வெளியிடப்பட்ட நேரம்: 13:26 (21/06/2017)

கடைசி தொடர்பு:16:11 (21/06/2017)

‘விவசாயிகளும்... கார்ப்பரேட்டுகளும்... ’எங்களுக்குக் கொஞ்சம் புரிய வையுங்கள் மிஸ்டர் அருண் ஜெட்லி! #Analysis #VikatanExclusive

விவசாயிகள்

“விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேண்டுமானால், மாநில அரசு தள்ளுபடி செய்துகொள்ளட்டும். இதைப் பற்றி இதற்கு மேல் பேச எதுவும் இல்லை” என்று உறுதியான மொழியில் சொல்லிவிட்டார் நமது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. உங்களுக்கெல்லாம் எப்படி என்று தெரியவில்லை... எனக்கு அவரது சொல்லாடல்களைக் கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ‘அட... எவ்வளவு கறாரான ஒரு கடன்காரரை நமது நிதி அமைச்சராகப் பெற்றுள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தின் மீது அவருக்கு எவ்வளவு அக்கறை... விவசாயிகள் செத்தால் என்ன... கூட்டம் கூட்டமாக நிலத்தைக் கைவிட்டுப் பெருநகரங்களுக்குப் புலம்பெயர்ந்தால் என்ன... எனக்கு தேசம்தான் முக்கியம்... வளர்ச்சிதான் முக்கியம்’ என்ற நிதி அமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். நிச்சயம் தேசம் வளர்ந்துவிடும் என்று எண்ணக் கோட்டைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோதுதான், கார்ப்பரேட் கடன் தள்ளுபடி தொடர்பான பாழாய்ப்போன தரவுகள் என் கண்ணில்பட்டன. அதை மட்டும் பார்த்திருந்தால்கூட, தேசத்தின் வளர்ச்சிக்காக இந்தத் தள்ளுபடி என்று நானும் கடந்துசென்றிருப்பேன். துரதிர்ஷ்டமாக நம் தேசத்தின் பொருளாதார அறிஞர்களின் பேச்சுகளையும் படிக்க நேரிட்டது. அதன் விளைவாகத்தான் இதை எழுத நேரிட்டுவிட்டது.

“கார்ப்பரேட் கடன்களும்... விவசாயக் கடன்களும்!”

விவசாயம்கடந்த ஐந்து ஆண்டுகளில்... அதாவது, 2011 - 2016 (காங்கிரஸ் - பி.ஜே.பி) வரையிலான காலகட்டத்தில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனான ஏறத்தாழ நான்கு லட்சம் கோடி ரூபாய் கடன்கள் போக்கெழுதப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய பத்தாண்டுகளில் மட்டும் பெருநிறுவனங்களின் போக்கெழுதப்பட்ட தொகை ஏறத்தாழ 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் என்கிறது ஒரு புள்ளிவிவரம். தோராயமாக இந்தப் பதினைந்து ஆண்டுக் கணக்குகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், ஆண்டுக்கு 0.93 லட்சம் கோடி பெருநிறுவனங்களின் கடன்களைப் போக்கெழுதி உள்ளது இந்திய அரசாங்கம். அதானிக் குழுமத்தின் மொத்தக் கடன் மட்டும் 72,000 கோடி ரூபாய்க்கும் மேல். சர்வதேச பொருளாதார அமைப்பு 2008-ம் ஆண்டு தரவுகளைக் கொண்டு ஓர் அறிக்கையைத் தயார் செய்தது. அதன்படி, அந்த ஆண்டில் வாராக்கடனாகத் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை 52,500 ரூபாய். அதாவது, 20-க்கூட தாண்டாத பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் கோடி ரூபாயைப் பொக்கெழுதிக் கொண்டிருக்கும்போது, இந்தியா முழுவதிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட மொத்தக் கடன் 52,500 கோடி ரூபாய்.

 “அச்சுறுத்தும் நீதி”

விவசாயிகளின் கடன் குறித்து பேசிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், அருந்ததி பட்டாச்சாரியா, “தொடர்ந்து விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்துகொண்டே இருந்தால், மொத்த வங்கிக் கடன் ஒழுங்கும் கெட்டுவிடும்'' என்று பதறுகிறார். அப்படியானால், பெரு நிறுவனங்களுக்குக் கடன் தள்ளுபடி செய்தால், வங்கி ஒழுங்கு கெடாதா... என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? கொஞ்சம் பொறுங்கள். அதற்கு நம் பொருளாதார வல்லுநர்கள் பதில் வைத்திருக்கிறார்கள். 

தேசத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியம், “இப்படித்தான் முதலாளித்துவம் வேலை செய்யும். நீங்கள் பெருநிறுவனங்கள் வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தொடர்ந்து அவர்களை மன்னிக்க வேண்டும். பெருநிறுவனங்களை இப்படிக் காப்பது ஊழலுக்கும்... ஒட்டுண்ணிப் பொருளாதாரத்துக்கும் வழிவகுக்கும். ஆனால், நமக்கு வேறு வழியில்லை” என்கிறார். 

அதாவது, பெருநிறுவனங்கள் தொடர்ந்து செய்யும் தவறுகளை மன்னிக்க வேண்டுமாம்... அரசின் தவறான கொள்கைகளுக்குப் பலியாகி, கடனாளி ஆகும் விவசாயிகளைக் காக்கக் கூடாதாம்.. இந்த நீதி... இந்தியாவின் நீதி அச்சுறுத்துகிறது. 

விவசாயிகள்

“விவசாயக் கடன்களும்... நமது புரிதலும்”

கார்ப்பரேட் எத்தனை பேருக்கு வேலை வழங்குகிறது... இந்தியாவின் பொருளாதாரம், அந்நியச் செலாவணியை உயர்த்துகிறது.. அவர்களுக்குக் கடன் வழங்கினால்தான் என்ன... கடன் தள்ளுபடி செய்தால்தான் என்ன...? - இது, எதார்த்த இந்திய மனதின் புரிதல் மற்றும் கேள்வி.

இதே கேள்வியை அண்மையில் இயற்கை வேளாண் அறிஞர் பாமயனுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது முன்வைத்தேன். அவர் சொன்னது இதுதான், “எங்கள் ஊரில் ஒரு விவசாயி, தன் வேளாண் நிலத்தில் ஏறத்தாழ 20 பேருக்குத் தினமும் வேலைவாய்ப்பு தருகிறார். அவரது முதலீடு 20 லட்சம் ரூபாய்தான்... ஆனால், பல லட்சம் கோடி வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு வசதிகள், பல லட்சம் கோடி கடன், பின் அதனைப் போக்கெழுதுதல்... இவை அனைத்தையும் அனுபவித்து, பெரு நிறுவனங்கள் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கின்றன? கணக்கிட்டுப் பார்த்தால், ஒரு கோடி ரூபாய் செலவு செய்து ஒரு நபருக்குக் கடன் வழங்கி இருக்கிறது. இது முட்டாள்தனமாகத் தெரியவில்லையா...” என்று கேள்வி எழுப்பினார். இதையேதான் சூழலியல் செயற்பட்டாளர் பியூஷும் தன் தோட்டத்தில் நிரூபித்துக்கொண்டிருக்கிறார். மறைந்த வேளாண் செயற்பாட்டாளர் சிவசாமியும் இதையேதான் ஒரு சந்திப்பின்போது சொன்னார். 

வேளாண்மையில் லாபம் வராது என்பது உண்மையென்றால், நம் பெரு நிறுவனங்கள் லட்சக்கணக்கான ஏக்கரில் ஆப்ரிக்காவில் விவசாயம் செய்வது ஏன்..? வேளாண்மை என்பது வாழ்வியல் என்றெல்லாம் கவித்துவமாகப் பேசாமல், பொருளாதாரரீதியாகக் கணக்கிட்டால்கூட உண்மையில், வேளாண்மை லாபம் தரக்கூடியதுதான்... தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கக் கூடியதுதான்.  விவசாயத்தையும், விவசாயிகளையும் முடமாக்கிவைத்திருப்பது நமது அரசாங்கமும், அதன் கொள்கைகளும்தான்!

அப்படியெல்லாம் இல்லை... உங்களுக்கு வேளாண்மை, கார்ப்பரேட் நிறுவனங்கள் குறித்து எல்லாம் புரியவில்லை என்றால்... எங்களுக்குக் கொஞ்சம் புரியவையுங்கள் மிஸ்டர் அருண் ஜெட்லி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்