வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (14/06/2017)

கடைசி தொடர்பு:10:31 (14/06/2017)

பவானியாற்றில் செத்து மிதக்கும் மீன்களின் ரத்தம் உங்கள் ஆடையில் படிந்திருக்கிறதா?!


பவானி

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், காவிரிப் பிரச்னை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த சமயம். பெங்களூருவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழகப் பேருந்துகளும், பல லாரிகளும் கன்னடர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன. கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட வேதிகே அமைப்பினர் தமிழர்களை அடித்துத் துன்புறுத்தி.. அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். அதிர்ந்துபோனது தமிழகம். தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தமிழக எல்லையில் ஜெயலலிதாவின் உருவப்பொம்மைக்குப் ‘பாடை கட்டி’  போராட்டம் நடத்தினார்கள் கன்னடர்கள். பதிலுக்கு, 'தமிழகத்திலும் கன்னடர்களைத் தாக்குவோம்’ என்று தமிழ் அமைப்புகள் கொந்தளித்தன. கன்னடர்களின் காட்டுமிராண்டித்தனத்தைப் பலரும் கண்டித்துக்கொண்டிருந்த சயமத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த வாட்டாள் நாகராஜ் தமிழர்களைப் பார்த்து இப்படிச் சொன்னார்.. “காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்க முடியாது. காவிரி கர்நாடகத்தில் ஓடுவதால்தான் அது சுத்தமாக இருக்கிறது. அதுமட்டும், தமிழகத்துகுள் ஓடினால் இந்நேரம் அது சாக்கடையாகியிருக்கும். நீங்கள் சாக்கடையாக ஆக்கியிருப்பீர்கள்.” 

வாட்டாள் நாகராஜின் எல்லாக் கருத்துகளுக்கும் எதிர்வாதம் செய்து கொந்தளித்துக்கொண்டிருந்த தமிழர்களால் அப்போது, பதில் பேச முடியவில்லை. ஏனென்றால், நம்முடைய நீர் மேலாண்மை அப்படி! இருந்த ஏரிகள், ஆறுகள், குளங்களையெல்லாம் அழித்துவிட்டு, ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருக்கும் நம்மால், அந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்ல முடியும்? கேட்டவர் வேண்டுமானால் தவறானவராக இருக்கலாம். ஆனால், கேட்கப்பட்ட கேள்வி? நாம் எப்போதும் அப்படித்தான். வேறு வழியே இல்லை என்றான பிறகுதான் போராடவே வருகிறோம். அப்போதுகூட அது சரியில்லை... இது சரியில்லை என்று ஏகத்துக்கும் பேசுவோம். நாம் சரியா என்று பார்ப்பதே இல்லை. 'கர்நாடகக்காரன் தண்ணி தரமாட்டேங்குறான்; கேரளக்காரன் தண்ணி தரமாட்டேங்குறான். தமிழன்னா என்ன இளிச்சவாயனா?  தமிழ்நாட்டைத் தனியா பிரிச்சுக் கொடுத்திருங்க. நாங்க பாத்துக்குறோம்' என்றெல்லாம்கூட முழங்குவோம். ஆனால், இங்கே இருக்கும் தண்ணீரைக் காப்பாற்ற நாம் இதுவரை என்ன செய்தோம்? இதோ.. இப்போது பவானி ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுகளால் கொத்துக்கொத்தாக மீன்கள் செத்து மிதந்துகொண்டிருக்கின்றன.

பவானி

பவானியின் குறுக்கே வெள்ளிப்பாளையம் என்னுமிடத்தில் நீர்மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் ஒரே நேரத்தில் செத்து மிதந்தன. எவ்வித தடையுமின்றி ஆலைக்கழிவுகள் ஆற்றில் கலக்கவிடப்படுவதால் தொடர்ச்சியாகப் பவானி ஆற்று நீர் மாசடைந்து வந்தபோதிலும் இதுவரை யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. நீரோட்டத்தால்  மக்களுக்கும் அதன் அபாயம் தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் இரு இடங்களில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. ஆற்றின் ஓட்டம் தடுக்கப்பட்டுபோதுதான் தெரியவந்திருக்கிறது, எவ்வளவு கழிவுகள் பவானிக்குள் பாய்ச்சப்படுகின்றன என்ற உண்மை. நீரின் நிறமே மாறி விஷமாகிப்போனதால், பவானியில் உயிர்வாழ்ந்த கட்லா, ரோகு, ஜிலேப்பி, அவுரி எனப் பல வகையான மீன்கள் பல்லாயிரக்கணக்கில் மடிந்து மிதக்கின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உற்பத்தியாகும் பவானி, கேரளக் காடுகளைக் கடந்து மேட்டுப்பாளையம் வழியாகத் தமிழகத்தினுள் நுழைகிறது. கேரளக் காடுகள்வரை தூய்மையாய் மூலிகை மணத்துடன் பாய்ந்துவரும் பவானியைச் சாயக்கழிவுகளோடுதான் வரவேற்கிறது தமிழகம். மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயனக்கழிவுகள் அனைத்தும் பவானி ஆற்றில் சட்டத்துக்குப் புறம்பாகக் கலந்துவிடப்படுகின்றன. கோவை, ஈரோடு, திருப்பூர் என மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமே பவானிதான் எனும்போதும், தாங்களும் அதில்தான் தாகம் தீர்த்துக்கொள்கிறோம் என்ற அடிப்படை உணர்வே இல்லாது இங்குள்ள அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மெத்தனப்போக்கோடு இருந்ததன் விளைவு இது. மீன்கள் வாழமுடியாதபடி நச்சுத்தன்மையாக மாறியிருக்கும் தண்ணீரை மக்கள் குடித்தால் என்னவாகும் என்ற சுயசிந்தனைகூட இங்கு யாருக்கும் இல்லை. இன்றைக்கு மீன்கள்... நாளைக்கு? 

 பவானி

மீன்கள் செத்துமிதக்கின்றன என்ற தகவல் கிடைத்த பிறகு, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் ரங்கராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆற்றின் கரையோரப் பகுதிகளை ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அழிவு வந்த பிறகு ஆய்வு நடத்துவதற்குத்தான் நம் அதிகாரிகள்தான் தயாராக இருப்பார்களே! பவானி ஆற்றின் குறுக்கே அணைகட்ட கேரள அரசு முயன்று வருகிறது. அப்படி அணை கட்டினால்  கொங்குமண்டல விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் என்று விவசாயிகள் போராடிவரும் சூழலில் பவானியில் கழிவுகளைக் கலப்பதைத் தடுக்காமல் இருப்பது நம் விரலாலேயே நம் கண்ணைக் குத்திக்கொள்வதைப்போல!

காவிரிக்காகப் போராடும்போது கர்நாடகத்திலிருந்து வாட்டாள் நாகராஜ் கேட்டதைப்போல, நாளைக்குப் பவானிக்காகப் போராடும்போது கேரளாவிலிருந்து வேறு எந்த நாகராஜாவது வந்து கேட்பார். அப்போதும் தலையைக் குனிந்துகொண்டு... 'எங்களுக்குத் தண்ணீர் வேண்டும்' என்றுதான் சொல்லப்போகிறோமா?


டிரெண்டிங் @ விகடன்