வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (14/06/2017)

கடைசி தொடர்பு:12:53 (14/06/2017)

அதிகரித்த கர்நாடக விவசாய நிலங்கள்... பறிகொடுத்த தமிழகம்... காவிரி செய்த மாற்றம்!

சேலம் மாவட்டம், மேட்டூரில் 1934-ம் ஆண்டுக் கட்டப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம்தான் இந்த மேட்டூர் அணை. மொத்தமாக 124 அடிவரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம். மொத்தமாக 124 அடிக்கு 9,347 கோடி கன அடி நீரைத் தேக்கிவைக்க முடியும். ஒரு டி.எம்.சி தண்ணீர் குறைந்தால் 1.25 அடி தண்ணீர் குறையும். ஓர் அடி தண்ணீர் குறைந்தால் 0.75 டி.எம்.சி தண்ணீர் குறையும். இந்த மேட்டூர் அணை கட்டப்பட்டதின் முக்கிய நோக்கமே அடிக்கடி வெள்ளம் வந்து காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு அதிகமான பயிர் சேதம் ஏற்படுகிறது, என்பதால்தான்...ஆனால் இன்று டெல்டா முழுவதுமாகப் பயிர் வளர்ச்சிக்காக நம்பியிருப்பதும் இந்த அணையைத்தான். கடந்த ஆண்டு ஏற்பட்ட பருவமழை பற்றாக்குறையின் காரணமாகத் தமிழகம் மிகப்பெரிய வறட்சியைச் சந்தித்தது. இதனால் மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாமல் வறட்சியைச் சந்தித்தது. அதேபோல எந்த ஆண்டும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு விவசாயிகள் தற்கொலையும் அதிகமாக இருந்தது. ஆனால் அரசு வெறும் 17 பேர் மட்டுமே வறட்சியால் உயிரிழந்தவர்கள் எனக் கணக்குக் காட்டியது.

காவிரி பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் வறண்ட மேட்டூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டு முழுவதும் ஜூன் 12-ம் தேதி முதல் காவிரி டெல்டா பகுதிக்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்பட மாட்டாது என முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நேற்றைய நிலவரப்படி 23 அடியாகத் தண்ணீர் கொள்ளளவு இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 90 அடியாகவும், 10 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வரத்து இருந்தால் மட்டுமே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட முடியும். இதுதான் அரசின் சார்பில் சொல்லப்படும் காரணம்... உண்மைதான் என்றாலும் கடந்த ஐந்து வருடங்களில் 28 லட்சம் ஏக்கர் நிலங்களில் விளைந்த நெல்லானது இப்போது 14 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பாகக் குறைந்து விட்டன. அந்த 14 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு இன்னும் குறைவுதான். அதிலும் இந்த ஆண்டு டெல்டாவில் 90 சதவிகிதம் நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் டெல்டா எப்படி இருக்கிறது என்று...

வறண்ட மேட்டூர் அணை

டெல்டாவின் முப்போகத்திற்கு மொத்தமாக ஜனவரி 28-ம் தேதி வரை 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். இந்தப் பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்கள் பாசனம் பெறும். நிலத்தைத் தயார் செய்து வைத்திருந்த விவசாயிகளும் தற்போது கலக்கத்திலும் ,கவலையிலும் இருக்கிறார்கள். கடந்த 2011-ம் ஆண்டுதான் கடைசியாகக் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணைக்குக் காவிரியிலிருந்து போதுமான தண்ணீர் வர வேண்டும். அப்போதுதான் அந்த அணையைத் திறக்க முடியும். ஆனால், கடந்த ஆண்டுக் கர்நாடகா போதுமான தண்ணீரை கொடுக்கவில்லை. அதற்காக ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளவில்லை. கர்நாடகாவில் 6 லட்சம் ஏக்கராக இருந்த நிலப்பரப்பு, 18 லட்சம் ஏக்கராக உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் மாண்டியா மாவட்டத்தில் ஏற்பட்ட விவசாயிகளின் தற்கொலையை முடிவுக்குக் கொண்டு வந்து, காவிரி விவகாரத்தில் பிடிவாதமாக இருந்து தனது விவசாயப் பரப்பினை உயர்த்தியிருக்கிறது கர்நாடகா. தமிழ்நாட்டில் வறட்சிக்கான நிவாரணம் என்ற பெயரில் ஒரு தொகையை அறிவிக்கிறார்கள் ஆட்சியாளர்கள்... அது முழுமையாக விவசாயிகளின் கைகளுக்குப் போய்ச் சேருமா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

தற்போது கூடக் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்காததால் 56.92 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு. தற்காலிகமாகத் தீர்வுகாண முயற்சி செய்தாலும், இது டெல்டா விவசாயியின் கைக்கு முழுவதுமாகப் போய்ச்சேராது, விவசாயிக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுக்காது. இப்போது நிலத்தைத் தயாராக வைத்திருக்கும் விவசாயிக்குத் தேவை நிரந்தரத் தீர்வுதான். ஆனால் தற்போது கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு வேளை தண்ணீரை விட்டால் விவசாயப் பகுதிகள் செழிக்குமோ, மீத்தேனை எடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மத்திய அரசு தடுத்து வைத்திருப்பதாகவும் நினைக்கத் தோன்றுகிறது. அதே போலக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டால் மணல் அள்ள முடியாது என்ற காரணத்தால் நீங்கள் காவிரிப் பிரச்னையில் அக்கறை காட்டவில்லையோ என்றும் எண்ணம் தோன்றுகிறது. இறுதியாக, எந்த அரசாங்கமும் எடுக்கும் முடிவு நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆளும் எந்த அரசும் தற்காலிகமாகப் பிரச்னைகளைத் தவிர்க்க நிதிகளை ஒதுக்கி அதிகாரிகளை வாழவைத்துவிட்டு விவசாயிகளை வஞ்சிக்கத்தான் செய்திருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாய நிலப்பரப்பு ஆட்சியாளர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் லாபத்துக்காக 6 லட்சம் ஏக்கராகச் சுருங்கிப்போனது... ஆனால் கர்நாடகாவின் வளர்ச்சி 6 லட்சம் ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் இருந்து 18 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பாக அதிகரித்துள்ளன. நீங்கள் கொடுக்கும் பணத்தை வைத்துக் கொண்டு எந்தப் பயிரையும் எளிதில் உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களும், ஆண்ட அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டை ஆளாக்கவில்லை... பாழாக்கிவிட்டார்கள் என்பது நெற்றிப் பொட்டில் அறையும் நிஜம்.


டிரெண்டிங் @ விகடன்