வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (16/06/2017)

கடைசி தொடர்பு:18:25 (16/06/2017)

“அங்காடிகளுக்கு மத்தியில் மிச்சமிருக்கும் ஒரு வீடு!”அங்காடித் தெருவின் கதை! மினி தொடர் பகுதி 5

அங்காடித் தெரு

கோடிக்கணக்கான பாதங்கள் நடந்துசென்ற ரங்கநாதன் தெரு, இரவு 11 மணிக்கு மேல் சப்தங்கள் அற்று ஓய்கிறது; மாம்பலம் ரயில் நிலையத்தில் எப்போதாவது கடந்துசெல்லும் ரயில்களின் சத்தம் கேட்கிறது; பணிக்குச் சென்று தாமதமாக திரும்பிய ஒரு சிலர், ரங்கநாதன் தெரு வழியே பைக்குகளைச் சீறிவிட்டுச் செல்கிறார்கள்; எப்போதாவது ஓர் ஆட்டோ ஓடும் சத்தம் கேட்கிறது;

மெள்ள, மெள்ள விழிக்கும் தெரு

விடியற்காலை 4 மணிக்கு மேல் மின்சார ரயில்களின் சத்தம் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கிறது; மெள்ளமெள்ள விழித்து எழுகிறது ரங்கநாதன் தெரு; குப்பை லாரி வந்து செல்கிறது; காலையில் பணிக்குச் செல்பவர்கள், சுதந்திரமாகத் தங்களின் வாகனங்ளுடன் ரங்கநாதன் தெருவைக் கடந்துசெல்கின்றனர். காலை 8 மணிக்குமேல் சீருடை அணிந்த ஜவுளிக்கடைகளின் ஊழியர்கள், கும்பல்கும்பலாகக் கடைகள் திறப்பதற்காகக் காத்திருக்கின்றனர். 

ரங்கநாதன் தெரு

9 மணிக்குமேல் மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து பலர் ரங்கநாதன் தெரு வழியே தி.நகர் நோக்கி விரைகின்றனர். அங்காடித் தெரு மெள்ளமெள்ளச் சுறுசுறுப்பாகிறது. வியாபார அழைப்புக் குரல்கள் கதம்பமாகக் காதுகளில் கேட்க ஆரம்பிக்கின்றன. மதியம், கடைகளின் ஊழியர்கள் சாப்பிடச் செல்கிறார்கள். மாலை நெருங்கநெருங்க கொத்துக்கொத்தாக மக்கள் கூட்டம் கடந்துசெல்கிறது. மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து இறங்கும் வழியிலேயே கும்பல்கும்பலாக அங்காடித் தெருவுக்குள் நுழைகிறார்கள்; திருமணத்துக்காக மொத்தமாக ஆடைகள் எடுப்பவர்கள், நகைகள் எடுப்பவர்கள் என வருகிறார்கள்; வெளியூர்க்காரர்கள் வருகிறார்கள். ஜாலியான ஷாப்பிங் அனுபவத்துக்காக இளைஞர்கள் கும்பல் வருகிறது. ரங்கநாதன் தெருவைப் பார்க்கவேண்டும் என்று முதன்முறையாக இங்கு வருபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரே ஒரு வீடு

ஒரே ஒரு வீடு! 

இப்படியாக இரவு 11 மணிவரை ரங்கநாதன் தெரு, ஆடை அலங்கார வணிகத்தின் நுகர்வு மையமாகத் திகழ்கிறது. ஒரு புள்ளி விபரத்தின்படி ஆசியாவின் மிகப்பெரிய ஷாப்பிங் மையங்களில் ஒன்றாக இந்தத் தெரு இருக்கிறது. இவ்வளவு பிஸியான ரங்கநாதன் தெருவில் ஒரே ஒரு வீடு இருக்கிறது என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்.

ஆம், ரங்கநாதன் தெருவில், சரவணா செல்வரத்தினம் கடைக்கு எதிரே இருக்கும் 19-ஆம் எண் வீடுதான் அது. அப்படி ஒரு வீடு இருப்பதே தெரியாமல், வீட்டின் காம்பவுண்ட் சுவரில் எல்லாம் துணிகளைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். இரும்புக் கேட்டிலும் சுடிதார், நைட்டிகளைத் தொங்கவிட்டு வியாபாரம் செய்கிறார்கள். நாம் அந்த வீட்டைக் கண்டுபிடித்து எப்படிப் போவது என்று விழித்துக்கொண்டிருந்தபோது துணிகளுக்கு இடையே இரும்புக் கேட் இருப்பது தெரிந்தது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே போனால், வீட்டின் முன்னே விஸ்தாரமாக உள்ள இடத்தில் சில இளைஞர்கள் ஜாலியாகக் கிரிகெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அங்காடி தெரு வீடு

கோயில் போன்ற வீடு! 

அவர்களிடம் பேசினோம். "இந்த வீடு எங்க பெரியப்பாவோட சொந்தக்காரங்களுடையது. இங்கு வசிப்பதை எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். ஆனால், எங்களுக்கு ஜாலியாகத்தான் இருக்கிறது. தெருவில் பரபரப்பு இருந்தாலும், வீட்டுக்குள் எதுவும் கேட்காது" என்கிறார் லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும் வருண்.

வருணின் பெரியப்பா சுரேஷ், "இது, எங்க மாமா பக்தவத்சலம் வீடு. அவர், இப்போ அமெரிக்காவுல இருக்குறார். அவரோட பாரம்பர்ய வீடு இது. அதனால, இந்த வீட்டை அவர் கோயிலாகத்தான் நினைக்கிறார். இந்தக் கோயிலை யாருக்கும் விற்றுவிடக் கூடாது என்பதுதான் அவரோட ஒரே முடிவு. மாமாவின் குடும்பம் இங்கிருந்தபோது, பல ஜவுளிக்கடைகளின் ஓனர்களும் செல்வரத்தினமும் மாமாவுடைய அம்மாகிட்ட வந்து... வீட்டை விலைக்குக் கேட்டனர். 'நீங்க இந்த வீட்டை எங்களுக்குக் கொடுத்தா ஆயிரத்துக்கும் மேற்பட்டவங்களுக்கு வேலை கொடுப்போம்' என்றெல்லாம் பேசிப் பார்த்துள்ளனர். ஆனா, என் மாமாவின் அம்மா, 'வீட்டை விக்க முடியாது' என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார். என் மாமாவுக்கும் இந்த வீட்டை யாருக்கும் விக்கும் எண்ணமில்லை. 1988-இல் இருந்து இந்த வீட்டுல இருக்கேன். அப்போ, இங்கு 'பட்' என்ற பெயரில் ஒரு ஹோட்டல் இருந்துச்சு. மேன்ஷன் ஒண்ணும் இருந்துச்சு. அதிகளவு கடைகள் இல்லை. இப்போ, இவ்வளவு பரபரப்பான தெருவுக்கு மத்தியில் குடியிருப்பது என்பது ஒரு கண்காட்சிக்கு நடுவே குடியிருப்பதுபோல இருக்குது. நம்மைச்சுத்தி எல்லாம் சுவாரஸ்யமான கண்காட்சி நடக்கும்போது நாம மட்டும் ஒரு வீட்டுல உட்கார்ந்து அதை அமைதியா வேடிக்கை பார்ப்பது ஓர் அலாதியான அனுபவம். அப்படியான ஓர் அனுபவத்தைக் கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து அனுபவிச்சுகிட்டு வர்றோம்.

ரங்கநாதன் வீடு

ஆம்புலன்ஸ் வரமுடியாது!

இதெல்லாம் ஓர் அனுபவம்னாலும், வயசான என் அம்மாவும் இங்கேதான் இருக்கிறார். அவருக்கு உடல்நலம் இல்லாம போகும்போது ஆம்புலன்ஸை வரவழைப்பது அல்லது டாக்சி வரவழைப்பதுதான் ரொம்பக் கஷ்டமாக இருக்குது. காருல அழைச்சிக்கிட்டுப் போகணும் என்றாலும் முதல்ல தி.நகர் பஸ்ஸ்டாண்டுக்குத்தான் போகணும். இதுக்காகச் சில தெருக்களைக் கடக்கணும். இது ஒண்ணுதான் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்குது. மத்தபடி ரங்கநாதன் தெருவுல இருப்பது ஒரு புதுவித அனுபவமா இருக்குது. வீட்டுக்கு அருகிலேயே எல்லாப் பொருள்களும் கிடைக்குது. பொருள்களை வாங்குவதற்காக அலைய வேண்டியதில்லை" என்றார் மிகவும் மனநிம்மதியுடன்.

ரங்கநாதன் தெருவில் நீண்டகாலமாக லிஃப்கோ புத்தக நிறுவனம் இருந்தது. இப்போது அந்த நிறுவனம் ராமநாதன் தெருவுக்கு இடம்பெயர்ந்து இருக்கிறது. புடைவைகள், பாத்திரங்கள் இவைகளுக்கு மத்தியில் ஒரு புத்தக நிறுவனம் எப்படித் தொடங்கப்பட்டது? அது, அடுத்த அத்தியாயத்தில்....

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்