சரவணா ஸ்டோர்ஸ் தி.நகர் வந்தது எப்படி? அங்காடித் தெருவின் கதை! மினி தொடர்

தி நகர்

ரசாங்கங்கள் எப்போதுமே, மக்களின் எதிர்ப்புகளையும் ஊடகங்களின் எதிர்ப்புகளையும் கண்டுகொள்வதில்லை. அன்றைக்கு இருந்த அரசும், மிகப்பெரிய ஏரியான LONG TANK ஏரியைத் தூர்ப்பதில் அக்கறையோடு இருந்தது. பொதுமக்கள் நலனுக்காகத்தான் தி.நகர் என்ற புதிய நகர் உருவாக்குகிறோம் என்றும் கூறினார்கள்.

தி.நகருக்காக தீர்மானம்

சென்னை மாநகராட்சியில் இதற்காகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர், LONG TANK  ஏரியைத் தூர்த்துவிட்டு நகர்ப் பகுதியை உருவாக்குவதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ''ஏரியைக் கையகப்படுத்தக்கூடாது; ஜார்ஜ் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பஞ்சம் இருக்கிறது; இருக்கிற ஏரியையும் தூர்த்துவிட்டால், குடிநீர்ப் பஞ்சத்தில் பாதிக்கப்படுவோம்; இப்படி ஒரு பகட்டான திட்டம் தேவையில்லை'' என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் ஏரியைத் தூர்ப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். அன்றைக்கு THE HINDU செய்தியாளர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். ''தண்ணீர் நிரம்பிய ஏரியையும் வளம் மிக்க நிலங்களையும் வீட்டு மனைகளாக மாற்றுவது நல்லதல்ல'' என்று தன் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், அதற்கு அப்போது டவுன் பிளானிங் இயக்குநராக இருந்த Ronald Dann பதில் எழுதினார். ''ஏன் இந்தத் திட்டம் மிகவும் தேவையாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டார். திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடனும் அவர் இருந்தார். 

ரங்கநாதன் தெரு

முதல்கட்டமாக, ஏரியின் ஒரு பகுதி மற்றும் விவசாய நிலங்கள் என 600 ஏக்கர் நிலம் வீட்டு வசதித் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்டது. அவை, விவசாய நிலத்துக்கு ஏக்கருக்கு 910 ரூபாய் அரசுத் தரப்பில் இழப்பீடாகத் தரப்பட்டது. வீட்டு வசதித் திட்டத்துக்கான பணிகள், 1924 ஆம் ஆண்டு தொடங்கின. வீட்டு வசதித் திட்ட வடிவமைப்பின்படி தி.நகரில் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அப்படி அமைக்கப்பட்டதுதான், பனகல் பார்க் பூங்கா. இந்தப் பூங்கா 10 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது. 1928 நவம்பர் 8ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. 

சமகாலத்துக்கு நகரம்

இப்போது LONG TANK ஏரியின் மிச்சங்களாக இருப்பவை, மேற்கு மாம்பலத்தில் உள்ள லேக் வியூ ரோடு என்ற சாலையும், நுங்கம்பாக்கத்தில் இருக்கும் லேக் ஏரியா என்ற பகுதியும்தான். பெயரில் மட்டும்தான் 'ஏரி' இருக்கிறது. மற்றபடி கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன. 

சென்னை நகரில் முறையாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் நகர் பகுதி, தியாகராயநகர்தான். குடிநீர் வசதி அளிப்பதற்காக நிலத்துக்கு அடியில் குழாய்கள் கொண்டுசெல்லப்பட்டன. அதேபோல அப்போது சென்னையின் பிற பகுதிகளில் ஓடிய டிராம் தி.நகரில் இயக்கப்படவில்லை. தியாகராய நகர், சமகாலத்தில் உருவாக்கப்பட்ட நகரம் என்பதற்கு இது ஓர் ஆதாரம். 

தி நகர்

மூன்று கடைகள்

மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கிச் செல்பவர்கள், முதலில் நுழையும் தெரு, ரங்கநாதன் தெரு. இது, அப்போது பிராமணர்கள் அதிகம் வசிக்கும் அக்ரஹாரமாக இருந்தது. இந்த அக்ரஹாரத்தில் பெரும்பாலான வீடுகள் ஓட்டு வீடுகள். வீட்டின் பின்புறம் கொல்லைப்புறத்தில் மாட்டுத் தொழுவங்கள் இருந்தன. தி.நகர் பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் மேட்லி சுரங்கப்பாதைக்கு மேலே இருந்து சீனிவாசா திரையரங்கு செல்லும் வழியில் கோதண்டராமர் கோயில் தெரு இருக்கிறது. இந்தத் தெருவில் இன்றும் பல வீடுகள் ஓட்டு வீடுகளாகவே இருக்கின்றன. இதேபோன்றுதான் ரங்கநாதன் தெருவும் இருந்தது என்று அப்போதைய காலத்தைச் சேர்ந்தவர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.

ரங்கநாதன் தெருவில், வீடுகளைத் தவிர மூன்று முக்கியக் கடைகள் இருந்தன. அதில், கும்பகோணம் பாத்திரக்கடை என்பது குறிப்பிடத்தக்க ஒரு கடை. இந்தக் கடையை நடத்தியவர், காரைக்குடியைச் சேர்ந்த தனபாலன் செட்டியார். அவர், இந்தக் கடையில் பித்தளைப் பாத்திரங்களை வைத்திருந்தார். அந்தப் பாத்திரங்களை ஜட்கா வண்டியில் எடுத்துச்சென்று மயிலாப்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் பக்கத்தில் இருந்த கிராமப் பகுதிகளில் விற்றுவருவார். 

ரங்கநாதன் தெருவில் இருந்த இன்னொரு கடை, லிப்கோ புத்தகக் கடை. இன்றைக்கும் இந்தப் புத்தகக் கடை இருக்கிறது. இது தவிர, கல்யாணி ஸ்டோர் என்ற கடையும் இருந்தது. உஸ்மான் ரோட்டில், அந்தக் காலத்தில் 'சுந்தரம் காபி' என்ற காபித் தூள் கம்பெனி இருந்தது. இந்தக் கடையை நடத்தியவர், அப்போது முதல்வராக இருந்த காமராஜரின் உறவினர் சோமசுந்தரம் நாடார். இவர், விருதுநகரைச் சேர்ந்தவர். அப்போது, சென்னையில் இருந்த உணவு விடுதிகளுக்கெல்லாம் இந்தக் கடையிலிருந்துதான் காபித் தூள் வாங்கிச் செல்வார்கள். 

அப்போதைய திருநெல்வேலி மாவட்டத்திலும் இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது, பணிக்கர் குடியிருப்பு என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கியத் தொழில். அங்கு வசித்துவந்த செல்வரத்தினம் மற்றும் அவரது சகோதரர்கள் விவசாயம் பார்த்துவந்தனர். அத்துடன், ஓர் அரிசி ஆலையையும் நடத்திவந்தனர். அந்தச் சமயத்தில், செல்வரத்தினத்துக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது. சென்னைக்குச் சென்று மளிகைக் கடை வைக்க வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்காகத் தன்னுடைய சேமிப்பை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ரயில் ஏறினார். மாம்பலம் ரயில் நிலையத்தில் இறங்கிய அவர், தனது உறவினர் பார்க்கச் சொன்ன சுந்தரம் காபி உரிமையாளர் சோமசுந்தரம் நாடாரைத் தேடிச் சென்றார். அவரிடம், 'நான் ஒரு மளிகைக் கடை (இப்போதைய சரவணா ஸ்டோர்ஸ்) வைக்கலாம்னு  இருக்கேன். அதுக்கு நீங்க உதவி பண்ணணும்' என்று கேட்டார். அதற்கு சோமசுந்தரம் நாடார் என்ன சொன்னார் தெரியுமா? அது, அடுத்த அத்தியாயத்தில்....

Do you like the story?

Please Appreciate the Author by clapping!