"பெருமாள்பட்டு போனா காசுக்கு கவலை இல்லை!" மணல்கொள்ளையில் காவல்துறை அதிகாரிகள் கணக்கு

மணல்

"டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் புரட்சி எப்படி உண்டானதோ, அப்படியானதொரு எழுச்சி மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்துவதிலும் எழவேண்டும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

"திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு கிராமங்களின் நடுவே உள்ள ஆற்றில் அள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்துநிறுத்த அரசு தவறிவிட்டது" என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் சுமார் 2,000 ஏக்கர் விளைநிலம் உள்ளது. இந்தக் கிராமத்தில் இருந்து தெரிந்த நபர் மூலம் புகார் ஒன்று வந்தது. நம்மைத்தொடர்பு கொண்ட நபர், "வேப்பம்பட்டு அருகே அமைந்துள்ள எங்கள் கிராமத்தில் 40 ஆண்டுகாலமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதற்காக எவ்வளவோ போராடியும், அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் மிகவும் சோர்ந்து போய்விட்டோம். ஒருமுறை அந்தப்பகுதியைப் பார்த்துவிட்டு, எங்களுடைய பிரச்னையை எழுதுங்கள்" என மிகவும் கவலையுடன் கூறினார்.

மணல்கொள்ளை


அந்தநபரின் புகாரைத்தொடர்ந்து பெருமாள்பட்டு பகுதிக்குப் பயணமானோம்.'சென்னைக்கு அருகே இப்படியான ஒருஇடம் இருக்கிறதா?' என்று வியக்கவைத்தது அந்தப்பகுதி. கிராமத்தைச் சுற்றிலும் விவசாய நிலங்களும், நீர்நிலைகளும் அமைந்துள்ளன. ஊருக்கு நடுவே இருந்த குளங்களை பார்த்துவிட்டு "மிக அழகாக உள்ளது" என்று அந்த நபரிடம் தெரிவித்தோம். அதற்கு அவர், "கிராமத்தைச்சுற்றி இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்தன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து பெரும்பாலான குளங்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டனர்" என்றார் ஆதங்கத்தோடு.

தொடர்ந்து பேசியவர், "விவசாய நிலப்பகுதியின் நடுவே ஒருகூவம் ஆறு ஒடுகிறது. இந்த கூவம் ஆற்றில் அள்ளப்படும் மணல் கொள்ளை குறித்துச்சொல்லவே உங்களை அழைத்தேன்" என்று அந்தப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

"இங்கிருந்து தொடங்கும் இந்த ஆறுதான் சென்னையின் மையப்பகுதிவரை செல்கிறது. பெயர் என்னவோ கூவம் என்று சொல்லப்பட்டாலும், அதில் சுத்தமான மழைநீரும், ஊற்று நீரும்தான் ஓடியது. இந்த ஆற்றில் இருந்துதான் சுமார் ஐந்து கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இப்படியான ஆறுதான் தற்போது மணல் சுரண்டலில் சிக்கி சின்னாபின்னமாகி முற்றிலுமாக அழிந்துவிட்டது" என்றார். அந்தப்பகுதிக்குப் போய் பார்த்தபோது, 'தாயின் கருவறையை சிதைப்பதும் இந்த ஆற்றில் இருந்து மணல் எடுப்பதும் ஒன்றுதான்' என நினைக்கத்தோன்றியது. ஆற்று மணல் மொத்தத்தையும் சுரண்டி வைத்துள்ளனர். சுரண்டப்படாத இடமே இல்லை என்னும் அளவுக்கு அந்தப்பகுதி பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்தது. நாம் அந்தப்பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சில ஆட்கள் நம்மை வேவு பார்த்தனர். சுற்றிச்சுற்றி வருவதும், நம்மை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தனர். 'நீண்டநேரம் அங்கே நிற்கக்கூடாது' என உணர்ந்து, அங்கிருந்து கிளம்பிப்போய் கிராம மக்களைச் சந்தித்துப் பேசினோம்.

முரளி "மணல்கொள்ளையைத் தடுக்க, ஆற்றுக்குள் வாகனங்கள் செல்லாதவாறு கிராம மக்கள் பகல் நேரங்களில் வெட்டும் கால்வாயை, மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் இரவு நேரத்தில் மூடிவிட்டு, ஆற்றுக்குள் இறங்கிவிடுகின்றனர்" என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த முரளி. அவர் மேலும், "நீர் நிலைகளாக இருந்த இந்தப்பகுதி தற்போது முற்றிலும் வறண்டு போய்விட்டது. 1980-ம் ஆண்டில் தொடங்கிய இந்த மணல்கொள்ளை இன்றுவரை நின்றபாடில்லை. இதனால், நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விளைநிலங்கள் பாவைவனமாகி விட்டன. இந்தப்பகுதியைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டோம். ஆனாலும், அரசு இந்த மணல்கொள்ளையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர், ஆர்.டி.ஒ, பொதுப்பணித்துறை அதிகாரிகள், தலைமைச் செயலாளர், முதலமைச்சர் என அனைத்துத் துறைகளுக்கும் புகார்மனு அளித்து விட்டோம். ஆனாலும், அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. இப்பகுதி செவ்வாய்ப்பேட்டை காவல்நிலைய எல்லையில் வருவதால் அங்குள்ள காவலர்களுக்குத் தேவையானதை, மணல் கொள்ளையர்கள் 'கவனித்து' விடுகிறார்கள். அதன் காரணமாக, எந்த அதிகாரியும் இந்தக் கொள்ளையைத் தடுக்க முன்வருவதில்லை. காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் தேவைப்பட்டால், 'பெருமாள்பட்டு போனால் காசு கிடைத்துவிடும். அதனால் அங்கே எனக்கு டூட்டி போடுங்கள்' என்று மிக வெளிப்படையாகக் கேட்பார்கள். சமூகவிரோதிகள் மணல்எடுப்பதற்குப் பயந்தாலும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்களுக்குப் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களை வளர்த்து வருகிறார்கள்" என்றார். கவலையோடு...

இதுகுறித்துப் பேசிய தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடிவருபவருமான கௌரிசங்கர், "நான் இதழியல் படித்தவன். இயற்கை விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். விவசாயத்தில் இறங்கியபோது முதலில் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. அறுவடை சமயத்தில் தண்ணீர் பற்றாக்குறை வந்துவிட்டது. வளமான பகுதியாக இருந்த இடத்தில் திடீர் வறட்சி வரக்காரணம் என்ன என்று ஆராயத்தொடங்கினேன். இயற்கைவளங்களை அழிப்பதுதான் இத்தகைய சிக்கலுக்குக் காரணம் என்பதை உணரமுடிந்தது. அன்றில் இருந்துதான் மணல்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினேன். அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை பலருக்கும் மனு அளித்துவிட்டேன். ஆனாலும் எந்தப்பயனும் இல்லை. மணல்கொள்ளை மேலும் தீவிரமடைந்ததே தவிர குறைந்தபாடில்லை. ஆற்றில் மணல் லாரியோ அல்லது டிராக்டரோ இறங்கி இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், அது மணல்கொள்ளையில் ஈடுபடுவோருக்கு எப்படி வந்துசேரும் என்று தெரியாது. அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு வருவதற்குள் வண்டிகள் காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு நெட்வொர்க் அமைத்து இந்த மணல் சுரண்டலை நடத்தி வருகிறார்கள்.

பலமுறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு மணல் அள்ளும் இடத்துக்கு செல்வதற்குள், அங்கிருந்து வண்டிகளுடன் கௌரி சங்கர்சம்பந்தப்பட்டவர்கள் தப்பிவிடுவார்கள். பலமுறை இதுபோன்று போராடிப் போராடிச் சோர்ந்துவிட்டேன். புகார் பற்றிய தகவல் எப்படி போய்ச் சேருகிறது என்று ஆராய ஆரம்பித்தபோது, கிராம நிர்வாக அலுவலர் முதல் உயர் அதிகாரிகள்வரை அனைவருமே, மணல்கொள்ளை கும்பலுக்குத் தகவல் தெரிவிக்கும் 'ஸ்பை'-யாக வேலை செய்கிறார்கள் என்பது தெரியவந்தது. அதற்காக, அவர்களுக்கு தனியாக செல்போன் எண்ணையும் மணல் கொள்ளையர்கள் வாங்கிக்கொடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர். அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறேன் என்பதால் என்னை மிரட்டிவருகின்றனர். அதுமட்டுமன்றி, என் வீட்டில் உறவினர்களையும் மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை" என்றார் மிகுந்த வருத்தத்துடன்.

இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் தாயின் பால் சுரப்பியை அழிப்பதும் ஒன்று தான்  என்பதை அதிகாரிகளும் மணல் கொள்ளையர்களும் உணராதவரை இந்த சுரண்டலை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய  சவால்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!