இன்னும் எத்தனை நாட்களுக்கு வெப்பம் இருக்கும் தெரியுமா?

வெப்பம்

மிழகம் முழுவதும் இந்த கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகியது. சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அனல் காற்றும் வீசியது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிக வெப்பம் இருந்ததால், அதன் தாக்கத்தால் தமிழகத்தில் அனல் காற்று வீசியது.

மூன்று நாட்களுக்கு வெயில் இருக்கும்

இந்த ஆண்டு கடந்த மே 4-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் வாட்டி வைத்தது. அக்னி நட்சத்திர காலம் முடிவடைந்த நிலையிலும் வெயில் கடந்த ஜூன் 6ம் தேதி வரை வெயில் வாட்டி வைத்தது. இதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீடிக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக கடந்த வாரம் 7-ம் தேதி திடீரென வெப்பம் குறைந்தது. தொடர்ந்து சில நாட்கள்  வெப்பத்தின் தாக்கம் குறைந்தே இருந்தது. இப்போது மீண்டும் கடந்த 11-ம் தேதி முதல் வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்த போதிலும், சென்னையில் சிறு தூறல் தவிர பெரும் அளவில் கோடை மழை பெய்யவில்லை.  மீண்டும் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரனிடம் கேட்டோம். "இன்னும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன் பிறகு வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பிருக்கிறது. சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இப்போதைக்கு மழைக்கும் வாய்ப்பு இல்லை"  என்றார்.

இரண்டு மாவட்டங்களில் மிக அதிக மழை

தமிழகத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்திருக்கிறது. திருநெல்வேலி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், கோவை, திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய இடங்களில் இயல்பான மழை அளவு பதிவாகி உள்ளது. ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட மிக அதிக மழை பெய்துள்ளது. மதுரை, தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக மழை பெய்திருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வழக்கத்தை விட மிகக் குறைவாக மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், நாகபட்டினம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாக மழை பெய்திருக்கிறது.

தொடர் வறட்சி

தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்த து ஓரளவுக்கு ஆறுதலைத் தந்திருக்கிறது. ஆனால், இது போதுமான அளவுக்கு இல்லாததால் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் வறட்சியில் சிக்கித் தவிக்கிறது.  தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு கடந்த 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. எனவே, பெய்யும் மழை மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி ஒரு சிலர் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் விவசாயம் செய்கின்றனர். வடகிழக்குப் பருவமழை, கோடை மழை இரண்டும் ஏமாற்றி விட்ட நிலையில் தென்மேற்கு பருவமழையாவது சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதற்கு இயற்கைதான் பதில் சொல்ல வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!