"கார்டு இங்கே இருக்கு காசு எங்கே இருக்கு..?" - ரூபே அட்டை குறித்து விவசாயிகள் ⁠⁠⁠⁠

விவசாயிகள்

விவசாயிகளுக்காக எந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தாலும் அது முழுமையாக அவர்களைச் சென்று சேர்கிறதா என்றுகேட்டால், நூறுசதவிகிதம் இல்லை என்பதுதான் அனைத்து விவசாயிகளின் பதிலாக உள்ளது. விவசாயிகளை அரசின் திட்டங்கள் சென்று சேராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடும் வறட்சியால் ஏராளமான விவசாயிகள் மடிந்துக்கொண்டிருக்கிறார்கள். வறட்சி பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு இடுபொருளுக்கான நிவாரண உதவி வழங்குவதாகத் தெரிவித்த மாநில அரசு, அதன் முழுத்தொகையையும் கொடுக்கவில்லை என்ற புகார் உள்ளது. 

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 23 மாவட்ட மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் 40 ஏ.டி.எம் மையங்களையும், விவசாயிகளுக்கு 'ரூபே' கடன் அட்டைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார். அதாவது தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுவரும் விவசாயிகள் சுமார் 4.56 லட்சம் பேர் மாவட்ட, மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இந்த கடன் அட்டைகள் பயன்படும்.

'அனைத்து ஏ.டி.எம்-களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்' 

"அது என்ன வேளாண் (ரூபே) கடன்அட்டை? இதனால் யார் யாரெல்லாம் பயனடைவார்கள்?" என்று மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் அலுவலரிடம் கேட்டோம். 

"மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு இந்த கடன்அட்டைகள் வழங்கப்படவுள்ளன.அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இருக்க வேண்டும். விவசாயிகளின் எவ்வளவு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு கடன் வழங்கப்படும். 'என்ன பயிர் செய்யப் போகிறார்' என்ற விவரம் அடங்கிய விண்ணப்பத்தை பூர்த்திசெய்து விவசாயிகள் வங்கியில் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் நிலத்துக்கான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னர், விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட்டு,அவர்களின் கணக்கில் பணம் வழங்கப்படும்.அந்தப் பணத்தை அவர்கள் எந்த ஏ.டி.எம்-களிலும் எடுத்துக் கொள்ளலாம். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ஒட்டுமொத்தமாக பணத்தைக் கடனாகப் பெற்று வந்தவர்களுக்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் ரூபே கார்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளின் கணக்கில் கடன்தொகை செலுத்தப்படும். அவர்களுக்கு பணம் தேவைப்படும்போது அந்த கார்டை பயன்படுத்திக் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். பணமில்லா முறையைக் கையாளவே இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்" என்றார் அவர்.

எடப்பாடி பழனிசாமி கடன் அட்டைகளை வழங்கினார்

இதுதொடர்பாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஒன்றின் செயலரிடம் பேசியபோது, "வரும் 9 ஆம் தேதி கடன் அட்டை வழங்கும் திட்டத்தை எங்கள் ஊரில் தொடங்க உள்ளனர். அதன்பின்னரே அதன் விவரம் தெரியவரும். இதுதொடர்பாக சென்னையில் கூட்டுறவுத்துறையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களுக்கே அந்தத் திட்டம் சரிவரப் புரியவில்லை என்கிறார்கள்" என்றார்.

"கடன்அட்டை என்ற கலர்ஃபுல் விளம்பரத்தை நிறுத்துங்கள்" 

மேலும், "சொந்தமாக நிலம் உள்ள விவசாயிகள் மட்டுமே இந்தக் கடன் அட்டையைப் பெற முடியும்.அரிச்சலூர் செல்வம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்வோர் இந்த அட்டை பெறத் தகுதியற்றவர்கள்'' என்று தொடக்க வேளாண் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படி இருக்கும்போது "அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் பயன்தருமா?" என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரிச்சலூர் செல்வத்திடம் பேசியபோது, "கடன்அட்டை கொடுத்துள்ளார்கள். ஆனால், கணக்கில் பணம் போட்டுள்ளார்களா? பயிர் வைத்தால்தான் கணக்கில் பணம் ஏறும். இங்குதான் பயிர் வைப்பதற்கே தண்ணீர் இல்லையே? பிறகு எப்படி அவர்கள் கடன் கொடுப்பார்கள். ஏற்கெனவே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குகிறார்கள். தற்போது அதனை மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றியுள்ளார்கள். இதில் என்ன புதிய திட்டம் உள்ளது? இந்த திட்டமே பழைய மொந்தையில் புதிய கள். இதனால் விவசாயிகளுக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது? இந்த அட்டையை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு நஷ்டம்தான் ஏற்படும். அந்த அட்டையை பயன்படுத்துவதால் அதற்கான கமிஷன்தொகை அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். 'வரியை ஒழுங்குபடுத்த, டிஜிட்டல் முறையை பயன்படுத்த, பணமில்லா பரிவர்த்தனையை கொண்டுவந்துள்ளோம்' என்கிறது மத்திய அரசு. அதற்காக விவசாயிகளை ஏன் பலிகடாவாக்கவேண்டும்? விவசாயிகளை மேலும் மேலும் கடனாளிகள் ஆக்க நினைக்கிறது இந்த அரசு. முதலில் கடன் கொடுப்பதாகவும், கடன் அட்டை கொடுப்பதாகவும் வெளியிடும் கலர்ஃபுல் விளம்பரங்களை நிறுத்திவிட்டு மத்திய - மாநில அரசுகள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான, கட்டுபடியாகக்கூடிய விலையை நிர்ணயம் செய்ய என்ன வழியோ அதை  தேடட்டும்" என்று கொதிக்கிறார்.

இந்த ரூபே கடன்அட்டை குறித்த முழு விவரம் இன்னும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளுக்கு போய்ச்சேராத நிலைதான் தற்போது உள்ளது. இந்த ஒரு திட்டம் மட்டுமல்ல; விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படுவதாகச் சொல்லும் பல திட்டங்களும் இதுபோன்ற நிலையிலேயே உள்ளன. வேளாண் துறையும், கூட்டுறவுத்துறையும் தங்களுக்காக என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்துகின்றன என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அந்தத் திட்டங்கள் குறித்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய அதிகாரிகளுக்கே பல நேரங்களில் அவை தொடர்பான போதிய விஷயம் தெரியாது. மேலும் அவற்றைப்பற்றி விவசாயிகள் முழுமையாக தெரிந்து கொண்டால் அவர்கள் தங்களைக் கேள்வி கேட்பார்கள் என்பதாலேயே, விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில்லை என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் நிஜம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!