வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (19/06/2017)

கடைசி தொடர்பு:11:53 (19/06/2017)

ஜெயலலிதா உயில் எழுதினாரா? தொடரும் போயஸ் வில்லங்கம்...!

ஜெயலலிதா‘ஜெயலலிதா’ என்ற ஆளுமையின் மறைவு, அவர் 30 ஆண்டுகளாகக் கட்டிக் காத்த அ.தி.மு.க-வை ஆட்டம் காண வைத்துள்ளது; அந்தக் கட்சியின் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது. ஜெயலலிதா அமைத்த ஆட்சி அதிகாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சார்ந்த குழப்பங்கள்தான் இன்றைக்குத் தமிழக அரசியலையே இயக்கிக் கொண்டிருக்கின்றன. சீரியசான இந்தக் காட்சிகளுக்கு மத்தியில், ஜெயலலிதாவின் உறவுகள் நடத்தும் காமெடிக் காட்சிகளும் இடையிடையே வந்துபோகின்றன. ஜெயலலிதாவின் சொத்துகளை வைத்து நடத்தப்படும் அந்தக் காமெடிகளில், ‘ஜெயலலிதா உயில் எழுதியுள்ளார்’ என்று ஒரு தகவல் மையமாகக் கூறப்படும். கடந்த 11 ஆம் தேதி போயஸ் கார்டன், வேதா நிலையத்தின் முன் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளான தீபா-தீபக் இடையில் நடந்த பிரச்னையை அடுத்தும் ஜெயலலிதாவின் உயில் பற்றிய விவாதம் மீண்டும் வந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “அத்தை எழுதி வைத்த உயில் என்னிடம் இருக்கிறது. சரியான நேரத்தில் நான் அதை வெளியிடுவேன்” என்று பேட்டி கொடுத்து பரபரப்பைக் கூட்டினார். உண்மையில் ஜெயலலிதா தனியாக எந்த உயிலும் எழுதவில்லை, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்படி எந்த உயிலும் ‘புரோபேட்’ செய்து வைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தை விசாரித்தபோது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா எழுதிய உயிலும், தன்னுடைய சொத்துகள் எவை என அதிகாரபூர்வமாக ஜெயலலிதா அறிவித்த சொத்துகளின் விவரங்களும் கிடைத்தன.  

சந்தியா எழுதிய உயில்! 

ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவுக்கு, 1971 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கே.ஜே. என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதையடுத்து 1971 நவம்பர் 1 ஆம் தேதி அவர் தன்னுடைய சொத்துகள் குறித்தும் போயஸ் கார்டன் வீடு குறித்தும் ஓர் உயில் எழுதியுள்ளார். அதில்,‘நாட்டிய கலா நிகேதன்’ என்ற பெயரில் தான் நடத்தி வந்த நாடகக் குழுவுக்கு நான் உரிமையாளர். என் மகள் ஜெயலலிதா அதில் ஒரு பங்குதாரர். அந்தக் குழுவின் மூலம் வாங்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கே சொந்தம். போயஸ் கார்டனில் கட்டப்பட்டுள்ள வேதா நிலையம், ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வாங்கப்பட்ட கட்டடம். அதில் செய்யப்பட்ட பராமரிப்பு மற்றும் புதிய கட்டடங்கள் அனைத்தும் முழுமையாக ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் கட்டப்பட்டவை. அதனால், அதை ஜெயலலிதாவுக்கே உரிமையானவை. அதோடு, ஹைதராபாத்திலுள்ள தோட்டம், ஸ்ரீநகர் காலனி வீடு ஆகியனவும் ஜெயலலிதாவுக்கே சொந்தம். தி.நகரில் நான் வசித்து வந்த வீட்டை என் மகன் ஜெயக்குமாருக்கு சொந்தமாக்குகிறேன் என்று எழுதியுள்ளார். வழக்கறிஞர்கள் என்.சி.ராகவாச்சாரி, என்.இ.வரதாச்சாரி, டி.இ.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் இந்த உயில் 1973 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

ஜெயலலிதா சந்தியா

ஜெயலலிதா சொத்துகள்!

ஜெயலலிதா தனது சொத்துகள் என்று கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சொத்துகளின் பட்டியல். 

நாட்டியக் கலா நிகேதன் பெயரில் உள்ளவை

 1.    10 கிரவுண்ட் இடத்தில் போயஸ் கார்டன் வீடு.
 2.    ஸ்ரீநகர் காலனி வீடு, ஹைதராபாத்.
 3.    15 ஏக்கர் திராட்சைத் தோட்டம், ஜீடிமெட்லா, ஹைதராபாத்.
 4.    2.5 கிரவுண்ட் நிலம், மணப்பாக்கம், சென்னை.

ஜெயலலிதா பெயரில் உள்ளவை

 1.    செயின்ட் மேரீஸ் சாலை வணிகக் கட்டடம், சென்னை.
 2.    கடை எண் 18. பார்சன் காம்ப்ளக்ஸ், அண்ணா சாலை, சென்னை.

 3.    3.5 ஏக்கர் விவசாய நிலம், செய்யூர், காஞ்சிபுரம்.

உயில்

சசிகலாவும் ஜெயலலிதாவும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களின் பெயரில் உள்ளவை

 1.    பிரின்டிங் பிரஸ், கட்டடம் மற்றும் மெஷின்கள், கிண்டி தொழிற்பேட்டை.
 2.    நமது எம்.ஜி.ஆர் செய்தித்தாள்.
 3.    பட்டம்மாள் தெருவிலுள்ள வீடு, மந்தைவெளி, சென்னை.
 4.    கடை எண் 14, பார்சன் காம்ப்ளெக்ஸ், அண்ணாசாலை, சென்னை.
 5.    கடை எண் 9, ஜெம்ஸ் கோர்ட் காம்ப்ளெக்ஸ், நுங்கம்பாக்கம், சென்னை.
 6.    6. 3.5 ஏக்கர் நிலம், சுந்தரக்கோட்டை, மன்னார்குடி.
 7.    7. 8.5 கிரவுண்டில் உள்ள வீடு, தஞ்சாவூர்.

வாகனங்கள் 

 1.    கன்டெசா கார் (TN 09 - 0033) - 1
 2.    அம்பாசடர் கார் (TN 3585) - 1
 3.    மாருதி கார் (பதிவு எண்-2466) - 1
 4.    ஸ்வராஜ் மஜ்டா வேன் - 3
 5.    டாப் ஏசியுடன் கூடிய ஜிப்சி - 1
 6.    கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டர் (பதிவு எண்: TSF-9585) ・1
 7.    ஜீப் - 2

இந்தச் சொத்துகள் என்ன ஆகும்? 

இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துகள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துகள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். இதன்படி பார்த்தால், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோருக்குச் சென்று சேரும். மேலே சொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், தீபா, தீபக் இருவரும் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஜெயலலிதா தன்னுடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகளை வேறு யாராவது விற்க முயன்றால் அப்போது ஜெயலலிதாவின் உயில் பற்றி தெரியவரும். இப்போதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. இனிவரும் நாள்களில் போயஸ் கார்டனைச் சுற்றி நடக்கப்போகும் வில்லங்கங்களைப் பொறுத்து புதிய பூதங்கள் வெளியில் கிளம்பலாம்.