யானையின் தோலை எரித்து... சாம்பலைக் கரைத்து... ஒரு நிஜ ரங்கூன் கதை! | Increasing rate of Elephant Trafficking for its Skin

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (13/06/2017)

கடைசி தொடர்பு:12:26 (13/06/2017)

யானையின் தோலை எரித்து... சாம்பலைக் கரைத்து... ஒரு நிஜ ரங்கூன் கதை!

யானை வேட்டை எப்படி நடக்கும் என்பதை இந்த வார்த்தை வர்ணிப்பின் வழி கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அந்தப் பெரிய உருவம் அத்தனை அழகாக இருக்கும். தன் தும்பிக்கையையும், வாலையும் ஆட்டியபடி, தன் பெரிய உருவத்தை அது நகர்த்திச் செல்லும் காட்சி அத்தனை அழகாக இருக்கும். அந்தக் காட்டின் பரந்த நிலப்பரப்பில் அது அமைதியாக நடந்துப் போய்க் கொண்டிருக்கும்.

தோலுக்காக வேட்டையாடப்படும் யானைகள்

தனக்கு சற்றுத் தள்ளி ஒரு ஜீப் வருவதும், அதில் சில மனிதர்கள் இருப்பதும் அதற்கு தெரியும். தன்னை துன்புறுத்தாத எந்த ஜீவனுக்கும் தீங்கு விளைவிக்காத அந்த ஆன்மா, அவர்கள் வருவதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாது. அப்போது அந்த வேட்டைக்காரர்கள் குறிபார்த்து, அந்த தடினமான தோலை ஊடுருவும் வகையில், விஷம் தடவிய அம்பை எய்வார்கள். விஷம் பரவிய நொடி, என்ன நடந்தது என்பதே தெரியாமல், புழுதி கிளப்பியபடி மண்ணில் "தொப்"பென்று சரிந்து விழும். முழுதாக மூச்சு நிற்காத நிலையில், அவசர கதியில் வேட்டைக்காரர்கள் அந்த யானையின் தந்தத்தை அறுத்து எடுப்பார்கள்... சமீப காலமாக அதன் தோலை உரித்து எடுக்கிறார்கள். தோலை உரிக்கும் போது ஏற்படும் எரிச்சலை தாங்க முடியாமல் அது ஒரு முறை திமிரி எழ முயற்சிக்கும். ஆனால், அந்த விஷம் அதற்கு இடம் கொடுக்காது என்பதால்... கண்ணீரோடு தன் கண்களை மூடி அந்த யானை சாவும். அதன் தலையும் தனியாக வெட்டியெடுக்கப்படும். வேட்டையாடப்படும் ஒவ்வொரு யானைக்குப் பின்னரும் இது போன்ற கதைகள் மறைந்திருக்கும். 

இதில் நம்மை அதிர்ச்சியூட்டும் ஒரு முக்கிய விஷயம், யானைகளின் தோல் உரித்தெடுக்கப்படுகிறது என்ற செய்தி தான். ஆம்... தந்தங்களுக்காக வேட்டையாடிய காலம் போய், அதன் தோலுக்காக அவை அதிகம் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, மியான்மர் நாட்டில் இது அதிகளவில் நடந்து வருகிறது.  மியான்மரில் , கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20ற்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டு, தோலுரிக்கப்பட்டிருக்கின்றன. 

மியான்மரில் அதிகம் வேட்டையாடப்படும் யானைகள்

கடந்த சில வருடங்களாகவே "யானைத் தோல்" கள்ளச் சந்தைகளில் புழங்கி வந்தாலும், அது மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், மிகச் சமீபமாக அதன் தேவை அதிகமாகியிருக்கிறது. இதற்கான முழுமையான காரணம் தெரியாவிட்டாலும் கூட, சில காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யானைகளின் தோல், மனிதர்களின் தோல் நோய்களுக்கான சிறந்த மருந்தாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. யானையில் தோலைக் காயவைத்து, ஒரு மண் சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். பின்னர், அந்த சாம்பலை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து கலக்கி,  தடவினால் தோல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இதை முகத்திற்குத் தடவினால், முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும், தூய்மையாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

மியான்மரில் "கோல்டன் ராக்" என்ற பகுதியில் ஒரு புத்த கோவில் இருக்கிறது. அதற்கு வெளியே இருக்கும் சாலையோர கடைகளில், யானைத் தோல் சின்ன, சின்ன துண்டுகளாக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. யானைகளின் தந்தங்கள், தோல் மட்டுமல்லாமல் அதன் மற்ற சில உடல் பாகங்களுக்கும் கூட கள்ளச் சந்தையில் பெரிய தேவை இருக்கிறது. யானையின் மயிர் கொண்டு நகை செய்துப் போட்டால், அது அதிர்ஷ்டத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்கும் என்ற நம்பிக்கை உலகின் பல நாடுகளிலும் இருக்கிறது. அதே போல், அதன் ஆணுறுப்பிற்கும், பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகப்படியான தேவை இருக்கிறது. அதேபோல், அதன் பாதத்தின் அடியில் இருக்கும் சதை கொண்டு சில உணவுகளைத் தயாரிக்கின்றனர். அது அத்தனை சுவை மிகுந்ததாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான "ரங்கூன்" படத்தில் தங்கக்கடத்தல் குறித்த சில விஷயங்களைப் பதிவு செய்திருப்பார்கள். ஆனால், யானையின் உடல்பாகங்களைக் கடத்தும் இந்த நிஜ ரங்கூன் கதை அதையே மிஞ்சும் வகையிலிருக்கும். மியான்மரின் ரங்கூன் மற்றும் மாண்டலே நகரங்களிலிருந்து தொடங்கும் இந்தக் கடத்தல் பயணம் லஷியோ, மியூஸ் வழியாக சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளை சென்றடையும். இந்த நாடுகளைச் சென்றடைய மொத்தம் 4 பார்டர்களை இந்தக் கடத்தல்காரர்கள் ஏமாற்றி கடக்க வேண்டும். யானைத் தோல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் ஒரு ஒருங்கிணைந்த கடத்தல் குழுவாக செயல்படுகிறார்கள். இந்தக் கும்பலை கட்டுக்குள் கொண்டுவர உலகளவில் பல நாடுகளும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும் கூட, இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

விற்பனைக்கு இருக்கும் பொருட்கள்

ஆப்ரிக்காவில் ஆண் யானைகளுக்கு தந்தங்கள் பெரிதாக இருக்கும் என்பதால், கடந்த காலங்களில் அவையே அதிகம் வேட்டையாடப்பட்டன. இதனால், ஆண் - பெண் யானைகளுக்கான பாலின விகிதத்தின் சமன் தவறியது. மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆராய்ச்சியில் ஆப்ரிக்காவில் சமீபகாலங்களில் பிறக்கும் யானைக் குட்டிகள் 6% வரை தந்தங்கள் இல்லாமல் பிறப்பதாக சொல்லப்படுகிறது. இது, யானைகளுக்கு எதிராக மனிதர்கள் நடத்திய தாக்குதலின் விளைவாக இயற்கையாக விளைந்த ஒரு "பரிணாம வளர்ச்சி" என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதாவது, மனிதர்களின் வேட்டையில் இருந்து தப்பிக்க யானைகள் தந்தங்கள் இல்லாமல் பிறக்கின்றன. இன்னும், எதிர்கால சந்ததியினருக்கு யானைகளுக்கு தந்தம் இருந்ததே தெரியாத வகையில் யானைகள் உருமாறலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

தோலுக்காக வேட்டையாடப்படும் யானைகள்

உலகப் புகழ்பெற்ற "ஜங்கிள் புக்" படத்தில் இப்படியொரு காட்சி வரும். குட்டிப்பையன் மெளக்லி , கருஞ்சிறுத்தையான பகீராவோடு காட்டில் நடந்து வருவான். அப்போது அங்கு வரும் யானைக் கூட்டத்தைப் பார்த்து பகீரா சொல்லும்...

" தலை குனிந்து அவர்களுக்கு மரியாதை செலுத்து. இவர்கள் தான் இந்தக் காட்டை உருவாக்கியவர்கள். தந்தத்தைக் கொண்டு அவர்கள் குழித் தோண்டிய இடத்தில் நதி உருவானது, தும்பிக்கைக் கொண்டு ஊதிய இடங்களில் இலைகள் விழுந்தன, இங்கிருக்கும் எல்லாவற்றையுமே அவர்கள் தான் உருவாக்கினார்கள். இந்த மலைகள், மரங்கள், மரங்களிலிருக்கும் பறவைகள்... ஆனால், அவர்கள் உன்னை உருவாக்கவில்லை. அதனால் தான் நீ இங்கிருந்து போய்விட வேண்டும்..." 

இது ஒரு சினிமா வசனம் தான். ஆனால், யானைகள், காடு, இயற்கை, மனிதன் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் உறவையும், முரண்பாட்டையும் மிக ஆழமாகப் பேசியிருக்கும். 

யானைகள் வாழ காடுகள் வாழும். யானைகள் வளர காடுகள் செழிக்கும். யானைகள் அழிய, காடுகள் அழியும். இது இயற்கையின் நியதி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்