வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (17/06/2017)

கடைசி தொடர்பு:14:41 (17/06/2017)

‘செயற்பாட்டாளர் இனி உருவாகக்கூடாது..!’ ஜல்லிக்கட்டுப் போராளிகளிடம் 5 மாதத்துக்குப் பின் விசாரணை

   ஜல்லிக்கட்டு மாடு முட்டல்

ஒரு சில நாள்களில் தமிழகத்தையே கலங்கடித்த தை எழுச்சிப் போராட்டத்தை மறக்கமுடியாது என்றாலும், அடுத்தடுத்துவந்த விவகாரங்களால் பின்னர் அது வார்த்தை அளவில் நினைவில் தங்கியுள்ளது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் சம்மன் அனுப்பி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவது பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. 

நெடுங்காலமாக நடந்துவந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது; அந்தத் தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் முறையிட்டார்; அதன்பிறகும் மத்திய அரசு அசைந்துகொடுக்கவில்லை; மாநில அரசால் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலும் கிடைத்தது என்பதெல்லாம் பழைய கதை.

என்ன அதில் எதிர்த் திருப்பமாக, போராட்டம் முடியும்தறுவாயில், அதில் கலந்துகொண்டவர்கள்மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள். செய்திதிரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

சென்னை மெரினாவில் ஜனவரி 23 ஆம் தேதி காலையில் போராட்டத்தைக் கலைக்கத் தொடங்கிய அதிரடிப்படை போலீசார், அருகிலுள்ள நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் மீனவர் கிராமங்களிலும் நுழைந்து அத்துமீறல்களில் ஈடுபட்டனர். மாட்டாங்குப்பம் பகுதியிலிருந்த மீன்சந்தை முற்றிலுமாக எரித்து நாசமாக்கப்பட்டது. பொதுமக்கள் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போராட்டப் பெண்களுக்குக் கழிப்பிடம் போன்ற வசதிகளைச் செய்ததற்காக, மீனவர் கிராமங்களில் அத்துமீறல் என்று குற்றம்சாட்டப்பட்டது. அதே நாளில், போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றார்கள் எனக் காரணம்கூறி மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் பகுதியிலும் அதிரடிப்படையினர் மிகமோசமாக நடந்துகொண்டனர். போலீசில் ஆண், பெண் இருபாலரும் வித்தியாசமில்லாமல் கடமையாற்றினார்கள். குறிப்பாக அம்பேத்கர் பாலத்தின் கீழ் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மீது போலீசார் தீவைத்த காட்சி, ’இப்படியும் நடந்துகொள்வார்களா’ என  போலீசார் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது. மதுரை அவனியாபுரத்திலும் கோவை வ.உ.சி. பூங்காவிலும் போலீசார் நடத்திய தாக்குதல் குறித்தும் உரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டினர்.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக்கோரி மாநிலம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதுவரை பெரும்பாலான மக்களின் உளப்பூர்வமான பங்கேற்புடன் இப்படியொரு முழு அடைப்புப் போராட்டம் நடந்ததில்லை எனும் அளவுக்கு அது முக்கியத்துவம் பெற்றது. அதையடுத்து பல்வேறு சமூக, அரசியல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கையில், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்ற குறிப்பிட்ட சில தரப்பினரை மட்டும், சம்மன் அனுப்பி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னையில் போலீசார் நடத்திய அத்துமீறல்கள் பற்றியும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையம் அமைக்கப்பட்டு, ஒரு பக்கம் அதன் விசாரணையும் நடந்துவருகிறது.  இந்நிலையில் இயக்குநர் கவுதமனிடம் சென்னை எழும்பூர் பழைய போலீஸ் ஆணையர் அலுவலகத்திலுள்ள சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். திரைப் பிரபலத்துக்கு முன்னதாகவே கவுதமன், தமிழ்த்தேசிய அரசியலில் அறிமுகம் உள்ளவர்; குறிப்பாக அவருடைய தந்தையார், தனித்தமிழ்நாடு இயக்கத்தினருடன் தொடர்புகொண்டவர் என்பதை எடுத்துக்கொண்டு, இயக்குநர் கவுதமனின் வாழ்க்கை வரலாற்றையே விசாரித்துள்ளனர்.

மெரினா போராட்டம்

அதையடுத்து மதுரையில் விசாலாட்சிபுரம் பகுதியிலுள்ள சிபிசிஐடி அலுவலகம், அண்ணாநகர் போலீஸ்நிலையம் எனப் பல இடங்களில் வைத்து, மே பதினேழு இயக்கம், இளந்தமிழகம், பு.இ.மு., நாணல் நண்பர்கள் இயக்கம் போன்ற அமைப்பினரைச் சம்மன் அனுப்பி, கடந்த புதன்கிழமைய சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர். ஜல்லிக்கட்டு பிரச்னையின் மையமான அலங்காநல்லூர் நிகழ்வைப் பற்றி முக்கியமாக விசாரித்துள்ளனர். ஓடும் ரயில் மறித்து நிறுத்தப்பட்ட செல்லூர் போராட்டம் பற்றியும் சிபிசிஐடி போலீசார் அதிகமாகக் கேள்வி கேட்டுள்ளனர். 

கோவையில் வ.உ.சி. பூங்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோதே, அமைச்சர் தங்கமணி தலைமையில் ரேக்ளா ரேஸ் நடத்த முயற்சி செய்யப்பட்டது. மாணவர்கள், இளைஞர்களின் எதிர்ப்பால் அது தடுக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில், வ.உ.சி. திடலில் இருந்தவர்களிடமும் இப்போது விசாரணை நடந்துள்ளது.

விசாரணையில் நாற்பது முதல் அறுபதுவரையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பாக மட்டுமின்றி, ஊர், தொழில், குடும்பம், நண்பர்கள், விருப்பம், பேச்சு, எழுத்து, மற்ற செயல்பாடுகள் என சம்பந்தமில்லாமலும் கேள்விகளைக் கேட்டுள்ளனர். விசாரணைக்குப் போன ஒரு கல்லூரி விரிவுரையாளரிடம், அவருடைய துறையில் என்னென்ன புத்தகங்களைப் படிக்கலாம்? எந்த மாதிரியான புத்தகங்கள் நன்றாக இருக்கும்? என வாதப்பிரதிவாதமே நடந்திருக்கிறது. ஆளுக்கு ஏற்ப கேள்விகள் விதம்விதமாக இருந்தாலும் மூன்றில் ஒரு பங்கு கேள்விகள் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமாகவே இருந்துள்ளன என்கின்றனர் விசாரணை செய்யப்பட்டவர்கள். கோவையில் உணவு வழங்கிய தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களிடமும் பெரும் கேள்விப்பட்டியலை வைத்துக்கொண்டு பதில்களை வாங்கிப் பதிவுசெய்துகொண்டனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போல இங்கு புதிய செயற்பாட்டாளர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதே விசாரணையில் தூக்கலாகத் தெரிந்தது என்கிறார்கள், விசாரிக்கப்பட்டவர்கள் தரப்பில். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருப்பதாகச் சட்டமன்றத்திலும் ஊடகங்களிலும் கூறியதுடன், போராட்டங்களில் பங்கேற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என அரசுத் தரப்பில் உறுதிகூறப்பட்டது; ஆனால், ஐந்து மாதங்களுக்குப் பிறகும் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள்மீது விசாரணை வளையத்தைப் புதிய முதலமைச்சரின் அரசு ஏவுவது ஏன் என்பது உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கும் கேள்வி! 


டிரெண்டிங் @ விகடன்