வெளியிடப்பட்ட நேரம்: 21:05 (14/06/2017)

கடைசி தொடர்பு:21:22 (14/06/2017)

'இதற்காகத்தான் கர்ணனைக் குறிவைக்கிறார்கள்...!' கலங்கும் நீதிபதி கர்ணனின் தம்பி

கர்ணன்

 

நீதிமன்ற வரலாற்றில் இப்படியான வாதங்களும், உத்தரவுகளும் இதுவரை நடந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். நீதிபதி கர்ணனுக்கும், உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடையே நடந்த மோதல் விவகாரத்தைத்தான் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை போலீஸார் தேடிக்கொண்டிருந்த நிலையில், அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த ஓய்வு அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்துமா? அல்லது தண்டனையில் இருந்து தப்ப வழிபிறக்குமா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கர்ணத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன்.1955 ஆம் ஆண்டில் பிறந்த கர்ணன், தனது பள்ளிக்கல்வியை ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியில் பயின்றார். தலித் சமூகத்தைச் சேர்ந்த அவர், இளமைக்காலத்திலேயே தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய கர்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததோடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்த புகார் கடிதம் ஒன்றையும் பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைத்தார் கர்ணன். இதில் இருந்துதான் அவருக்கும் மற்ற நீதிபதிகளுக்குமான மோதல் தொடங்கியது. 

நீதிபதிகளும், கர்ணனின் அதிரடி உத்தரவுகளும்! 

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அதுமட்டுமன்றி, இந்த வழக்கில் கர்ணன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 31 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்  கர்ணன். அப்போது உச்ச நீதிமன்றம், கர்ணன் விளக்கம் அளிக்க நான்கு வாரகால அவகாசம் கொடுத்ததோடு, "நீதிமன்றப் பணிகளில் கர்ணன் ஈடுபடக்கூடாது" என்று உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்தார். அதற்கு நீதிபதி கர்ணனுக்கு, 4.5.2017 ஆம் தேதிக்குள் மனநலப் பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை வரும் 8.5.2017 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவைக்கண்டு அஞ்சாத நீதிபதி கர்ணன், ''இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகளுக்குத்தான் மனநலப் பரிசோதனை நடத்த வேண்டும்' 'என பதில் உத்தரவு பிறப்பித்தார். இப்படி இரண்டு தரப்பும் அடுத்தடுத்து உத்தரவுகளைப் பிறப்பித்து பரபரப்பை அதிகரித்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனை கைது செய்யுமாறு, கடந்த மாதம் 9 ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது கர்ணன் சென்னையில் இருந்தார். அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, சொந்த ஊருக்குவந்த கர்ணனை கைதுசெய்ய மேற்குவங்க மாநில போலீஸார் சென்னை வந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனை அறிந்த நீதிபதி கர்ணன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தடா பகுதிக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது. அதன் பின்னர் கர்ணன் தலைமறைவாக இருப்பதாகவும், அவரைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறுவதாகவும் தகவல் வெளியானது. அவரைப் பிடிக்க உத்தரவு பிறப்பித்து 35 நாள்களைக் கடந்துவிட்ட நிலையில், மேற்கு வங்கப் போலீஸார் தமிழக போலீஸாரின் உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜூன் 12 ஆம் தேதி நீதிபதி கர்ணன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பொதுவாக நீதிபதிகள் ஓய்வுபெறும்போது, பார்கவுன்சில் மற்றும் சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சார்பில் வழியனுப்புவிழா நடத்தப்படும். ஆனால், இந்திய வரலாற்றில் ஒரு நீதிபதியைக் கைது செய்யக்கோரியும், அவர் தலைமறைவாக இருக்கும்போதே ஓய்வுபெற்றதும் இதுவே முதல்முறையாகும்.

"ஆண்டவனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்பார்"

நீதிபதி கர்ணன் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவரின் சகோதரரும், வழக்கறிஞருமான அறிவுடை நம்பியிடம் பேசினோம். "எங்களுடைய குடும்பம் மிகவும் எளிமையானது. அப்பா ஆசிரியராக இருந்தவர். விவசாயமும் செய்து வந்தோம். இளமையிலேயே சாதிய அடக்குமுறைக்கு எதிராக அண்ணன் குரல் கொடுத்துள்ளார். பெரியாரையும், அம்பேத்கரையும் பார்த்து படித்து வளர்ந்தவர் அவர். ஒருமுறை டீக்கடையில் டீ குடித்தப் பின்னர், அவர் குடித்த கிளாசை, கழுவி வைத்துவிட்டுச் செல்லுமாறு கடை உரிமையாளர் கூறினார். இதனால், கடும்கோபடைந்த அண்ணன், அந்தக் கிளாசை அங்கேயே போட்டு உடைத்து கோபத்தை வெளிப்படுத்தியதுடன், கடை உரிமையாளரையும் கடுமையாக எச்சரித்துவிட்டு வந்தார். இதுபோன்று எதற்கும் அஞ்சமாட்டார். 

நீதிமன்றப் பணிகளுக்கு வந்தபோதும், சாதிய அடிப்படையிலான தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டவர். அதற்காகப் பலமுறை எதிர்த்துக் குரல்கொடுத்துள்ளார். இதனால், அண்ணனை சில நீதிபதிகளுக்குப் பிடிக்காது. அவரைப் பல நிலைகளிலும் ஒடுக்கினார்கள். அவற்றையெல்லாம் எங்களிடம் சிலநேரத்தில் அவர் சொல்லி வருத்தப்படுவார். என்றாலும், ஆண்டவனே தவறு செய்தாலும் தட்டிக் கேட்கும் குணம்கொண்டவர். தற்போது, அவருக்கு எதிரான இந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ, அவ்வாறுதான் அதனை எதிர்கொண்டுவருகிறார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது" என முடித்துக் கொண்டார். 

தீர்ப்பு முகாந்திரம் இல்லாமல் போகலாம்

"கர்ணன் ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவருக்கு எதிரான வழக்கில் சிக்கலை ஏற்படுத்துமா? " என ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி ஹரிபரந்தாமன்பரந்தாமனிடம் கேட்டோம். அப்போது, "நீதிபதி கர்ணன் நீதிமன்ற அவமதிப்பு குற்றம்புரிந்தவர் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அந்த உத்தரவைப் பிறப்பித்த ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, விளக்கமான தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தது. இந்தநிலையில் ஏழு நீதிபதிகளில் பினாகி சந்திர கோஷ் ஓய்வுபெற்றுள்ளார். எழுதப்பட்ட தீர்ப்பில் அவர் கையெழுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கர்ணனை கைதுசெய்யக்கோரி ஏழு நீதிபதிகள் போட்ட உத்தரவு எந்த முகாந்திரமும் இல்லாத நிலைக்குப் போகும் என்று கூறுகின்றனர். ஏழு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. தீர்ப்பின் முழு விவரமும் வரவில்லை என்பதால், அவர் கையெழுத்து போடவில்லையோ என்ற கேள்வியும் எழுகிறது? அதனால் இது கர்ணனுக்கு சாதகமாக இருக்கலாம். எனவே, கர்ணனின் பணி ஓய்வு அவருக்கு எந்தப் பின்னடைவையும் ஏற்படுத்தாது என்று கருதுகிறேன்" என்றார்.

போலீஸாரால் தேடப்படும் சூழ்நிலையில் நீதிபதி கர்ணனின் ஓய்வுப் பலன்களில் பாதிப்பு ஏதேனும் இருக்குமா? என கேட்டபோது, "ஓய்வுப் பலன்களில் பாதிப்பு ஏதுவும் வராது. அதைத் தடுப்பதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை. ஓய்வுப் பலன்களை நாடாளுமன்றத்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும்" என்றார் நீதிபதி ஹரி பரந்தாமன்.


டிரெண்டிங் @ விகடன்