வரகரிசி சாப்பாடு... குதிரைவாலி பொங்கல்... சென்னை@100-ல் இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!

சென்னை

சென்னையிலிருந்து தென் தமிழகத்துக்குச் (NH45) செல்பவர்கள் அனைவரின் கண்களிலும் இந்த 99KM போர்டு பட்டிருக்கும். இன்னொரு காபி ஷாப் என்ற எண்ணத்தில்தான் பலரும் அதைத் தாண்டியிருப்போம். ஆனால், அது ஒரு பாரம்பர்ய உணவகம். குதிரைவாலி, திணை, வரகரிசி என வித்தியாசமான உணவுகளை வழங்குவதோடு, நாம் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லும் உணவுகளைச் சாப்பிட இடமும் தருகிறார்கள். அதாவது Outside food இங்கே allowed. அந்தக்கடையின் உரிமையாளர் மனோகரனைச் சந்தித்துப் பேசினோம். 

மனோகரன் தன்னுடைய அனுபவங்களை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார். 'இந்திய ராணுவத்தில் விமானப்படையில் 12 வருடம் வேலை பார்த்திருக்கிறேன். வேலை ஓய்வு பெற்ற பிறகு, சொந்த ஊர் திரும்பியதும், பால்விற்பனை நிறுவனத்தை ஆரம்பித்தேன். எனக்கு அந்த தொழிலில் திருப்தி இல்லாததால் இந்த இடத்தில், காபி கடை ஒன்றை ஆரம்பித்தேன். நான்கு வருடத்திற்கு முன்னால் இட்லியும், காபியும் மட்டுமே விற்பனை செய்தேன். ஆனால் அடுத்தவங்களுக்குப் பயன்படும்படியான தொழில் துவங்கலாம்னு யோசித்து இந்த பாரம்பர்ய உணவகத்தை ஆரம்பித்தேன். காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை இந்தக் கடை செயல்படும். இந்த உணவகத்தில் பாரம்பர்யமான உணவுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்கிறோம். வரகரிசி சாப்பாடு, வெந்தயகளி, சிறுதானிய சப்பாத்தி, வாழைப்பூ வடை, குதிரைவாலி பொங்கல், திணைப் பாயாசம்னு ஏகப்பட்ட ரகங்கள் இருக்கின்றன' என்றவர் தேநீர் ஸ்டால் பக்கம் வரை அழைத்துக்கொண்டு சென்றார். மூலிகை தேநீர், சுக்குமல்லி தேநீர், பனங்கற்கண்டு பால் என மருத்துவ குணங்களைக் கொண்ட தேநீர் படு ஜோராக விற்பனையாகிக்கொண்டு இருந்தது. அதன் அருகிலேயே பாரம்பர்ய தானியங்களும், புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகிறது. பழக்கடை மற்றும் பழங்கால பித்தளை செம்பு பொருள்கள் விற்பனையும் செய்யும் இடமும் தனியாக இருக்கிறது.

    அனைத்தையும் சுற்றிக்காட்டிய மனோகரன் தொடர்ந்தார். 'இங்கே 25 பெண்கள் வேலை செய்கிறார்கள். எல்லோரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இது ஒரு வேலை வாய்ப்பாகவும், ஓர் உதவியாகவும் இருக்கிறது. சென்னையிலிருந்து சரியா 99 கிலோமீட்டரில் இந்தக் கடை அமைந்திருக்கிறது. பொதுவாகவே ஒரு பயணத்தின்போது, ஒரு 100 கி.மீ தூரம் பயணித்தவுடன் நமக்கு களைப்பு ஏற்படும். பொதுவா நமக்குக் களைப்பு தீர தேநீர் அருந்துவோம், அதை மனதில் வைத்துதான் இந்த உணவகத்தை ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்கள் அவர்களுடைய உணவைக் கொண்டுவந்தும் சாப்பிடலாம், இதற்காகத் தனியாகக் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. இந்த எண்ணம் வருவதற்கு ஒரே காரணம்தான், குடும்பத்தோட உணவைக் கொண்டு வந்து சாலையோரத்தில் வைத்து சாப்பிடுவார்கள். அதைப் பார்க்கும்போதெல்லாம் இப்படிச் சாப்பிடுவது பாதுகாப்பானதா எனத் தோன்றும். நானும் வீட்டிலிருந்து கடைக்கு வரும்போது வழியில் குடும்பமாக நின்று சாப்பிடுபவர்களை அழைத்து வந்து என்னுடைய உணவகத்தில் இலவசமாக இடம் கொடுத்து சாப்பிடச் சொல்வேன். இதையே வாடிக்கையாக்கிவிடலாம் என நினைத்து என்னுடைய உணவகத்தில் அவரவர்கள் கொண்டு வந்து சாப்பிடுவதை விளம்பரப்பலகையை வைத்து வாடிக்கையாக்கினேன். சென்னையை விட்டு வெளியே வரும்போதும், உள்ளே போகும் போதும் நல்ல சூழ்நிலையில் நம் பாரம்பர்ய சாப்பாட்டை மக்கள் குடும்பத்தோடும், குதுாகலத்தோடும் சாப்பிட்டு போகணும்ங்குறதுதான் என்னோட விருப்பம்” என்றவர், பாரம்பர்யத்தின் பக்கம் பேச்சைத் திரும்பினார்.

 'பாரம்பர்ய சாப்பாட்டை மக்கள் மறந்து விட்டனர். பொதுவாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கிறபோது, தரமில்லாத உணவுகள்தான் அதிகமாகக் கிடைக்கிறது. மக்களும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இன்றைக்கு நெடுஞ்சாலைகளில் விற்கப்படும் தேநீரின் விலை குறைந்தபட்சம் இருபது ரூபாய் இருக்கும். ஆனால் தரமானதாக, உடலுக்கு சுகாதாரமானதாக இருக்குமா எனக் கேட்டால் கேள்விக்குறிதான். அந்த விலைக்கே என்னால் உடலுக்கு ஆரோக்கியமான தேநீரும், வாழைப்பூ வடை, கீரை வடை போன்ற பலகாரங்களையும் கொடுக்கிறேன். இங்கே தானிய வகைகளையும் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அந்தத் தானிய வகைகளை வாங்கிச் செல்வோர் சமைக்கத் தெரியாதவர்களாக இருந்தால், அவர்களுக்குச் சமையல் குறிப்பு புத்தகத்தை இலவசமாகக் கொடுக்கிறேன். பெரும்பாலான மக்களுக்குத் தானிய வகைகளைச் சமைக்கத் தெரியவில்லை. சுத்தமான கொம்புத்தேன் வகைகளும் எங்களிடம் கிடைக்கிறது. என் கடைக்கு எதிரில் இருக்கும் மலைப்பகுதி வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும்' என்றபடியே நமக்கு விடைகொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!