வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (17/06/2017)

கடைசி தொடர்பு:20:24 (17/06/2017)

பள்ளிகளுக்கு ரேட்டிங் அருமை; ஆனால் கல்லூரிகளுக்கு..?- உதட்டைப் பிதுக்கும் மாஃபா பாண்டியராஜன்

பள்ளிக்கல்வி-மாஃபா பாண்டியராஜன்

அதிமுகவின் உட்கட்சிப் பூசலை அடுத்து, முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் மாற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி அப்பதவிக்கு வந்தார்; பள்ளிக்கல்வி அமைச்சர் பதவியிலிருந்த க.பாண்டியராஜன் மாற்றப்பட்டு, செங்கோட்டையன் அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கல்வியமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துவரும் மாற்றங்கள், புதிய திட்டங்கள் பற்றி மாறுபட்ட கருத்துகள் வந்தாலும், ஆசிரியர், மாணவர், பெற்றோரின் கவனத்தை அவை ஈர்த்துள்ளன. இது குறித்து முன்னாள் கல்வியமைச்சர் க.பாண்டியராஜன் என்ன சொல்கிறார்? 

நம்முடைய ஒரு வரிக் கேள்விக்கு அவர் சொன்ன பதில் இது: 

பள்ளிக்கல்வித் துறையின் அறிவிப்புகள் குறிப்பாக புதுமைப்பள்ளி திட்டம் ரொம்ப அருமையான திட்டம். ஒருவகையில பள்ளிகளுக்கு ரேட்டிங் செய்வது இதுவரைக்கும் செய்யாததுனு நினைக்கிறேன். சில வரைமுறைகளை வைத்து மதிப்பிட்டு அரசுப்பள்ளிகளைத் தரவரிசைப்படுத்துறது முக்கியமானது. ஒரு மாவட்டத்துக்கு நான்கு பள்ளிகளை இப்படி தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல், கனவு ஆசிரியர்னு அவர்களின் பணியை ஆய்வுசெய்வது, 5 லட்சத்து 78 ஆயிரம் ஆசிரியர்களும் பணியை நிறைவா செய்றாங்களா இல்லையா, அவங்க முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுறதுக்கு இது உறுதுணையா இருக்கும். 

அதுபோக மாணவர்களுக்கு வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயிற்சி, 6 மாசத்தில் நான் பண்ண நினைச்ச விஷயங்கள் எல்லாமே, செயல்பாட்டுக்கு வந்திருக்கு. செங்கோட்டையன் - உதயச்சந்திரன் அல்லையன்ஸ் (கூட்டணி) ரொம்ப நல்லா இருக்கு. செங்கோட்டையன் பேச்சிலகூட இந்த முறை தேவையில்லாத புகழ்ச்சியில்லாம, அம்மாவ மட்டும் பாராட்டிவிட்டு, முழுமையா செஞ்ச விஷயங்களுக்கு பின்னணியைச் சொன்னார்.. ரொம்ப முதிர்ச்சியோட இருந்ததுன்னு நினைக்கிறேன். 

பயோமெக்கானிக்ஸ்- அதாவது விளையாட்டுவீரர்கள் தொலைக்காட்சியில பார்த்திருப்போம்.. அவங்களுடைய உடலசைவுகளைப் படம்பிடித்து, வீடியோ எடுத்து, அதைக் காட்டி அடுத்தகட்ட வீரர்களைத் தயார்ப்படுத்த பயிற்சிக்கு நிதியை ஒதுக்கியிருக்கீங்க. ஒலிம்பிக் போட்டிக்கு 24 வீரர்களை அனுப்புறதுன்னு இலக்குவச்சு அம்மா (ஜெயலலிதா) செய்தாங்க.. கடந்த ஆண்டு 6 பேர் போனாங்க இல்லையா... இதுக்காக தனியார்கிட்டதான் இந்த வசதி இருக்கு.. அரசுத் துறையில இப்போதான் முதல் முறையா பையோமெக்கானிக்ஸ் சென்டர் அமைக்கப்போறோம்..!

உயர்கல்வித்துறையில பெரிய அளவு தாக்கம்செலுத்தக்கூடிய அளவுக்கு அறிவிப்புகள் இந்த முறை இல்லை. வாய்ப்புகள் இருந்தது, செய்யலை. அதேமாதிரி கல்லூரிகளைத் தரவரிசைப்படுத்துறது... உலகத்தரம் வாய்ந்த அளவுக்குக் கொண்டுபோக ஏற்கெனவே எடுத்த முயற்சிகளே தடைபட்டிருக்குன்னு நினைக்கிறேன். இந்த முறை அதை எதிர்பார்த்தேன். உலகத்தர வரிசைக்கு கொண்டுபோகணும்னு அண்ணா பல்கலைக்கழகம்.. எல்லா பல்கலைக்கழகங்களும் கட்டாயம் போகணும்னு கொள்கைமுடிவா அறிவிப்பாங்கன்னு எதிர்பார்த்தேன்.. இந்தியாவில தலைசிறந்த கல்லூரிகள்னு ஒன்றிய அரசு அறிவித்திருக்கிற 100 கல்லூரிகள்ல 33 நம்முடையது.. அதனால நாமளே துணிஞ்சு உலகத்தர வரிசைக்குக் கொண்டுபோயிருக்கணும். அப்படி பண்ணாதது எனக்கு ஏமாற்றம். பள்ளிகளைப் போலவே உயர்கல்வியிலயும் இதேபோல தரவரிசைப் படுத்தியிருக்கணும். அதுவும் ஏமாற்றம்” என்கிறார் க.பாண்டியராஜன்.  

இந்த சட்டப்பேரவைக்ச் கூட்டச் செயல்பாடுகள் பற்றிக் கேட்டதற்கு, “ திமுக முதலில் வெளிநடப்பு, வெளியேற்றம்னு போனாலும் டக்குனு உள்ளே வந்துட்டாங்க. ரெண்டாவது நாளில் அந்த பிரச்னை தெரியாம, பங்குபெற்றார்கள். திமுகவின் பங்களிப்பு அதிகமா இருந்தது. அவங்க சொன்ன குறைப்பாடுகளைக்கூட ரொம்ப மென்மையாதான் எடுத்துவச்சாங்க.. முன்னால மாதிரி மோதுறாப்போல இல்லாம, நச்சுத்தன்மை இல்லாம கருத்துகளை முன்வச்சாங்க.. இந்த அரசாங்கம் போகணும்னு வெளியில அறிக்கைவிட்டாக்கூட உள்ளே வந்து அவங்க அணுகுமுறை மென்மையாதான் இருந்தது.. இந்த அணுகுமுறை வித்தியாசமா இருந்தது. இந்த சட்டமன்றக் கூட்டம் நீட் பிரச்னை பத்தி கேள்விகேட்டதும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்சொன்னது.. என்னைப் பொறுத்தவரைக்கும் ஆரோக்கியமான விவாதமா இருந்தது, ரெண்டாவது நாள் கூட்டம்” என்று பாண்டியராஜன் கூறினார்.