வெளியிடப்பட்ட நேரம்: 10:08 (20/06/2017)

கடைசி தொடர்பு:10:09 (20/06/2017)

இதற்காகதான் எங்கள் இடத்தை சரவணா ஸ்டோர்ஸிடம் விற்றோம்! அங்காடித் தெருவின் கதை! பகுதி 6

அங்காடித் தெரு

ங்கநாதன் தெரு, அதிக வீடுகளுடனும் ஒரு சில கடைகளுடனும் இருந்தது என்று கடந்த அத்தியாயங்களில் கூறி இருந்தேன். அந்த ஒரு சிலகடைகளில் முக்கியக் கடையாக இருந்தது லிஃப்கோ புத்தகக் கடை. இப்போதைய விளம்பர யுகத்தில்  ரங்கநாதன் தெரு என்றால், பல்வேறு பிராண்ட்களின் பெயர்களில் உள்ள ஜவுளிக் கடைகளின் பெயர்கள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.  
ஆனால், அந்தக் காலத்தில் எந்தவித விளம்பரமும் இல்லாமல், ரங்கநாதன் தெரு என்றால் லிஃப்கோதான் என்ற அடையாளம் அந்தக் காலத்தைய மக்களிடம் இருந்தது. கடலூரைச் சேர்ந்த வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மா என்பவர் சென்னைக்கு வந்தபோது, முதன் முதலாக 'லிட்டில் ஃப்ளவர்' என்ற பெயரில் ஆங்கிலப் புத்தகங்கள் வெளியிடும் பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்தார். அப்போது எஸ்.எஸ்.எல்.சி என்று சொல்லப்பட்ட பத்தாம் வகுப்புக்கு ஆங்கில இலக்கண நோட்ஸ்களை வெளியிட்டார். பின்னர், படிப்படியாக வளர்ந்த இந்த நிறுவனம் லிஃப்கோ என்று பெயர் மாற்றம் பெற்றது.

ரங்கநாதன் தெரு

ஓர் அனா விலை

1953-ம் ஆண்டு ரங்கநாதன் தெருவுக்கு லிஃப்கோ இடம் பெயர்ந்தது. இது குறித்து லிஃப்கோ உரிமையாளர் வரதாச்சாரி கிருஷ்ணசாமி சர்மாவின் மூன்றாவது மகன் வீரராகவனிடம் பேசினோம். "இப்போது சரவணா ஸ்டோர் இருந்த இடத்தில்தான் லிஃப்கோ இருந்தது. என் தந்தை எஸ்.எஸ்.எல்.சி- படிப்புக்கான கைடுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டார். ஓர் அனா விலையில்  ஆங்கிலக் கைடுகள் வெளியிடப்பட்டன. தமிழில் 'கோனார்' போல, எங்களது ஆங்கில நோட்ஸ் பாப்புலர் ஆக இருந்தது. அப்போது ரங்கநாதன் தெருவில் முக்கியமான கடையாக எங்கள் கடை இருந்தது. கடையின் ஒரு பகுதியில்தான் எங்கள் வீடும் இருந்தது.

1952-ல் இருந்து ஆங்கில டிக்சனரி வெளியிட்டோம். டிக்சனரிக்கு பெரும் அளவில் வரவேற்பு இருந்தது. இப்போது சிறிய அளவில் இருந்து பெரிய டிக்சனரி வரை வெளியிட்டு வருகிறோம். ஒரு கட்டத்தில் ஆன்மிகப் புத்தகங்களும் நாங்கள் வெளியிட்டோம். டிக்சனரி, ஆன்மிகப் புத்தகங்கள் என எங்கள் பதிப்பகத்துக்கு நல்ல பெயர் கிடைத்தது.

மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு

லிஃப்கோஅப்போது மாம்பலம் ரயில் நிலையத்துக்கு மின்சார ரயிலில் வருபவர்கள், எங்கள் தெரு (ரங்கநாதன் தெரு) வழியாகச் சென்று, (அப்போது தி.நகர் பேருந்து நிலையம் இல்லை) உஸ்மான் ரோட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நகரப் பேருந்துகளில் ஏறிச் செல்வார்கள். உஸ்மான் ரோட்டில் இருந்து பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் என்று நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள் இருக்கும். மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து குறைந்த தூரத்தில் பேருந்து நிலையம் இருந்ததால்தான் இந்தத் தெருவை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தினர். ரங்கநாதன் தெருவழியே மக்கள் அதிக அளவு செல்லத் தொடங்கியதால்தான், நாளுக்கு நாள் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்போது எங்கள் கடையைத் தவிர அம்பிகா அப்பளம் கடை ஒன்றும் இருந்தது. ஆர்.ஆர்.ஸ்டோர் என்ற பெயரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டும் இருந்தது.
எங்களைப் பார்த்துத்தான், தி.நகரில் பல்வேறு நிறுவனங்களின் பதிப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நாளடைவில் மக்கள் நெருக்கம் அதிகமானதால், எங்களின் வீட்டை காலி செய்துவிட்டோம். வீட்டை சரவணா ஸ்டோர் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம். பின்னர் கடையை மட்டும் தொடர்ந்து நடத்திவந்தோம்.  

நெருக்கடி அதிகம்

நாளடைவில் ரங்கநாதன் தெரு மிகவும் நெரிசல் ஆகிவிட்டது. வணிக மயமாகவும், நெருக்கடியாகவும் ஆகிவிட்டது. புத்தகம் வாங்க வருபவர்கள், எப்போதும் அமைதியான ஒரு சூழலைத்தான் விரும்புவார்கள். நெருக்கடி அதிகமானதால், எங்கள் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டது. தெருவில் இருந்த நெரிசலைப் பார்த்து பலர் எங்கள் கடைக்கு வரத் தயங்கினர். எனவே, பின்னர் கடையையும் சரவணா ஸ்டோர் நிறுவனத்துக்கே கொடுத்துவிட்டு, சி.ஐ.டி நகர் வந்துவிட்டோம். பின்னர், ரங்கநாதன் தெருவின் கடைசியில் சிறிய கடை மட்டும் வைத்திருந்தோம். அந்தக் கடை இப்போது இருக்கும் ராமநாதன் தெருவுக்கு மாற்றப்பட்டது. லிஃப்கோ நிறுவனத்தை இப்போது மூன்றாவது தலைமுறையினர் நடத்தி வருகின்றனர். அடுத்து பல தலைமுறைகளைத் தாண்டியும் எங்கள் பயணம் தொடரும். எங்களின் தொடக்கம் ரங்கநாதன் தெரு என்பதால், அந்தத் தெருவை மறக்க முடியாது" என்றார். தியாகராய நகரின் பழைய அடையாளங்களில் ஒன்றாக இருப்பது தி.நகர் சோஷியல் கிளப்... அது குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்