சிவாஜியை அவமதித்த ஜெயலலிதா! : “இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட் பாகம் : 3

ரஜினி தொடர்

1991 சட்டசபைத் தேர்தலின்போது, ராஜீவ் காந்தி படுகொலையில் எழுந்த அனுதாப அலையில், எதிர்க்கட்சிகளை எல்லாம் வாரிச் சுருட்டி வீசிவிட்டு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, 'எல்லாமே நான்’ என்கிற அதிகார தோரணையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். அதனால் எல்லா பக்கத்திலும் இருந்து எதிர்ப்பு. எந்தத் திட்டத்திலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொண்டார். ஜெ.ஜெ அரிசி, ஜெ.ஜெ போக்குவரத்துக் கழகம் என எல்லாத் திட்டங்களிலும் ஜெயலலிதாவின் பெயர்தான் இடம் பெற்றன. அந்த வரிசையில், திரைப்பட நகருக்கும் தன் பெயரையே ஜெயலலிதா சூட்டிக் கொண்டபோது பிரச்னையானது.

1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், ‘திரைப்பட நகர்’ ஒன்றை அமைக்க முடிவு செய்து சென்னையை அடுத்த தரமணியில் இடம் தேர்வு செய்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த உபேந்திராவை அழைத்து வந்து, திரைப்பட நகருக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், திரைப்பட நகர் உருவாவதற்கு முன்பே தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு வந்த ஜெயலலிதா, அந்தத் திரைப்பட நகரைக் கொண்டு வர முயன்றார். சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திரைப்பட நகரில், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட படப்பிடிப்பு அரங்குகள், பரந்தப் புல்வெளி, காவல் நிலையம், கிராமம், குளம், தோட்டம், சாலை, கோயில், அங்காடித் தெரு என அத்தனையையும் திரைப்பட நகருக்குள் வடிவமைத்தார்கள். ஒரு படத்தின் மொத்தக் காட்சிகளையும் திரைப்பட நகருக்குள்ளே எடுத்துவிடும் அளவுக்குத் தரமணி திரைப்பட நகரம் உருவானது. பெரும் பொருள் செலவில், உருவாக்கப்பட்ட அந்த திரைப்பட நகருக்கு ‘ஜெ. ஜெ திரைப்பட நகர்’ எனப் பெயர் சூட்டினார்கள். 

ரஜினி

‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ எனப் பெயர் சூட்டப்பட்டதுமே கோடம்பாக்கம் கொதிக்க ஆரம்பித்தது. ‘எம்.ஜி.ஆர் பெயரைத் திரைப்பட நகருக்குச் சூட்ட வேண்டும்’ எனத் திரையுலகத்தினர் கோரிக்கை வைத்தார்கள். அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, ‘ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர்' எனப் பெயர் சூட்டினார். இதன் திறப்பு விழா 1994-ம் ஆண்டு நடைபெற்றது. ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’யைத் திரையுலகம் எதிர்த்த நேரத்தில், ரஜினியும் கடும் கோபத்தில் இருந்தார். எம்.ஜி.ஆரின் பெயரையோ அல்லது சிவாஜியின் பெயரையோ வைத்திருக்க வேண்டும் என ரஜினி விரும்பினார். அந்தத் திரைப்பட நகர் தொடக்க விழாவிலும் முக்கிய சினிமாப் புள்ளிகள் புறக்கணிக்கப்பட்டனர். காரணம் ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டியதற்கு கோடம்பாக்கம் எதிர்ப்பு காட்டியதால், தங்களுக்கு  மரியாதை தரப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ திறப்பு விழாவிலும் ஜெயலலிதா புராணம்தான் பாடினார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க மூலம் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட மனம் வரவில்லை. தன்னுடையக் கோபத்தை வெளிக்காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதற்கான நேரமும் வந்தது. எந்த ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’யில் சிவாஜி அவமதிக்கப்பட்டாரோ, அதே சிவாஜிக்கு நடந்த ஒரு விழாவில், ஜெயலலிதாவோடு மேடையேறினார் ரஜினி.

சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது ரஜினி என்ன பேசினார்?

- தொடரும்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தை படிக்க க்ளிக் செய்யவும் 

என்ன ஆனது ஃபிலிம் சிட்டி!

‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ உருவானப் பிறகு நிறைய படப்பிடிப்புகள் அங்கே நடந்தன. ஆனால், அதுவும் கொஞ்ச காலத்துக்குத்தான். பராமரிப்பு இல்லாமல், ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ மோசமான நிலைக்குப் போனது. பார்வையாளர்கள் மட்டும் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். அடுத்து வந்த தி.மு.க ஆட்சியில், ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’யை 'எம்.ஜி.ஆர் திரைப்பட நகர்' என பெயர் மாற்றினார்கள். பெயர்தான் மாறியதே தவிர திரைப்பட நகர் தொடர்ந்து சுகவீனத்தில்தான் இருந்தது. திரைப்பட நகரால், எதிர்பார்த்த வருமானம் அரசுக்குக் கிடைக்கவில்லை. ‘ஃபிலிம் சிட்டி’யை விரிவாக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 40 ஏக்கர் நிலம் கூட பின்னர் ‘டைடல் பார்க்’குக்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியை நிரந்தமாக மூடினார்கள். ‘எம்.ஜி.ஆர். அறிவியல் நகர்’ உருவாக்கப்படும் என்றார்கள்... அதுவும் அவ்வளவுதான்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!