Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஒரு ஊருல ஒரு நரி..!’ - ஊர் இருக்கு... நரியெல்லாம் எங்க போச்சு?

நரி

யானை முடி தாயத்தில், நரி முடி மோதிரத்தில், நரி பல்லும் புலி பல்லும் மைனர் செயினாகக் கழுத்தில், மான் கொம்பு வீட்டு வாசலில், காட்டெருமையின் தலை வீட்டின் வரவேற்பறையில்! இப்படி விலங்குகளின் உடல் கூறுகளையெல்லாம் "நம்மகிட்ட இருந்தா நல்லது" என்கிற மூட நம்பிக்கைக்கு நாம் பலிகொடுத்திருக்கிற விலை எவ்வளவு தெரியுமா?  

"நரி" என்கிற வார்த்தையை உள்மனதிலிருந்து உச்சரித்து விட்டு கடைசியாய் நரியை, நரி பற்றிய குறிப்புகளை, அதன் சத்தத்தை எங்கே கேட்டீர்கள் என யோசித்துப் பாருங்கள். "ஒரு ஊர்ல ஒரு நரி" என ஆரம்பிக்கிற கதைகளில் இருந்த  நரிகள் இப்போது இல்லை என்பதில்தான் மனித இனத்தின் தந்திரமே அடங்கியிருக்கிறது. ஊன் உண்ணியான நரி ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்திருக்கிறது. அடர்ந்த காடுகள், கிராமங்கள், வயல்வெளிகள், குடியிருப்புகளை ஒட்டிய வனப்பகுதிகளில் எல்லாம் காணக் கிடைத்த விலங்காக இருந்த நரிகள் தற்போது கண்ணுக்குக் கிடைக்காத உயிரினங்களில் வரிசையில் சேர்ந்திருக்கிறது. 

பத்ரசாமிஇது குறித்து ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி பத்ரசாமியிடம் கேட்டதற்கு "ஒவ்வொர் ஊரிலும் "பொறை" என்கிற ஓர் ஒதுக்குபுறம் இருக்கும், அந்த இடம் எதற்கும் உபயோகப்படுத்த முடியாத நிலமா இருந்துச்சு, அந்த மாதிரியான இடங்களில்தான் நரிகள் இருக்கும், இப்போ அந்த மாதிரி ஒரு நிலமும் இல்லாம போய்டுச்சு, அந்த மாதிரியான இடங்களில் அரசாங்கம் பள்ளிக்கூடம் கட்டியிருக்கும், இல்லனா மனிதர்கள் அந்த மாதிரியான இடங்களை ஆக்கிரமிப்பு பண்ணியிருப்பாங்க, முக்கியமான இன்னொரு விஷயம் கிராமங்களில் வண்டித்தடம்னு சொல்ற ஒரு பாதை இருக்கும், அதன் ரெண்டு பக்கமும் புதர்களால், செடிகொடிகளால் ஆன ஒரு வேலி  இருக்கும், அதை உயிர்வேலினு சொல்லுவாங்க, அதையெல்லாம் அழிச்சிட்டு  இப்போ கம்பி வேலிகளும் மின்சார வேலிகளும் போட்டுட்டாங்க. அதனால சிறிய விலங்குகள் எல்லாமே பாதிக்கப்படிருக்கு, நரி  மட்டும் இல்ல காட்டுப் பூனை, மர நாய், தேவாங்கு, புனுகு பூனை போன்ற நெறய விலங்குகள் அழிஞ்சிட்டுதான் இருக்கு, இதுக்கு முக்கியமான காரணமே நாம்தான் என்கிறார். 

கோவையில் காடுகள் சார்ந்து இயங்குகிற ஒருவர் சொல்லும்போது  "நரி எல்லாம் பார்த்துப் பல வருஷம் ஆச்சு, நரியோட முடி, பல்லு வீட்ல இருந்தா நல்லதுன்னு ஒரு மூடநம்பிக்கை காலகாலமா நம்ம மக்கள்கிட்ட இருக்கு, அதற்கென்று தனியாக ஒரு சந்தையும் இங்க இயங்கிக்கிட்டு இருக்கு என்கிறார். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ரெண்டு பேரு நரி கொம்புனு சொல்லி வித்துட்டு வந்தாங்க, விசாரிச்சு பார்த்தப்ப குள்ளநரிக்கு ரெண்டு காதுக்கு நடுவுல கொம்பு மாதிரி கொஞ்சம் முடி இருக்கும் அத கொம்புனு சொல்லி சிலர் வியாபாரம் பண்ணிட்டு இருக்காங்க, அத வீட்டுல வச்சிருந்தா செல்வம் பெருகும், செழிப்பா இருக்கலாம்னு சிலர் பலஆயிரம் குடுத்து வாங்குறாங்க. காசுக்கு ஆசைப்பட்டு இருக்குற கொஞ்சம் குள்ளநரிகளையும் கொன்னு போட்டுடுறாங்க என்கிறார்.

நரி

பென்குயின் எப்படி புரபோஸ் செய்யும் தெரியுமா?

நரி, பருவ கால மாற்றத்திற்கு ஏற்ப என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உண்ணும் பழக்கமுடையது. பெரும்பாலும் எலி, பல்லி, பாம்பு, முயல், பறவைகள் எனச் சிறிய விலங்குகளை உண்ணும். காடுகளில் இருக்கிற நரி  மூன்று ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மையுடையது. சரணாலயங்கள் போன்ற இடங்களில் கொண்டுவந்து வளர்க்கப்படுகிற நரிகள் கிட்டத்தட்ட ஆறிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியது. நரிகளில் நரி , குள்ள நரி, செந்நாய், சிறு நரி பெரு நரி  எனப் பல வகைகளும் இருக்கின்றன

நரிகளின்  முக்கியமான வேலையே  சிறிய  விலங்குகளின்  வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுதான். மயில்களின் முக்கியமான எதிரியாக இருப்பது  நரிகள் தான். வயல்வெளிகளை ஒட்டி இருக்கிற இடங்களில் நரிகள் வசித்ததால்தான்  மயில்கள் அவ்வளவாக வயல்பகுதிகளுக்கும்,  விவசாய நிலங்களுக்கும் வராமல் இருந்திருக்கிறது. ஆனால்  நரிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் மயில்களின் எண்ணிக்கை  அதிகமாகி இருக்கிறது. அனேக  விவசாயிகளுக்கு இப்போது பெரும் தலைவலியாக இருப்பது மயில்கள்தான். 

நரியை இன்னும் சிலர் வேறு மாதிரியான பழக்கங்களுக்கு பயன்படுத்துகின்றனர்.  சேலம் அருகே வருடா வருடம் நரி  ஜல்லிக்கட்டு என்கிற ஒரு விழா நடக்கிறது. அதற்காக காடுகளில் இருந்து  நரியை பிடித்து வருகிறார்கள். அப்படி  பிடித்து வரப்படுகிற நரியின்  வாயை கட்டிவிடுகிறார்கள்.  அதன்  பின்னங்கால்களையும்  கயிற்றால்  கட்டி களத்தில் இறக்கி  விடுகிறார்கள். இளைஞர்கள்  நரியைப் பிடிக்க வேண்டும் என்பதை ஒரு விழாவாக கொண்டாடுகிறார்கள். தண்டனைகள் கடுமையாக இருந்தாலும் இது மாதிரியான போட்டிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.  முடி, பல், நகம், தந்தம், விஷம், கொம்பு, தோல் என  ஒவ்வொரு விலங்கின் உடல் உறுப்புகளுக்கு பின்னும் ஒரு  சந்தை இயங்கிக்  கொண்டேதான் இருக்கிறது. 

 தனிமனித வளர்ச்சிக்கு மனிதன் கையில் எடுத்த மிக முக்கியமான  விஷயம்  மூடநம்பிக்கை. மூடநம்பிக்கையை தன்  வளர்ச்சியின்   அடையாளமாக பார்த்த மனிதன் அதற்காக பல அபாயகரமான  காரியங்களை செய்ய ஆரம்பித்தான். அதன் பலனாக,  அவன் அடைந்ததை விட இழந்தது அதிகமென்பதை  உணராமலே போனான்  என்பது தான் வேடிக்கை.  நரிகளின் அழிவிற்கு  மூட நம்பிக்கை மட்டுமே காரணமல்ல, மூடநம்பிக்கையும்  ஒரு முக்கிய காரணம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement