வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (13/06/2017)

கடைசி தொடர்பு:10:01 (14/06/2017)

'எடப்பாடி பழனிசாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவியுங்கள்!’ - வலுக்கும் எதிர்ப்பு

எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம். எல்.க்கள்

அ.தி.மு.க-வில் நடக்கும் அரசியல் காய் நகர்த்தல்கள் என்பது தமிழக அரசியலில் இதுவரை நடந்திருக்குமா என்பதுகூடத் தெரியவில்லை. திரைப்படங்களையும் மிஞ்சும் அளவுக்குச் சற்றும் கற்பனை செய்ய முடியாத அளவிலான காட்சிகள் தினம்தினம் அறங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மரணத்தையடுத்து சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. அதன்பின்னர் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்குச் செல்வதற்கு முன், கூவத்தூரில் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில், அவரது தலைமையில் அங்கு நடந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், எடப்பாடி பழனிசாமியும், அவரது துறை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் பெரும்பான்மையைக் காட்டுவதற்காகச் சசி ஆதரவு ஏம்எல்ஏ-க்கள் தொடர்ந்து கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஒவ்வொரு எம்எல்ஏ-க்கும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க சசிகலா அணி திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. அது மட்டுமின்றிச் சில எம்எல்ஏ-க்களை மிரட்டி அடைத்து வைத்திருந்ததாகவும் புகார் எழுந்தது. இப்படியான அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில், மதுரை தெற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் மாறுவேடமிட்டு அந்த ரிசார்ட்டில் இருந்து தப்பிச்சென்று ஓ.பன்னீர்செல்வம் அணியில் போய் இணைந்தார். அப்படி அவர் இணைந்தபோது... தாம் மிரட்டப்பட்டதாகக் கூறி அதிர்ச்சியளித்தார். இதனால் சசிகலா அணி நகர்த்திய அரசியல் காய்நகர்த்தல்கள் அனைத்தும் கிட்டத்தட்ட உறுதியாயின.

ஜெயராம் வெங்கடேசன் இந்த நிலையில் சசிகலா அணியில் எம்எல்ஏ-க்களைச் சேர்ப்பதற்காகப் பலகோடி பேரம் நடந்ததாக எம்எல்ஏ., சரவணன் பேசிய வீடியோவைத் தனியார் தொலைக்காட்சி ஒன்று தற்போது வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா அணி நடத்திய அந்தப் பேரம் குறித்து எம்எல்ஏ., சரவணன் அதில் பேசியுள்ளதாகவும், மூன்று எம்எல்ஏ-க்களுக்கு அவர்கள் பணம் கொடுத்ததாகவும் அதில் அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சொந்த ஊரில் இருந்து வந்த எம்எல்ஏ-க்களை விமான நிலையத்தில் மடக்கிய சசிகலா அணி, அவர்களை அங்கிருந்து பேருந்தில் ஏற்றியபோது அவர்களுக்குத் தலா 2 கோடி ரூபாய் என பேரம் பேசியதாகவும், பின்னர் எம்எல்ஏ விடுதியில் இருந்து ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோது அந்தப் பேரம் 4 கோடி ரூபாயாக உயர்ந்தது என்றும், அதன்பிறகு கூவத்தூர் சேர்ந்தபோது 6 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தனர் என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்ட அந்த வீடியோ பதிவை சரவணன் மறுத்துள்ளதுடன், ''பேரம் பேசியதாகப் பேசும் நபர் நான் அல்ல'' என்றும் கூறியுள்ளார். இப்படி மீண்டும் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அறப்போர் இயக்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்யக் கோரி ஆளுநரை அணுகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ள அந்த வீடியோ ஆதாரத்துடன், அறப்போர் இயக்கத்தினர் தமிழக ஆளுநர் அலுவலகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்யக் கோரி மனுக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "தனியார் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் சசிகலா தரப்பினர் எம்எல்ஏ-க்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததைத் தெளிவாக வெளியிட்டுள்ளனர். எனவே, நடந்து முடிந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுக் கொடுத்துள்ளோம். சசி ஆதரவு எம்எல்ஏ-க்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறபோது 278 கோடி ரூபாயில் இருந்து 1,340 கோடி ரூபாய் வரை கறுப்புப் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவ்வளவு பணம் எப்படி வந்தது உள்ளிட்ட தகவலைவைத்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளோம். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயல்களைச் செய்துள்ள இவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை வேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பைச் செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்துள்ளோம்'' என்றார். 

இன்னும்... என்னென்ன விஷயங்கள் வெளிவரப்போகின்றதோ? 


டிரெண்டிங் @ விகடன்