வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (16/06/2017)

கடைசி தொடர்பு:12:05 (16/06/2017)

எதிர்ப்பு காரணமாக ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்த நியூட்ரினோ திட்டம்..! #neutrino

கூடங்குளம் அணு உலை, ஷேல் கேஸ், மீத்தேன், நியூட்ரினோ மையம், ஹைட்ரோ கார்பன் எனத் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அனைத்துத் திட்டங்களுக்கும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை பலமாக எழுந்தது. இதை அனைத்தையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு தனது கவனத்தைத் இந்தத் திட்டங்களின் மீது ஆழமாகப் பதித்தது. முன்னர் ஆண்ட காங்கிரசாக இருந்தாலும் சரி, அப்போது அதனை எதிர்த்து இப்போது ஆளும் கட்சியாகத் திகழும் பிஜேபியாக இருந்தாலும் சரி, இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் குறியாகவே இருக்கின்றன. தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்போகும் அனைத்துத் திட்டங்களும் ஏதோ ஒரு வளம் கொண்ட இடத்தை அழித்து, அதிலிருந்து செயற்கையான வளத்தைப் பெறவே துடிக்கின்றன. இதில், தற்போது நியூட்ரினோ திட்டம் மட்டும் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நியூட்ரினோ திட்டத்தின் பிண்ணணி குறித்து ஒரு சின்ன ரீவைண்ட். தமிழக மலைப்பகுதிகளில் செழிப்பு மிக்க ஒன்றான தேனியைக் குறிவைத்துக் கொண்டுவரப்பட்டது நியூட்ரினோ ஆய்வுத்திட்டம். மீத்தேன் முதல் அணு உலை வரை மற்ற திட்டங்களில் எல்லாம் கூட ஓரளவாவது மக்களுக்கு அதுபற்றிய புரிதல் இருக்கிறது. ஆனால் நியூட்ரினோ திட்டத்தைப் பொறுத்தவரை அங்கு என்ன நடக்கிறது, எதற்காக நடக்கிறது போன்ற எந்த தெளிவான விளக்கங்களையும் அரசு மக்களுக்கு அளிக்கவில்லை.

நியூட்ரினோ அமைய இருக்கும் இடம்

நியூட்ரினோ என்பது சூரியனிலிருந்தும், விண்மீனிலிருந்தும் வெளிப்படும் நுண்ணியதுகள். ஒரு மில்லி கிராம் எடையில் பலகோடி நியூட்ரினோக்கள் இருக்கும். அந்த அளவுக்கு மிகவும் நுண்ணிய துகள். இது சம்பந்தமாக ஏற்கனவே சில நாடுகள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். ஜப்பான், ஆயிரம் மீட்டர் சுரங்கம் தோண்டி ஆராய்ச்சி செய்தனர். ஆனால், அதில் ஒரு பைப்லைனில் விபத்து ஏற்பட்டதாலும், இன்னும் சில காரணங்களாலும் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, சுரங்கம் மூடப்பட்டு விட்டதாக சமீபத்தில் "பூவுலகின் நண்பர்கள்" சுந்தர்ராஜன் சொல்லியிருக்கிறார். கனடாவில் சட்பரி (Sudbury ) எனும் இடத்தில் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்திலும், பிரான்ஸில் அண்டேர்ஸ் (Antares) என்கிற இடத்தில், கடலுக்கடியில் 2500 மீட்டர் ஆழத்திலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவில் 2 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து ஆராய்ச்சி செய்து வருகிறது அமெரிக்கா. இப்படிப் பல நாடுகள் நியூட்ரினோவை ஆய்வு செய்தாலும் இதில் சில பிரச்சனைகள் இருக்கிறது. இந்த ஆய்வகம் உலகின் முதல் தர நாடுகளில் மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கப்படவேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் மேற்கண்ட நியூட்ரினோ ஆராய்ச்சி மையங்கள் எதுவுமே மக்கள் வாழும் இடத்திற்கு அருகில் அமைக்கப்படவில்லை. இதில் அமெரிக்கா ஒரு படி மேலே போய் ஆராய்ச்சி மையத்தை அன்டார்டிகாவிற்கே கொண்டு போய்விட்டது. முதலில் இமயமலை தொடங்கி, நீலகிரி மாவட்டம் மசினகுடி வரியிலும், பல இடங்களிலும் சிக்கல்கள் இருந்ததால் கடைசியாக தேர்வான இடம்தான், தேனி.

தேனி மாவட்டம், உத்தம பாளையம் வட்டம், பொட்டிபுரம் கிராமத்தில் மத்திய அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதுதான் இந்த நியூட்ரினோ ஆய்வு மைய திட்டம். இதற்காக 2011-ம் ஆண்டு மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியது. அதனைத் தொடர்ந்து 8 லட்சம் டன் பாறைகளைத் தகர்த்தெடுக்கும் பணிகள் துவங்கின. ஆனால், இதற்கு 40 கி.மீ தொலைவிற்குள்தான் கேரளாவின் இடுக்கி அணை, முல்லைப் பெரியாறு அணை போன்ற முக்கியமான அணைகளும், சுற்றுச்சூழல் வளங்களும் அதிகமாக அமைந்துள்ளன. தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இத்திட்டத்தினை எதிர்த்தனர். இதில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவும் தனது எதிர்ப்பினை பலமாகப் பதிவு செய்தது. இதனால் மத்திய அரசுக்கு இத்திட்டத்தைச் செயல்படுத்த காலதாமதம் ஆனது. ஆனால் இதனை எதிர்த்து 2015-ம் ஆண்டில் 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "நியூட்ரினோ ஆய்வு பாதிப்பு குறித்து முறையான ஆய்வு செய்யாமல், மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இந்திய கணினி அறிவியல் மையம், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் ஆகிய ஐந்து துறைகளும் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

நியூட்ரினோ

இதனையடுத்து 2017-ல் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து, 7 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அக்குழு கொடுத்த அறிக்கையின் பேரில் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும் அந்த அறிக்கையில் வன விலங்குகள் அதிகமாக வாழும் பகுதியாக இருந்தும் வனத்துறையின் அனுமதியைப் பெறாததும் சுட்டிக் காட்டப்பட்டு அந்த மையத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் நியூட்ரினோ திட்டம் காலதாமதம் ஆகிக்கொண்டே போனது. தமிழகத்தில் மற்ற இடங்களில் சாக்குப்போக்கு சொல்லிச் சாதிக்க முடிந்த மத்திய அரசால் நியூட்ரினோ திட்டத்தை மட்டும் கொண்டு வரமுடியவில்லை. மேலும் தடை நீடிப்பதாலும், இருமாநில எல்லைக்குள் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைய இருப்பதால் இரு மாநில அரசுகளும் சம்மதிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருப்பதாலும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை ஆந்திர மாநிலத்துக்கு மாற்ற மத்திய அரசு முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். "வனவிலங்குகளும், சுற்றுச்சூழல் வளமும் அதிகமாகக் கொண்ட இடம் தேனி மலைப்பகுதி. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; கேரளாவிற்கும் அம்மலைப்பகுதி முக்கியம்தான். நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிராக 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து, கடந்த மே மாதம் அந்த மையம் செயல்படத் தடை வாங்கினோம். அதில் வனத்துறை அனுமதி பெறாமல் இருந்ததும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. ஆந்திர மாநிலத்திற்கு செல்வதால் நியூட்ரினோ திட்டத்திற்கு இலகுவாக அனுமதி கிடைக்கும் என்பது உண்மைதான். அதனால்தான் அவர்கள் ஆந்திர மாநிலத்திற்கு செல்கிறார்கள். பொட்டிபுரத்தில் மறுபடியும் அனுமதி வாங்க வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தை வைத்து புதிதாக சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை தயார் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை மக்கள் மொழியில் மொழிபெயர்த்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும். இதைத் தவிர தேசிய வனவிலங்கு நல வாரியத்திடம் (கேரளா மாநிலம்) அனுமதி வாங்க வேண்டும். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க இரண்டு வருட காலமாகும்  இவை எல்லாம் ஏன் செய்ய விடும் என்றால், பொட்டிபுரம் இரு மாநில எல்லையில் 10 கி.மீ க்குள் உள்ளதால் இது "category A" திட்டம் என்று வகைப்படுத்தி, இவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் சொல்லியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் இப்போது முடிவு செய்யப்பட்டுள இடம், அந்த மாநிலத்தின் உட்பகுதியில் உள்ளது, இரு மாநில எல்லைகள் எல்லாம் கிடையாது, அதனால் இந்த திட்டம் "category B" ஆக கருதப்பட்டு மாநில அரசே "கட்டிடங்கள் கட்டுவது" என்று சொல்லி அனுமதியை வழங்கிவிடும். தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கியதில் மேலும் பல விதிமீறல்கள் உள்ளன, அவற்றை வரும் காலங்களில் வெளிக்கொண்டு வருவோம்" என்றார்.

 

நியூட்ரினோ

இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்றும் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் திட்டம் தொடங்கக் காலதாமதம் ஆவதால், இதை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணியில் ஐ.என்.ஓ ஆராய்ந்து வருகிறது. இடம் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஆய்வு மையம் அங்கு மாற்றியமைக்கப்படும். அதன் ஒருபகுதியாக ஆந்திராவில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆராய்ச்சி மையம் மதுரையில் அமைய உள்ளது. ஆனால். இதற்கான அனுமதிகூட இங்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு இந்தத் திட்டத்தை செயல்படுத்தாததால் மற்ற மாநிலங்கள் இதைத் தொடர முன்வந்துள்ளன. அதிக நேரத்தை வீணாக்குவதில் அர்த்தமில்லை. தமிழகம் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பை நழுவவிட்டது. இது தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்" என்றார்.

சுந்தர்ராஜன்இதற்கு முன்னர் மத்திய அரசு இந்தியா முழுவதும் 10 அணு உலைகளை நிறுவப்படும் என அறிவித்தது. அதில் ஓர் அணு உலை குஜராத்தில் அமைவதாக இருந்தது. குஜராத் மக்களின் எதிர்ப்பால் அப்போது ஆந்திராவுக்கு அணு உலையை மாற்றுவதாகத் தகவல் வெளியானது. இப்போது, நியூட்ரினோவும் ஆந்திராவுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் ஆந்திர மாநில எல்லைக்குள் வருவதால் ஒரு மாநிலத்தில் மட்டும் அனுமதி வாங்கினால் போதும் என்ற எண்ணத்தில் மாற்றியிருக்கலாம். இதுதவிர, தமிழ்நாட்டைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு மற்ற திட்டங்களை நிறைவேற்ற முடிந்த மத்திய அரசால், இருமாநில எல்லைக்கான திட்டமான நியூட்ரினோவில் கேரளாவிடம் அனுமதி வாங்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் நியூட்ரினோ திட்டம் முழுமையாகத் தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கருத்து. எந்த மக்களாக இருந்தாலும் நியூட்ரினோவால் ஏற்படும் பாதிப்பு ஒன்றுதான். என்னதான் இந்தத் திட்டம் மாற்றப்பட்டாலும் சில சந்தேகங்களைத் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவில் சல்லடை போட்டுத் தேடியும், மசினகுடி மற்றும் தேனியைத் தவிர நியூட்ரினோவிற்கு வேறு இடம் இந்தியாவில் இல்லை என அணு சக்திதுறை அறிவித்தது. அதற்காக ஒரு குழுவை அமைத்தது அணு சக்திதுறை... அப்போது மசினகுடியில் எழுந்த பலத்த எதிர்ப்பால் தேனிக்கு திட்டம் மாறியது. இதைத் தவிர வேறு இடம் இல்லை எனச் சொல்பவர்களுக்கு இப்போது ஆந்திராவில் இடம் கிடைத்தது எப்படி எனக் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. தற்போது ஆந்திர முதல்வர் பிஜேபியுடன் இணக்கமாக இருப்பதால் எளிதில் அனுமதி வாங்கி விடலாம் என மத்திய அரசு நினைக்கலாம்.

"1450 கோடி ரூபாய் முதற்கட்ட செலவோடு இந்த ஆராய்ச்சி தொடங்கியது. இதனுடைய முடிவு, இந்தியாவோட உணவுப் பிரச்னையை, தண்ணீர் பிரச்னையை, பொருளாதார பிரச்னையை தீர்த்திடுமா?... இல்லை கேன்சர்... எய்ட்ஸ் போன்ற நோய்களால் சாகும் சின்னஞ்சிறு குழந்தைகளை காப்பாற்றிடுமா?... இப்படியெல்லாம் கேள்விகளை கேட்டால்... அதற்கு இப்போது அவர்களிடம் பதில் இல்லை. ஏனெனில் இந்த ஆராய்ச்சி வெற்றியடையுமா? அப்படியே வெற்றியடைந்து நியூட்ரினோவைப் பிடித்துவிட்டாலும் அதை வைத்து என்ன செய்ய முடியும்?... இப்படியான எந்தக் கேள்விகளுக்குமே திடமான பதில் கிடையாது என்பதே உண்மை. அப்போது எதற்கு இந்தியா போன்ற வளரும் ஒரு நாடு பல ஆயிரம் கோடிகளை செலவழித்து, இந்த மாதிரியான ஒரு ஆராய்ச்சியைச் செய்ய வேண்டும். இங்கு யாரும் கண்மூடித்தனமாக ஓர் அறிவியல் ஆராய்ச்சியை எதிர்க்கவில்லை... பிரச்சினைகளை வரிசைப்படுத்தியும், அதை மனதில் வைத்தும்தான் வேலைகளைச் செய்யுங்கள் என் சொல்கிறார்கள். இதற்கு பதிலாக... இதோ... இன்னும் மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளும் அவலம் இருக்கிறது... பொது வெளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருக்கிறது. அதையெல்லாம் மேம்படுத்த புதுக் கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சிகளைச் செய்யுங்கள். குறைந்தபட்சம் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஆராய்ச்சிகளை செய்யுங்கள்" - இதுதான் நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பவர்களின் ஒட்டு மொத்த குரல்... இதற்கு அரசு என்ன பதில் வைத்திருக்கிறது.

நியூட்ரினோ

நியூட்ரினோ ஆய்வு மையத்தை எதிர்ப்பவர்கள் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். இந்தக் கருத்துக்களையும், அவர்கள் காட்டும் ஆதாரங்களையும் காட்டுபவர்கள் முன்னால் வந்து, ஒளிவு மறைவில்லாமல் நியூட்ரினோ குறித்து தெளிவான விளக்கத்தைக் கொடுங்கள். ஏனெனில் இங்கு திட்டத்தினை விட, திட்டத்தை செயல்படுத்தப் போகிறவர்களைப் பற்றியும், செயல்படும் முறையைப் பற்றியும்தான் தான் ஒரு வித பயத்தை கொடுக்கிறது. நீர் வற்றாமல் இருக்க தெர்மாகோலை மிதக்கவிடும் அமைச்சர், அரசு மருத்துவ மனையில் குழந்தையை எலி கடித்து, அந்தக் குழந்தையின் கை பறிபோன சம்பவம், உயிருக்குப் போராடுகிற அம்மாவைக் காப்பாற்ற ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்றால் இங்கே முதலுதவி எல்லாம் செய்ய முடியாது கொண்டு போங்கள் எனச் சொல்லும் மருத்துவமனைகள் குறித்த அச்சம்... இவை அனைத்தும் நம் நாட்டிதான் நடக்கிறது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய மருத்துவமனைகளே இந்த நிலையில் இருக்கும்போது, எப்போது வேண்டுமானாலும் காவு வாங்கும் எனச் சொல்லப்படும் இதுபோன்ற திட்டங்களை எல்லோரும் எதிர்க்கத்தான் செய்வார்கள்.


டிரெண்டிங் @ விகடன்