பேர கணக்கு முதல் மோடி கணக்கு வரை... ஜனநாயகத்தைக் கொன்றது யார் கணக்கு!?

#MLAsForSale படுஜோராக நாடு முழுவதும் 'ட்ரெண்டாகிக்' கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவைக் கொலைசெய்தார்களோ, என்னவோ தெரியாது; ஆனால் ஜனநாயகத்தைக் கொன்று குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்.

கணக்கு

ஜெயலலிதா இறந்த பிறகு நிலைமை இப்படி மாறும் என்று யாரும் கனவிலும் நினைக்கவில்லை. யாரும் அசைக்க முடியாத தமிழகத்தின் திராவிடக் கோட்டையின் செங்கற்களை ஒவ்வொன்றாகப் பெயர்த்து எடுத்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சசிகலா-ஓபிஎஸ் இடையே நடந்த பதவிச் சண்டையில் ஆரம்பித்த இந்த விளையாட்டு இன்று 'டைம்ஸ் நவ்-மூன் டிவி' ஆதார வெளியீடுவரை வந்து சந்தி சிரிக்கிறது. 

ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் சுவீகரித்துக்கொண்ட அவரது தோழி சசிகலா, முதல்வர் நாற்காலிக்கும் கணக்குப் போட்டார். அதைவிட்டுத்தர விரும்பாத ஓ.பன்னீர்செல்வம்  திடீரென்று ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் இருக்க, அருள்வந்து சசிகலா, எதிர்ப்பக்கமாக வீறுநடை போட ஆரம்பிக்கவே, தொடங்கியது விவகாரம். 'எப்படா இடம் கிடைக்கும் கடையைப் போடலாம்' என்று காத்திருந்த பி.ஜே.பி-க்கு இதுவே போதுமானதாக இருந்தது. அடுத்தடுத்த காட்சிகளை சசிகலா அணியும், ஓ.பி.எஸ் அணியும் திட்டமிட்டுக்கொண்டிருந்த அதேநேரத்தில் பி.ஜே.பி-யும் திட்டமிட்டுக்கொண்டுதான் இருந்தது. 

ஓ.பி.எஸ் தனி அணியாகப் பிரிந்து செயல்படத்தொடங்கியது தமிழக அரசியல் களம் இன்னும் சூடுபிடித்தது. சசிகலாவுக்கு எதிர்ப்புகள் வலுக்கவும், ஓ.பி.எஸ்-சுக்கு ஆதரவு கூடவும் செய்தன. அதற்குள் சசிகலா கைதாகி சிறைக்குச் செல்ல, எடப்பாடியை முதல்வராக அறிவித்தார் சசிகலா. எடப்பாடிக்குப் பெரும்பான்மை சேர்க்க, கூவத்தூருக்கு எம்.எல்.ஏ-க்களை மொத்தமாக சிறைபிடித்துக் கொண்டு போனார்கள். கூவத்தூரில் என்ன நடக்கிறது? என்ன நடந்தது? என்று பேசிக்கொண்டிருக்க, அதற்குள் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வந்துவிட்டது. ஆர்.கே. நகர் தேர்தலில் கட்சிகள் அடித்த கூத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பிறகு ஆட்சி நடக்கிறது என்ற பெயரில் அவ்வப்போது அறிக்கைகளையும், திட்டங்களையும் மட்டுமே வெளியிட்டுக்கொண்டு, தொடர்ந்து பதவிச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது அ.தி.மு.க. ஆனால், பி.ஜே.பி-யோ தனது கணக்கை மேலும் மேலும் பலமாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த அரசியல்சார்ந்த அனைத்து விவகாரங்களுக்குப் பின்னும் பி.ஜே.பி-யின் பங்கு நிச்சயம் இருப்பதாகச் சொல்லலாம். இத்தனை நாட்கள் கழித்து கூவத்தூர் காட்சி அம்பலமாகியிருப்பது வரை அது நீள்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு, கூவத்தூர் விடுதியில் சிறைவைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ-க்களுக்கு கோடிகளில் பேரம் பேசப்பட்டதையும், பணம் கொடுக்கப்பட்டதையும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கடந்த 12-ம் தேதி ஆதாரத்துடன் வெளியிட்டது. இந்த வீடியோ ஆதாரத்தை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தது மூன் டிவி-யின் ஆசிரியர் மற்றும் இயக்குநர் ஷாநவாஸ் கான்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த ஷாநவாஸ் கான், "கூவத்தூரில் என்ன நடக்கிறது என்று தெரிஞ்சுக்க எல்லாருமே ஆவலா இருந்தாங்க. நாங்க அதை 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலமா பண்ணலாம்னு திட்டமிட்டோம். அப்போதான் அங்கிருந்து முதலில் தப்பி வந்தார் சரவணன். நாங்க அவரை டார்கெட் பண்ணோம். சில சோர்ஸ் மூலமா அவரை அணுகியபோது, அவர் பேசத் தயாராக இருந்தார். நாங்க ஸ்டிங் ஆப்ரேஷனுக்கு தயாரானோம். ஆறு நாட்களுக்கும் மேல் அவரிடம் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தினோம். அவர் அங்கு நடந்த அனைத்தையும் கூறினார்" என்றார். 

அதை ஏன் இவ்வளவு நாட்களாக வெளியிடாமல் வைத்திருந்தார், எதற்காக அவர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு இதைத் தர வேண்டும் போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்படவும் இல்லை. அவர் சொல்லவும் இல்லை. சரி அந்த வீடியோ ஆதாரத்துக்கு வருவோம்.

அந்த வீடியோ ஆதாரத்தில் மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் ஷாநவாஸுடன் பேசியது இதுதான்; "கூவத்தூர் புறப்படும்போது 2 கோடி தருவதாக ஆரம்பித்த பேரம், பிறகு 4 கோடி ஆனது. கூவத்தூர் விடுதியை அடைந்த போதெல்லாம் பேரம் 6 கோடி ஆகிவிட்டது. என்னடா இது கூடிக்கொண்டே போகிறது என்று நினைத்தேன். பின்னர் 'பணமாகக் கொடுக்க முடியாது. அதனால் தங்கக்கட்டிகளாக வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார்கள். பணமாகக் கொடுத்தாலும் தங்கம்தான் வாங்கப் போகிறோம்; தங்கமாகவே கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லையே என்று வீட்டுக்கு போன் போட்டுச் சொல்லிவிட்டேன்” என்று தான் ஏதோ சினிமா படத்தின் கதையைச் சொல்லிக்கொண்டிருப்பதுபோல் சிரித்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருக்கிறார். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு 6 கோடியும், பிற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-க்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு தலா 10 கோடி ரூபாயும் கொடுக்கப்பட்டதாக அதில் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ ஆதாரம் வெளியானதுதான் தாமதம் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார் தி.மு.க செயல்தலைவர் மு.க. ஸ்டாலின். இவரும் அவரது தந்தையைப் போலவே 'பழம் நழுவிப் பாலில் விழும்' என்று காத்துக்கொண்டிருந்தார். ஆட்சியைக் கலைக்க இது போதும் என்று அவர் தயாராகிவிட்டார். “ஆட்சிக்குப் பேரம் பேசியது இந்த வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், அ.தி.மு.க ஆட்சியாளர்கள் தமிழகத்தின் பெருமையை இந்திய அளவில் சீரழித்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியின் அரசு, ஊழல் பணத்தில்தான் இந்த ஆட்சியை "கொள்முதல்" செய்திருக்கிறது. இதை ஆரம்பத்திலிருந்தே திமுக பல்வேறு தளங்களில் கூறி வந்திருக்கிறது. யார் யாருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது, சொன்னது எவ்வளவு? தந்தது எவ்வளவு? தராமல் போனது எவ்வளவு? இரு அணிகள் தரப்பிலும் நடத்தப்பட்ட பேரம், அணிமாறி வந்தால் அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை போன் அனைத்தும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்தே ஒப்புதல் வாக்குமூலமாக வெளிப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஆட்சியில் இருக்கும் அணியும், ஆட்சியை இழந்த அணியும் எந்தளவுக்கு ஜனநாயகத்தை விலை பேசியிருக்கின்றன என்பது அம்பலமாகியுள்ளது. உத்தமர்போல வேடம் போட்டு தியானம், தர்மயுத்தம் என்று நாடகம் போட்டவர்களும், சமாதியில் சபதம் செய்தவர்களும் எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ள மக்கள் விரோத அ.தி.மு.க அரசு, இனியும் நீடிப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகும். இதுகுறித்து நீதிமன்றத்திலும் விரைவில் கூடவுள்ள சட்டமன்றத்திலும் மக்களின் நம்பிக்கை பெற்ற எதிர்க்கட்சியான தி.மு.க தன் பங்களிப்பைச் செய்யும். ஆளுநர் முதல் குடியரசுத்தலைவர் வரை இந்திய அரசியல் அமைப்புக்குட்பட்ட அனைத்து உயர்பொறுப்புகளில் உள்ளோரிடமும் இதுகுறித்து முறையிடப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களின் பேராதரவுடன் இந்த ஆட்சியை அகற்றும் ஜனநாயகப் போரை தி.மு.க தலைமையேற்று வழிநடத்தும்” என்று பேசியுள்ளார் ஸ்டாலின். 

ஆனால், அனைத்தையும் அமைதியாகக் கவனித்துக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. யார் என்ன வேண்டுமானாலும் பேசட்டும், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால் இறுதியாக நடக்கப்போவதை மத்திய அரசே தீர்மானித்துக்கொண்டிருக்கிறது. சென்னை ஜார்ஜ் கோட்டையில் பி.ஜே.பி-யின் நிலைநிறுத்துவோம் என்று இருதினங்களுக்கு முன் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை பேசியது நினைவுக்கு வருகிறது. பார்க்கலாம் யாருடைய கணக்கு ஜெயிக்கிறது என்று!

ஆனால் என்ன பாவம் செய்ததோ தமிழ்நாடு, இப்படியொரு கீழ்த்தரமான அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலைப் பார்த்துக்கொண்டு ஓட்டுப்போட்ட நாமெல்லாம் ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருப்பதைவிட கொடுமை வேறுஎன்ன இருக்கப் போகிறது. இதுதான் ஜனநாயகமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!