வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (17/06/2017)

கடைசி தொடர்பு:09:46 (17/06/2017)

விரல் சொடுக்கி ஜெயலலிதாவை விமர்சித்த ரஜினி! - இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 4


ரஜினி

பிரெஞ்ச் மொழியில், ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் எனப் பொருள். ஃபிரான்ஸை ஆண்டுவந்த மாவீரன் நெப்போலியனால், 1802-ம் ஆண்டு ‘செவாலியே விருது' வழங்கும் விழா தொடங்கப்பட்டது. செவாலியே விருதைப் பெற்ற முதல் ஆசிய நடிகர் சிவாஜிதான்! அந்த சிவாஜிக்கு ‘செவாலியே விருது' தரப்பட்டபோது நடந்த விஷயங்கள் தமிழக அரசியலின் முக்கியமானப் பக்கங்கள்.

1995-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 'செவாலியே விருது வழங்கும் விழா' கோலாகலமாக அரங்கேறியது. ரஜினி, கமல், தேவ் ஆனந்த், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, மம்முட்டி, சத்யராஜ், ராதிகா, ஶ்ரீதேவி, பாலசந்தர் எனத் திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவின், சிறப்பு விருந்தினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான்! ‘செவாலியே’ விருதை ஒரு தட்டில் ஏந்தியபடி நடிகை மீனா வந்தார். அதனைப் பெற்ற ஃபிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட் சிவாஜியின் சட்டையில், அந்த விருதை அணிவித்து விருதுக்கான சான்றிதழையும் அளித்தார். ‘‘சிவாஜியைத் தவிர இந்த விருதுக்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது’’ எனப் புகழாரம் சூட்டினார் பிலீப் பெடிட்.

ரஜினி

கோலிவுட் சார்பில், வெள்ளியிலான 'வீர சிவாஜி சிலை' நடிகர் திலகம் சிவாஜிக்கு அளிக்கப்பட்டது. இதை ஜெயலலிதாதான் சிவாஜிக்கு அளித்தார். விழாவில் பேசிய ஜெயலலிதா, ‘‘கலைத் துறையில், அருந்தொண்டு ஆற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் சிவாஜி விருது வழங்கப்படும்’’ என அறிவித்தார். ஜெயலலிதாவுக்குக் கமல் மனைவி சரிகாவும் ரஜினியின் மனைவி லதாவும் பொன்னாடை போர்த்தினார்கள். அந்தப் பொன்னாடையில் ஜெயலலிதாவின் உருவம் தங்கத்தினால், இழைக்கப்பட்டிருந்தது. 

வெள்ளைச் சட்டை, கறுப்பு ஜீன்ஸ் காஸ்ட்யூமில் கண்ணாடி அணிந்து வந்திருந்தார் ரஜினி. விழா மேடையில், சிவாஜி ஏறியதும் ஓடிப்போய் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ரஜினி. சிவாஜி, ஜெயலலிதா எல்லோரும் பேசி முடித்த பிறகு நன்றியுரை சொல்ல வந்தார் சூப்பர் ஸ்டார். ‘வெறும் நன்றியுரைதானே... ரஜினி இதில் என்ன பேசிவிடப் போகிறார்’ என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். நன்றியுரை ஆற்றிய இருபது நிமிடமும் மொத்தக் கூட்டத்தையும் தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் ரஜினி. இத்தனைக்கும் விழாவில், சிவாஜியை வாழ்த்திப் பேசுகிறவர்கள் பட்டியலில்தான் ரஜினியின் பெயர் இருந்தது. ஆனால், ‘‘நான் நன்றியுரை சொல்கிறேன்’’ எனக் கேட்டு வரிசையை மாற்றிக்கொண்டார் ரஜினி. 

நன்றி சொல்ல வேண்டியவர்கள் பட்டியலை விழாக் குழுவினர் ரஜினியிடம் தந்திருந்தார்கள். அந்த லிஸ்ட்டை அப்படியே மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் இஷ்டத்துக்கு ஏற்றபடி மாற்றிப் பேசினார் ரஜினி. ‘‘சிவாஜியை வாழ்த்திப் பேசுகிற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. அவரின் உடல்நலத்துக்காக அரை நிமிடம் பிரார்த்திப்போம்’’ என ரஜினி அழைப்பு விடுத்ததும் ஸ்டேடியத்தில் திரண்டிருந்தக் கூட்டம் மொத்தமாக எழுந்து மௌனம் காத்தது. அதன்பிறகு ரஜினி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அக்னி ரகம்.

ரஜினி

மைக்கைப் பிடித்த ரஜினிக்குத் திடீரென வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வந்தன. பேசிக்கொண்டே போனவர் திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி விரலைச் சொடுக்கிக் கொண்டு, ‘‘நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்...’’ எனச் சொல்லி படபடவெனப் பொழிய ஆரம்பித்தார். ‘‘நீங்க திறந்து வெச்சீங்களே... ஃபிலிம் சிட்டி... அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்’’ எனச் சொன்னதுமே... முடிவுக்கு வர வேண்டிய விழா பரபரப்பைத் தொற்றிக் கொண்டது. 

“அப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு’’ என ரஜினி பேசிக்கொண்டே போக... கூட்டம் ஆச்சர்யத்தோடு புருவத்தை உயர்த்தியது.

ரஜினி

ரஜினியின் பேச்சுக்குக் கைத்தட்டல்கள் ஒலித்துக் கொண்டிருக்க... மேடையில், நடுநாயகமாக அமர்ந்திருந்த ஜெயலலிதா கூட்டத்தை சலனமில்லாமல், உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவை விமர்சித்த ரஜினி அதே நேரம் பாராட்டவும் தவறவில்லை. ‘‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார்.  

அன்றைய காலகட்டத்தில், ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால், அவரை வரவேற்று கட் அவுட் வைப்பது... புகழாரம் சூட்டுவது... காலில் விழுந்து வணங்குவது எனத் துதிபாடும் நிகழ்வுகள் அமோகமாக இருக்கும். அந்த அளவுக்கு ஒன்மேன் ஆர்மியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரைக் கண்டித்து அறிக்கைவிடக்கூட பலரும் அச்சப்பட்ட காலம் அது. அப்படியானச் சூழலில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ‘‘யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’’ எனப் பேசிய ரஜினியின் தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள். விழா முடிந்ததும் ரஜினியை, சிவாஜி கட்டித் தழுவினார். ரஜினிக்குத் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள். 
 
ஜெயலலிதாவுக்கே இந்த விழா ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, தான் இருக்கும் மேடையிலேயே இப்படி ஒரு தாக்குதலை ஜெயலலிதா சந்தித்ததில்லை. அசந்து போய் உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா.

(இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்)

- தொடரும்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்