Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கரை சேருமா பன்னீரின் படகு...விடை தேடும் விமர்சகர்கள்!

ஓ .பன்னீர்செல்வம்

1988-ல் எம்.ஜி.ஆர் மறைவுக்குப்  பிறகு அ .தி.மு.க-வுக்குள்  ஜானகி-ஜெயலலிதா என்ற இரண்டு முகாம்கள் உருவாகின. எம்.ஜி.ஆர் மனைவி என்ற காரணத்தால், தமக்குத் தாமே முதல்வர் பட்டாபிஷேகம் சூட்டிக்கொண்டார் ஜானகி. ஆனால், ஜெயலலிதாவோ தமக்கு ஆதரவாக நிர்வாகிகளையும் தொண்டர்களையும்  திரட்டினார். அவர்களிடம், 'தான் துரோகம் செய்யப்பட்டதாக'க் குமுறினார். 'எம்.ஜி.ஆரின் வாரிசு நானே' என மக்களிடம் நெகிழ்ந்தார். மறுபுறம், மத்தியிலுள்ள காங்கிரசுடனும் மறைமுகமாக உறவைத் தொடர்ந்தார். அவரின் முதன்மையான இலக்கு கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதே. தமது இலக்கை நோக்கியத் தொடர் பயணத்தின் வாயிலாக இரண்டே ஆண்டுகளுக்குள், தாம் விரும்பிய அதிகாரத்தையும் அடைந்தார். கட்சியையும் தன்வயப்படுத்தினார். காலச் சக்கரம் உருண்டன. 29 ஆண்டுகள் கடந்து, 2017-ல் அடியெடுத்து வைக்கும் தற்காலத்தில், முகங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. ஜெயலலிதா இடத்தில், தற்போது ஓ.பன்னீர்செல்வம் நிற்கிறார். அவரைப் போலவே கட்சியையும், அதிகாரத்தையும் தன்வயப்படுத்தும் நோக்கம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் உண்டு. ஆனால், இலக்கை வென்ற ஜெயலலிதாவின் சாமர்த்தியமும், அரசியல் ஆளுமையும்  எந்தளவுக்கு ஓ.பன்னீர்செல்வத்திடம் உள்ளது? ஜெயலலிதாவைப் போன்றே ஓ.பன்னீர்செல்வத்தால் தமது இலக்கை அடைந்துவிட இயலுமா?

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சசிகலா அணியுடன் முரண்பட்டு, "நியாயத்துக்காக தர்ம யுத்தத்தைத் தொடங்கியுள்ளேன்" என்று  தனித்து வந்தார் ஓ.பி.எஸ். இதோ, முழுமையாக மூன்று மாதங்கள் முடிந்துவிட்டன. அவர் பயணம் தொடங்கியபோது சசிகலா மட்டுமே எதிரியாகத் தெரிந்தார். தற்போது ஈ.பி.எஸ், டி.டி.வி என எதிர் முகாம்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. இந்த நிலையில், ஓ.பி.எஸ்-ஸின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா

ஜெ. மறைவுக்குப் பிறகு தமது முதல்வர் பதவியை சசிகலா அணியிடம்  தாரைவார்த்த ஓ.பன்னீர்செல்வம், தாளமுடியாத சோகத்தோடு ஜெ. சமாதிக்குச் சென்று தியானம் செய்தார். அந்த மௌனப் போராட்டம், அரசியல் பிரளயத்தையே உண்டாக்கியது. தன்னை மெளனமாக நிறுத்திக்கொண்டு, மக்களைப் பேச வைத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் தோழியாக அடையாளப்பட்ட சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரின் மரணத்தோடு தொடர்புபடுத்தி விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களை தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அட்டாக்கை தொடர்ந்தார். மதுசூதனன், மைத்ரேயன், மா.ஃபா பாண்டியராஜன் என கட்சியின் முக்கியப் புள்ளிகளை தமது அணிக்கு கொண்டு வந்தார். முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டுக்காக சிறப்புச் சட்டம் கொண்டு வந்து அதை  நடத்திக்காட்டியதை தமது சாதனையாக பறைசாற்றினார். மத்திய மோடி அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டு, தம்மை தேசிய அரசியலிலும் பதிவு செய்துகொண்டார்.  பொதுவாக ஓ.பன்னீர்செல்வம் என்றாலே பவ்யம். ஜெயலலிதாவின் காலில் விழுந்து அவர் காட்டிய பவ்யம், பிற்பாடு அ.தி.மு.க -வின் ஒரு கலாச்சாரமாகவே  மாறிப்போனது. அந்த பவ்யம், ஜெயலலிதா பயணிக்கும் வாகனம் தொட்டு அவர் பயணித்த விமானம் வரை நீண்டது. அதுவே ஊழல் குற்றச்சாட்டில், இரண்டு முறை  ஜெயலலிதா  சிறைக்குச் சென்றபோது, அவராலேயே  முதல்வராக அமர்த்தப்பட்டு அழகு பார்க்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அறிஞர் அண்ணா, கருணாநிதி என 'பேச்சின்' மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழ்நாட்டு திராவிட அரசியல் வரலாற்றில், அதிகம் பேசாமலேயே அரியணையை அடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். 'அவரின் பவ்யத்துக்குக் கிடைத்தப் பரிசே இந்த அரியணை!' என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். எப்போதும் புன்னகையோடு தம்மை வெளிகாட்டிக் கொள்வதும், நெருக்கமானவர்களிடம் பணிந்து போகும் பவ்யமானவராகவும், சசிகலாவுக்கு எதிராக ஒரு போராளியாகவும்  தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். இந்த இமேஜ் குலையாமல் பயணித்தது, பன்னீர்செல்வத்தின் சாமர்த்தியமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், விமர்சகர்களோ, 'ஆரம்பத்தில் இருந்தே ஓ.பி.எஸ்-ஸின் நடவடிக்கைகள் அனைத்தும் தோல்விப்பாதையை நோக்கியே பயணிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு 'அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைக் குழுவை கலைக்கிறேன்' என்று அறிவித்திருப்பது வரை அவரின் ஒவ்வொரு முடிவுமே சறுக்கல்தான்' என்கின்றனர். 

மோடியுடன்  ஓ .பன்னீர்செல்வம்

சட்டமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, போதுமான எம்.எல்.ஏ-க்களைத் தன் பக்கம் திருப்பாததை ஓ.பி.எஸ்-ஸின் முதல்கட்டத் தோல்வியாக விமர்சிக்கின்றனர் விமர்சகர்கள். 'சசிகலாவா... ஓ.பி.எஸ்-ஸா' என்ற போட்டியில், சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் நின்றபோது, பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். டீக்கடை தொட்டு சமூக வலைதளங்கள் வரை இந்த விவாதங்களும் நீண்டன. சசிகலா சிறைக்குச் சென்றபின் தங்கள் விருப்பம் நிறைவேறியதாக பெரும்பாலான மக்கள் திருப்திப்பட்டுக்கொண்டனர். அத்தோடு இந்த 'கேம்' முடிந்துவிட்டதாகவே கருதினர்.  சசிகலாவை எதிர்த்தபோது கிடைத்த மக்கள் செல்வாக்கை அடுத்தடுத்து தக்க வைக்கவும், வளர்த்தெடுக்கவுமான திட்டமிடல்கள், காரியங்களை ஓ.பி.எஸ் நிகழ்த்தவில்லை. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்காகப் போதிய அளவில், குரல் கொடுக்கவில்லை. அதேநேரம் சசிகலா அளவுக்கு ஈ.பி.எஸ்-ஸைப் பெரிதாகப் பார்க்கவில்லை ஓ.பி.எஸ். ஆனால், அவரோ ஓ.பி.எஸ்-ஸை விடவும் மத்திய மோடி அரசிடம் நெருக்கம் காட்டுகிறார். ஜெயலலிதா இருந்தபோது எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட  மத்திய அரசின் திட்டங்களுக்குக்கூட, தற்போது  சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறார் அவர். பிரதமரின் கோரிக்கையை ஏற்று, தமது வாகனத்தில் உள்ள சிவப்பு விளக்கை தானே அகற்றி விசுவாசம் காட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  குறைந்த எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட  ஓ.பி.எஸ் விசுவாசத்தை விட, ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் ஈ.பி.எஸ்-ஸின் விசுவாசமே தங்கள் சித்தாந்த இலக்குகளுக்கு உதவிகரமாக இருக்கும் என மத்திய பி.ஜே.பி கருதுகிறது. மேலும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் காலத்தில், பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் பலம் கொண்ட ஆளும்கட்சியைத் தள்ளி நிறுத்துவது அரசியல் சாமர்த்தியமல்ல என்பதை பி.ஜே.பி நன்கு புரிந்துவைத்துள்ளது. கட்சிக்குள்ளும் ஈ.பி.எஸ்-டி.டி.வி தினகரன் என்ற போட்டியை உருவாக்கியதன் மூலம் லைம் லைட்டிலிருந்து ஓ.பி.எஸ்-ஸை ஒதுக்கினார் எடப்பாடி பழனிசாமி. இவையெல்லாம் ஓ.பி.எஸ்-ஸின் எதிர்காலக் கனவுகளை நிர்மூலமாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் அலசுகின்றனர். ஊடகவியலாளர் கவிதா முரளிதரனும் இதையொட்டியே கருத்து தெரிவிக்கிறார்....

"தொடக்கத்தில் ஓ.பி.எஸ்-ஸுக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. அது தேய்மானம் அடைந்துவருகிறது. தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட ஸ்டிங் ஆபரேஷன், ஓ.பி.எஸ் மீதான இமேஜையும் சேர்த்தே உடைத்துள்ளது. எம்.எல்.ஏ சரவணன், 'ஓ.பன்னீர்செல்வம் அணியும் பணம் கொடுக்க முயற்சித்தது' என்று கூறியுள்ளார். சசிகலா மீது ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடுத்தே தமக்கான செல்வாக்கை மக்களிடம் கட்டமைத்துக்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது அவர் மீதும் மேற்கண்ட புகார்கள் எழும்புவது மக்களிடமிருந்து அவரை அந்நியப்படுத்தும். பி.ஜே.பி கொடுத்து வரும் ஆதரவைக் கொண்டே தொடர்ந்து தமது பயணங்களைத் தீவிரப்படுத்தி வந்தார். ஆனால், ஆட்சி யார் கையில் உள்ளதோ அவர்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வரவே மத்திய அரசு யோசிக்கும். தலைமை செயலகத்துக்குள் வந்து மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆய்வு மேற்கொள்ளும் அளவுக்கு சுதந்திரப் பரப்பைத் திறந்துவிட்டுள்ளது ஈ.பி.எஸ் அரசு. அப்படியிருக்க... மத்திய பி.ஜே.பி-க்கு வேறென்ன வேண்டும்? ஆக, ஓ.பி.எஸ் தமது இலக்குகளை அடைவதற்கான கதவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசியல் அரங்கில் ஓ.பி.எஸ் ஒரு மாற்றுச் சக்தியாக மலர்வது சந்தேகமே. அவரின் எதிர்காலம் கேள்விக்குறியே" என்கிறார் கவிதா முரளிதரன்.

விமர்சகர்கள் இவ்வாறு விமர்சித்தாலும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, "ஜெயலலிதாவே கை காட்டிய முதல்வர், மக்கள் செல்வாக்கு, மோடியிடம் எதிர்ப்பை சந்திக்காமல்  இணக்கமான உறவைக் கையாளுதல், மாவட்டம்தோறும் மக்களைச் சந்தித்துவரும் தர்மயுத்தப் பயணம், கட்சியின்  கீழ்மட்டத் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பது... இவையெல்லாம் ஓ.பி.எஸ்-ஸின் ப்ளஸ். ஒருவரின் பலம் என்பது தேர்தலின்போதே வெளிப்படும். 1989 தேர்தலில், ஆட்சியைக் கைப்பற்றவில்லை என்றாலும் அதுவே ஜெயலலிதா என்ற ஆளுமையை அடையாளம் காட்டியது; அடுத்து வந்த 1991-ம் ஆண்டு தேர்தலிலும் அச்சாரமிட்டது.  எனவே, நிச்சயம் எதிர்காலத்தின் மாற்றுச் சக்தியாக ஓ.பி.எஸ் மிளிர்வார் " என்கின்றனர் உற்சாகத்தோடு. 

ஒரு டீ கடைக்காரராக தேனியில் வாழ்க்கையை தொடங்கியவர், தமது அணுகுமுறைகளாலும், நுணுக்கமான 'அரசியலாலும்' , தமிழ்நாட்டின் முதல்வராகவும் வளர்ந்தார். அதே நம்பிக்கையோடுதான், தற்போது தமது  படகின் துடுப்புகளை சுழற்றுகிறார் ஓ.பன்னீர்செல்வம். கரை சேருமா பன்னீரின் படகு?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement
Advertisement

MUST READ

Advertisement