வெளியிடப்பட்ட நேரம்: 14:09 (21/06/2017)

கடைசி தொடர்பு:14:46 (21/06/2017)

'முத்து முதல் காலா வரை' - ரஜினி போடும் அரசியல் கணக்கு!

ரஜினி காலா திரைப்படம்

"நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது... ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" - 1995-ல் வெளிவந்த 'முத்து' திரைப்படத்தில், ரஜினி ஒலித்த வசனம் இது. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினி முரண்பட்டிருந்த நேரம் அது. அந்த நேரத்தில் வெளியான இந்த வசனம், ரஜினிமீது அரசியல்ரீதியான எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இப்போது, ஆண்டுகள் 22-ஐக் கடந்தும் 'போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்பதாகப் பரிணாமம் பெற்றுத் தொடர்கிறது அந்த வசனம்.  ''தமது திரைப்படங்கள் வெளியாகும் நேரங்களில், அரசியல் கருத்துகளை வெளியிடுவது ரஜினியின் வழக்கம். அதுவே முத்துவில் தொடங்கி இப்போது காலா வரை நீண்டுள்ளது'' என்ற விமர்சனங்களை அரசியல் கருத்தாளர்கள் முன் வைக்கின்றனர். அதேநேரம், ''எங்க சூப்பர் ஸ்டார் இப்போ பழைய ரஜினி இல்லை. முற்றிலும் புதிய ரஜினி. இம்முறை அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சரியான திட்டமிடல்களுடன் எடுத்து வைக்கப்படுகிறது. ரசிகர்களை அவர் சந்தித்தபோதே இதை உணர்ந்தோம். அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் மறைவு, தி.மு.க-வில் உடல்நிலை சரியில்லாமல், செயல்படாத நிலையில் இருக்கும் கருணாநிதி என இருபெரும் கட்சிகளிலும் தலைமைப் பொறுப்பில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த வெற்றிடத்தை எங்கள் சூப்பர் ஸ்டார் நிரப்பவுள்ளார். அதையொட்டிய பயணங்கள் தொடங்கிவிட்டன.

ரஜினி அர்ஜுன் சம்பத்

இதோ அந்தப் பயணம் விவசாய சங்கப் பெரியவர் அய்யாக்கண்ணு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் என சந்திப்புகளாக நீண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக எங்களுக்கும் சில புதியத் திட்டங்களைக் கொடுத்துள்ளார்'' என்கின்றனர் ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் அவரின் ரசிகர் மன்றத்தினர். அவர்கள் விடுவித்தப் புதிரை அறிவதற்கு முன் இந்தச் சந்திப்பு சம்பவங்களைப் பார்த்துவிடுவோம். கடந்த 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அய்யாக்கண்ணு ரஜினியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சந்திப்புக்குப்பின் வெளிவந்த அய்யாக்கண்ணு, "ரஜினிகாந்தைச் சந்தித்தது மனநிறைவாக உள்ளது. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென்பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி தருவதாகச் சொன்னார். அந்த நிதியைப் பிரதமரிடம் தந்து நதிநீர் இணைப்பைத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்" என்றார். இதற்குப் பிறகு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியைச் சந்தித்துள்ளார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், அரசியல் ரீதியான டிஸ்கஷனும் நடந்துள்ளது. இதுகுறித்துப் பேசிய அர்ஜுன் சம்பத், ''ரஜினி, ஆன்மிகம் - அரசியல் ஈடுபாடுகொண்டவர். அதனால் நட்பு, ஆன்மிகம், அரசியல் இந்த மூன்றைப் பற்றியும் பேசினோம். 'சிஸ்டம் கெட்டுப்போய் இருக்கு என்று நீங்கள்தான் கூறியிருந்தீர்கள். 'இந்தச் சிஸ்டத்தை மாற்றுகிறேன் என்று பலர் கூறலாம். ஆனால், அதை மாற்றக்கூடிய வலிமை இங்கு  யாருக்குமில்லை. ஆனால், நீங்கள் நினைத்தால் அதை மாற்ற முடியும். அதற்கான பலம் உங்களிடமுள்ளது'  என்று பேசினேன். சிரித்தார். பிறகு பேசிய அவர், 'நதிநீர் இணைப்புதான்  உடனடியானத் தீர்வு. தற்போதைக்கு இந்தக் கங்கை - காவிரித் திட்டம் என்பது உடனடியாகத் தீர்க்கக்கூடியது அல்ல. குறைந்தபட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். அதில், ஏற்கெனவே கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், கிருஷ்ணா நதி சென்னைவரை வந்துள்ளது. எனவே, நதிகளை இணைப்பதுதான் மிகப்பெரிய பணி. அந்த மாதிரிச் செய்யும்போது மத்திய - மாநில அரசு இணைந்து செயல்படவேண்டும். அப்படியான காரியங்கள் செய்யவேண்டும் என்றால், அரசியல் சக்தி தேவையாகிறது. அதற்கான பணியைச் செய்துவருகிறேன்; நிச்சயமாகச் செய்வேன்' என்றார். தமிழகத்து மக்களின் நலனில் அக்கறை கொண்டவர் ரஜினி. அவர்களும் ரஜினிமீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கைக்கு, சிறந்த முன்மாதிரியாக ரஜினி இருப்பார்'' என்கிறார் நம்பிக்கையாக.

அய்யாகண்ணு

''இந்த இருவரிடமும் எங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினி பேசியதில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பார்த்திருப்பீர்கள். அது 'விவசாயம்'. ஆம், எங்களை விவசாயப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும்படி கூறியுள்ளார்'' எனும் மன்ற நிர்வாகிகள் அதுகுறித்து விரிவாக விளக்கத் தொடங்கினர்.

"ஒரு தேசத்தோட முதுகெலும்பு விவசாயம்தான். ஆனா 142 வருஷத்தில் இல்லாத வறட்சி, இந்தாண்டுல தொடங்கியிருக்கு. விவசாயக் கடன்களால், விவசாயிகள் தவித்ததும் தற்கொலை செய்ததும் எங்க தலைவர் ரஜினியை ரொம்பவே உலுக்கியது. டில்லியில், விவசாயிகள் நிர்வாண நிலைக்குச் சென்று போராடியது கண்டு ரொம்பவே கஷ்டப்பட்டார். இதற்குத் தீர்வு என்பது, நதி நீர் இணைப்பில் மட்டுமே சாத்தியம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். இதையொட்டித்தான் ஏற்கெனவே காவிரி பிரச்னை எழுந்தபோது, ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்தார். தற்போது வறட்சி தீவிரமடைந்துள்ளதால், விவசாயப் பிரச்னைகளில் கவனம் குவிக்கத் தொடங்கியுள்ளார் தலைவர் ரஜினி. இதையொட்டித்தான் அய்யாக்கண்ணு மற்றும் அர்ஜுன் சம்பத்திடம் பேசினார். இந்தச் சந்திப்புகளில், அரசியல் கடந்து விவசாயம் குறித்தே ஆலோசனை நீண்டது. ரசிகர் மன்றத்தினரிடமும்  ஏரி, கால்வாய் தூர்வாருதல் போன்றவற்றில் கவனம் செலுத்தக் கூறியுள்ளார். விரைவில், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்" என்கின்றனர் உற்சாகமாக.

விவசாயப் பிரச்னைகளைத் தீர்க்க நதிநீர் இணைப்புக் கொள்கையில் கவனத்தைத் திருப்பியுள்ளார் ரஜினிகாந்த். இதற்கானப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தீர்வு கிடைத்தால், அது தனிப்பட்ட அளவிலும் ரஜினிக்கு 'மகிழ்ச்சி' அளிக்கும் விஷயம். மறுபுறம் இதையொட்டி 'ஒரு பாசிட்டிவ் இமேஜ் உருவாகும்.அது தமது அரசியல் பயணத்துக்கான அச்சாரத்தைக் கொடுக்கும்' என்பதையெல்லாம் கணக்குப் போட்டே அடியெடுத்து வைத்துள்ளார் அவர். 'கூட்டிக் கழித்துப் பார். கணக்கு சரியா வரும்' என்பது அண்ணாமலை படத்துக்குப் பொருந்தும். அரசியலுக்குப் பொருந்துமா?


டிரெண்டிங் @ விகடன்