அண்ணா சாலையில் ஆபத்தான கட்டடம்... மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் கவனத்துக்கு!

கட்டடம்

சென்னையின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று மவுண்ட் ரோடு. எப்பொழுதும் பரபரப்பாகக் காணப்படும் இந்தச் சாலையில் மெட்ரோ ரயில் தொடர்பான வேலைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன கடந்த சில மாதங்களுக்கு முன் நடுச்சாலையில் பள்ளம் விழுந்து, ஒரு பேருந்து பாதாளத்தில் பாய்ந்தது நினைவுக்கு வரலாம். இன்னொரு இடத்தில் மணல் ஆறுபோல பொங்கி வந்தது. பூமிக்கு அடியில் ஒரு ரயில்பாதையையே அமைக்கும் வேலை என்பது சாதாரண விஷயமல்ல. அதில் இப்படி சில சம்பவங்கள் நடக்கலாம். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வந்துபோகும் இடத்தில் இப்படி ஒரு வேலை என்றால், எவ்வளவு பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்? சென்னை மெட்ரோ அப்படி இருக்கிறதா என்பதை பார்க்க மவுண்ட் ரோடு முழுவதும் ஒரு டிரிப் அடித்தோம்.
TVS பேருந்து  நிறுத்தத்துக்கு முன்னால் ஓரிடம். நூறு அடி அகலம் இருக்கும் அந்தச் சாலையின் பாதிப் பகுதியை மெட்ரோ ரயில் பணிகள் ஆக்கிரமித்திருந்தன, மீதி இருக்கும் சாலையில்தான் நடந்து செல்பவர்களும் இதர வாகனங்களும் செல்ல முடியும். சாலையில் வலதுபக்கம் ஒரு கட்டடம். மவுண்ட் ரோட்டில் பேய் பங்களாபோல ஆளே இல்லாத கட்டடம் என்றதும் நம் கவனம் ஈர்த்தது. அங்கே சிறியதாக ஒரு போர்டு

"பாதசாரிகள் கவனமுடன் செல்லவும். இக் கட்டடம் இடிந்த நிலையில் உள்ளது".

அருகில் சென்று பார்த்தால் கட்டடத்தின் நிலைமையை எச்சரிக்கை பலகையைப் பார்க்காமலே தெரிந்துகொள்ளலாம் என்னும் அளவுக்கு அதன்  நிலைமை மோசமாக இருந்தது. கட்டடத்தின் உண்மை நிலையை அறிவதற்காக அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தோம்.

அருகில் இருந்த நிறுவனத்தின் செக்யூரிட்டி ஒருவரிடம் கேட்டபோது கட்டடத்தின் அமைப்பு பலவீனமாகிவிட்டதால் முழுமையாக கைவிடப்பட்டுவிட்டதாகவும் பல மாதங்களாக மூடப்பட்டு இருப்பதாகவும் அங்கே இருந்த கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

கட்டடம்

அந்த வழியே நடந்து  செல்லும் மக்களிடம் அந்த எச்சரிக்கை பலகையைப் பற்றியும் கட்டடத்தின் நிலைமையைப் பற்றியும் சொல்லி அவர்களது கருத்தைக் கேட்டோம். பெரும்பாலானோர் அப்படி ஒரு எச்சரிக்கை பலகை இருப்பதையே இதுவரை பார்த்தது இல்லை என்றே பதிலளித்தனர். ஒருவர் மட்டும் அங்குள்ள  எச்சரிக்கை பலகையைப் பார்த்துள்ளதாகவும் நீண்ட நாள்களாகவே அந்தக் கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது தனக்கு தெரிந்தாலும் இதுதொடர்பாக யாரிடம் புகார் தெரிவிப்பது எனத் தமக்குத் தெரியாது என்றும் கூறினார். அருகில் இருந்த மற்றவர்களிடம் கேட்டபோது அந்தக் கட்டடம்  எப்போது கட்டப்பட்டது எவ்வளவு நாளாக மூடப்பட்டு இருக்கிறது என்ற தகவல்களைக் கூற மறுத்துவிட்டனர்.

மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் இடங்களில் பொதுவாகவே அதிர்வுகள் அதிகமாக ஏற்படும். அதுவும் தரைக்கு கீழே பணிகள் மேற்கொள்ளப்பட்டால் அந்த இடத்தின் மண் அடுக்குகள் பலவீனமாக இருக்கலாம். அப்படியிருக்கும் இடத்தின் சில அடிகளுக்கு அருகிலேயே அமைந்திருக்கிறது இந்த நான்கு மாடிக்கட்டடம். அதுவும் அந்தச் சாலை வாகனங்களும் மக்களும் தொடர்ச்சியாகப் பயணம் செய்யும் வழியாகவும் இருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்கூட அது அந்த இடத்தில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வளவு பலவீனமான கட்டடத்தில் சென்னை மாநகராட்சி சார்பாகவோ இது சம்பந்தப்பட்ட துறையின் சார்பாகவோ  நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டதற்கான எந்த அடையாளமுமில்லை. இருக்கும் ஓர் எச்சரிக்கை பலகையில்கூட அரசு சார்பில் வைத்ததற்கான அடையாளமும் இல்லை. 

ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதுபோல, இந்தக் கட்டடத்தில் ஒரு பகுதி “வாடகைக்கு விடப்படும்” என்ற போர்டும் இருந்தது ஆச்சர்யம்.

சென்னை சில்க்ஸ் தீவிபத்துக்குப் பிறகு நகரில் உள்ள மற்ற கட்டடங்களின் பாதுகாப்பு பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ள வேளையில் இந்தக் கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்த பின்னரும்கூட அதிகாரிகள் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவில்லை.

ஆபத்தான கட்டடங்கள் பற்றி மக்களிடம் இருக்கும் தெளிவுகூட அரசிடம் இல்லை என்பதே உண்மை. அப்படி இருந்திருந்தால் அந்தக் கட்டடத்தின் பலவீனம் பற்றி தெரிந்த ஒருவருக்கு அதைப்பற்றி எங்கு புகார் அளிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்.
எது எப்படியோ விபத்துகளைத் தவிர்க்க அரசு தாமதம் செய்யாமல் செயல்பட்டாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!