வெளியிடப்பட்ட நேரம்: 20:42 (17/06/2017)

கடைசி தொடர்பு:20:42 (17/06/2017)

பணம் பத்திரம்..! தெரியாத நம்பர்ல இருந்து வரும் மெசேஜ், அழைப்புக்கெல்லாம் பதில் சொல்லாதீங்க!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கு ஒரே ஒரு செல்போன் கோபுரம்தான் உள்ளது. அங்கிருந்து தினமும் மும்பைக்கு மூன்றாயிரம் மோசடி வங்கி அழைப்புகள் செல்வதாகச் சொல்லப்படுகிறது. இங்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலிருந்தும்... ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட ஃபேக் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்துவது என்பது உண்மையில் முடியாத காரியம். ஏனெனில், இந்த டிஜிட்டல் உலகில் யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் எங்கு இருந்து வேண்டுமானாலும் ஏமாற்றலாம்; பணத்தை பிடுங்கலாம். இதையே ஒரு தொழிலாக பலரும் செய்கிறார்கள். ஆகையால், நாம்தான் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும். 

ஃபேக்

வெளிநாட்டிலிருந்து லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ அல்லது பணம் வந்துள்ளதாகவோ உறுதியளிக்கும் போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவற்றை எந்தக் காலத்திலும் நம்பாதீர்கள். 

உங்களின் மொபைல் நம்பருக்கு வரும் OTP எண், உங்கள் டெபிட்/ கிரெடிட் கார்டு அட்டையின் பின் பகுதியில் இருக்கும் மூன்றெழுத்து CVV எண், உங்கள் ஏடிஎம் PIN நம்பரை யாருக்கும், எப்போதும் சொல்லாதீர்கள். இந்த எண்ணை ரகசியமாக வைத்திருங்கள். இதைப்போல உங்களுடைய இணையதள வங்கிச் சேவையின் User ID, Password விவரங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். இவற்றைக் கேட்பவர், தான் ஒரு வங்கி அல்லது கடன் அட்டை கம்பெனி அதிகாரி எனக் கூறிக்கொண்டாலும் இந்தத் தகவல்களை எவருக்கும் தெரிவிக்க வேண்டாம். உங்களுக்கு யாரும் இலவசமாகப் பணம் கொடுப்பதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA)-ன் கீழ் தடைசெய்யப்பட்ட விஷயங்களுக்காகப் போலியாக வரும் அழைப்புகளை ஏற்று எந்த வகையிலும் பணம் அனுப்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கி, தனிநபர் வங்கிக்கணக்குகளைப் பராமரிப்பதில்லை. அது வங்கிக்கணக்கு விவரங்களை யாரிடமும் கேட்பதுமில்லை. 

தனிப்பட்டவர்களுக்கு லாட்டரிப் பரிசு விழுந்ததாகவோ, வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாகவோ, உங்களுக்கு ரிசர்வ் வங்கி தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அனுப்புவதில்லை. இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள்போல போலியாகக் கொடுக்கப்படும் பெயர்களை நம்பாதீர்கள்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் ரிசர்வ் வங்கி முத்திரையுடன் அனுப்பப்படும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வமான மற்றும் உண்மையான இணையதளம் என்பது www.rbi.org.in மட்டுமே.

போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மட்டுமல்லை, நம்முடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு காந்தப்பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களைச் சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்துகொள்ளும் மோசடி செயல்கள் உள்பட பல மோசடி செயல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள், வேறு ஒரு கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்-களில் பணம் எடுப்பதற்கோ பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த வகையான மோசடிகள் நேற்று, இன்று என்றில்லை... பல ஆண்டுகளாக நீடித்துவருகின்றன. உஷாராக இருங்கள். நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தை உடனடியாக அணுகுங்கள். 


டிரெண்டிங் @ விகடன்