், சூடாக. 

இயக்குநர் சந்திரா

ஆவணப்பட இயக்குநர் ஆர்.பி.அமுதன், “ அம்பேத்கரைப் பற்றி பெரியாரைப் பற்றி பெண்களைப் பற்றி சுற்றுச்சூழலைப் பற்றி பேசுகிறோம். இவை எல்லாம் பாஜகவின் அரசியலுக்கு எதிராக இருக்கின்றன. ஒருவகையான வீச்சு ஏற்பட்டுள்ளதால், இந்த தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் இந்தக் கைதுகள் நடக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் தலித் தலைவரைக் கைதுசெய்திருக்கிறார்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு இந்திய அளவில் மூத்த பத்திரிகையாளர்கள் எல்லாம், ஒன்றுதிரண்டு டெல்லியில் இந்த அரசின் கொள்கைகளுக்கு எதிராகக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். முக்கியமான காலகட்டத்தில் கைதானவர்கள் எல்லாம், முக்கியமான வேலை செய்கிறார்கள் என்பதுதான். கேரளத்தில் திருவனந்தபுரத்தில் பன்னாட்டுத் திரைப்பட விழாவில் 300 படங்களைப் பார்த்து 15 படங்களைத் தேர்வுசெய்து அந்த மாநில அரசு நடத்துகிறது. அதில் மூன்று படங்களுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. ஒரு படம், ரோகித் வெமுலா பற்றியது, அடுத்தது ஜே.என்.யு. மாணவர் பற்றியது, இன்னொன்று காஷ்மீர் பற்றிய படம்.. நாளைக்கு உங்களைப் பற்றிய படம் வந்தாலும் தடை போடுவான். இந்தியாவுக்கு உள்ளே இருந்துகொண்டு இந்தியாவுக்கு வெளியே சிந்திப்பதுதான் பிரச்னை..சுதந்திரமாக வளர்வதும் சுதந்திரமான மாநிலமாக வளர்வதும்தான் பிரச்னை.. தமிழ்நாட்டை பொருளாதாரரீதியாக அரசியல்ரீதியாகவும் பண்பாட்டுரீதியாகவும் சொல்படி நடக்கமுடியுமா என்பதுதான் நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கடைசியான சாட்சி..அவ்வளவுதான்” என்றார் யதார்த்தமாக. 

திரைப்பட இயக்குநர் சந்திரா, “உண்மையில் ஜனநாயகநாட்டில் வாழ்கிறோமா இல்லை சர்வாதிகார ஆட்சியில் வாழ்கிறோமோ எனும் கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தக் கைதுக்குக் காரணமாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு,மிகவும் வேடிக்கையானது, பொய்யானது. ஈழ மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது நாம் கண்ணீரையும் வலியையும் சுமந்துகொண்டிருந்தோம். நம் எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாமல் இருந்தபோது நமது உணர்வை மிகவும் எளிமையாக வெளிப்படுத்த மே பதினேழு இயக்கம் செயல்பட்டது. இனப்படுகொலை நடந்ததற்குப் பின்னர் மெரினாவில் நடந்த நினைவஞ்சலியில், ஆண்கள் மட்டுமா கலந்துகொண்டார்கள் என்றால் இல்லை; பெண்களும் குழந்தைகளும் குடும்பம்குடும்பமாகக் கலந்துகொண்டார்கள். இதுவரையில் நினைவஞ்சலியில் எந்த வன்முறையும் நிகழ்ந்ததில்லை. இந்த ஆண்டு மட்டும் எப்படி? இந்த நிகழ்வு மட்டும்தான் காரணமா, இல்லை. மக்களுக்கு எதிராக அரசு அதிகாரம் செயல்படும்போது வலிமையாக குரல் கொடுத்திருக்கிறார்” என்று அழுத்தம்திருத்தமாகப் பேசினார், ஆர்ப்பரிப்பு இல்லாமல். 

கரு.பழனியப்பன்

சின்னத்திரை இயக்குநர் கவிதாபாரதி பேசுகையில்,” கண்டன உரை என்று சொன்னார்கள், ஆனால் நன்றி உரையாக வைத்துக்கொள்கிறேன். மக்கள்நலன் இயக்கங்கள் தங்கள் போராட்ட திசைவழியால் சிற்சில முரண்பாடுகளால், அவற்றை இணைக்கும் பணியை அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. அந்த வகையில் இன்றைக்கு உணர்வெழுச்சிமிக்க இயக்கங்களை ஒன்றிணைத்திருக்கிற தமிழகத்தின் பொறுப்பு முதல்வர் வெங்கையாநாயுடு அவர்களுக்கும், தமிழ்நாட்டின் துணைமுதல்வர் எடப்பாடி அவர்களுக்கும் பொறுப்பு கவர்னர் அமித்சா அவர்களுக்கும் நன்றிசொல்லும் கூட்டமாகத்தான் இதை எடுத்துக்கொள்கிறேன். தேசிய கட்சி ஆளும் மாநிலங்களில் எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்த மண்ணின் நலன்களுக்கும் மக்களின் உரிமைகளுக்கு எதிராக ஒற்றைச்சொல்லைக்கூட உச்சரித்துவிடமுடியாது. ஆனால் இந்தக் கேடுகெட்ட தமிழகத்தில் மட்டும்தான் தேசநலனுக்காக நீங்கள் தியாகம்செய்வது தவறில்லை என்று சொல்லமுடிகிறது. இந்த மொழி தேவையா, இதற்கு எதிரான அடக்குமுறை என்கிற கருத்துக்கணிப்பை தமிழகத்தில்தான் நடத்தமுடிகிறது. இந்த அரசாங்கத்திடமிருந்து பெறுகின்ற தேசவிரோதி, குண்டாஸ் போன்ற கௌரவங்களும் விருதுகளும்தான் வரலாற்றில் பதிவுசெய்யப்படும். இந்த கௌரவத்தை வழங்கிய இந்த அரசாங்கங்களுக்கு நன்றி கூறுகிறேன்” என அரங்கத்தைக் கலகலக்கவைத்தார்.

திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன், “இந்தியா ஒண்ணா இருக்கணுமான்னா பல கருத்துமாறுபாடுகள் இருக்கு. நான், ஒண்ணா இருக்கணும்னுதான் நினைக்கிறேன். ஆனா பாஜக ஒரே மாதிரியா இருக்கணும்னு நினைக்குது. அதுதான் இங்க சிக்கல். எப்படி எல்லாரும் ஒரேமாதிரி இருக்கமுடியும்? இங்க தனித்தனி அடையாளங்களச் சொல்லிகிட்டிருக்கிற திருமுருகன் காந்தி போன்றவங்கள தொடர்ந்து சிறையில அடைச்சிகிட்டுதான் இருப்பாங்க. இங்க விரைவில் தேர்தல் வரப்போகிற நிலையில, தமிழர் நலன் பத்தியும் தமிழர் பிரச்னை பத்தியும் மத்திய அரசுக்கு எதிராப் பேசுற  ஆட்களையும் வெளியே விடமாட்டாங்க. இன்னும் பல பேரையும் கைதுபண்ணப் போறாங்க. அதிகமா ஆள் உள்ளே போகப்போக அதிகமாக பேசப்படப்போகுது.... ஒரு வாரத்துக்கு முன்னாடி சென்னையில மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பத்தி ஒரு கூட்டத்துக்குக் கூப்பிட்டாங்க.. போங்கடா இந்த நாட்டில மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சர் இருக்காரு. அதுக்கே இங்க யாரும் கவலப்படலை.. மத்திய அரசு அதைத்தானே செய்யுது. முதலமைச்சருக்கு ஒரு வீரியம் இருக்கும்.. ஒரு கொணம் இருக்கும். அதெல்லாம் வேணாம்னுட்டு ஊசியப் போட்டு மரபணு மாற்றப்பட்ட முதலமைச்சரைத்தான் வச்சிருக்காய்ங்க. மக்களைப் பூரா மரபணு மாற்றப்பட்ட ஆடா மாத்த முயற்சிபண்றான். இப்படி அங்கங்க கூட்டம் கூடவேண்டியது முக்கியம்.” என கவிதாபாரதியைத் தொடர்ந்து தன் பாணியில் கலக்கினார். 

தொடர்ந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் தாமிரா, விசிகவின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் பேரா. அ.மார்க்ஸ், தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா ஆகியோரும் கண்டன உரையாற்றினர். 
 


டிரெண்டிங் @ விகடன்