ஜெயலலிதா டென்னிஸ் விளையாடிய தி.நகர் கிளப்! - அங்காடித் தெருவின் கதை! பகுதி 7

ய்வுக்குப் பின்னர் உழைப்பு என்ற விஷயத்தில் அமெரிக்கர்கள், பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதே போல அதிகம் உழைப்பு, கொஞ்சம் ஓய்வு அல்லது ஓய்வே இல்லாமல் உழைப்பு என்பதில் தமிழர்களை அடித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் இன்றளவும் தமிழர்கள் வெளிநாடுகளில் பல்வேறு பொறுப்புகளிலும், பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். தற்பெருமையை ஒதுக்கி வைத்து விட்டு விஷயத்துக்கு வருகிறேன். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில் கொஞ்சம் உழைப்பு, நிறைய ஓய்வு என்பதுதான் வழக்கமாக இருந்தது. எனவே, மற்ற எல்லா நாடுகளையும் விட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் பொழுது போக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொழுதுபோக்குகளுக்காகக் கிளப்களை உருவாக்கினர். அப்படி சென்னையில் உருவாக்கப்பட்டதுதான் அடையாறு போட் கிளப், அண்ணா சாலையிலுள்ள காஸ்மோ பாலிடன் கிளப் ஆகியவை. இந்த கிளப்களை எல்லாம் பார்த்த சென்னை வாசிகள், நமக்கு மட்டுமான ஒரு கிளப் தொடங்க வேண்டும் என்று நினைத்தனர். தி.நகர் புதிய நகராக உருவாக்கப்பட்டபோது, பிராமணர்கள் தங்களுக்கான ஒரு கிளப்  உருவாக்க வேண்டும் என்று நினைத்தனர். இதற்காக ராஜாஜியைச் சந்தித்து நிலம் வேண்டும் என்று கேட்டனர். அதன்படி ராஜாஜி உத்தரவின் பேரில், தி நகர் சோஷியல் கிளப்புக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்துக்கு முத்தையா செட்டியார் பணம் கொடுத்தார்.

தி நகர்

 1 ஏக்கர் நிலத்தில்...

இன்றளவும் வெங்கட்நாராயணா சாலையில் தி நகர் பகுதியின் வரலாற்றுச் சின்னமாக சோஷியல் கிளப் இருந்து வருகிறது. அந்த காலத்தில் பல்வேறு வி.ஐ.பி-க்கள் தி.நகரில்தான் வசித்து வந்தனர். எம்.ஜி.ஆர் காலத்துக்கு முன்பே ராஜகுமாரி, தியாகராஜ பாகவதர் ஆகியோர் தி.நகரில் வசித்து வந்தனர். எம்.ஜி.ஆர் தி.நகரில்தான் அலுவலகம் வைத்திருந்தார். ஜெயலலிதா தி நகர் பகுதியில்தான் தமது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்தார். சந்தியாவின் சகோதரி வித்யாவதியும் அப்போது சினிமாவில் நடித்து வந்தார். அவர் தி.நகர் சோஷியல் கிளப்பில் உறுப்பினராக இருந்தார்.

தி.நகர் சோஷியல் கிளப்புக்கு மிக, மிக அருகில்தான் ஜெயலலிதாவின் வீடு இருக்கிறது. எனவே ஓய்வு நேரங்களில் சித்தியுடன் ஜெயலலிதாவும் கிளப்புக்குச் செல்வார். சித்தியுடன் டென்னிஸ் விளையாடுவது அவரது வழக்கமாக இருந்தது. கண்ணதாசன் தி.நகரில் இருந்த போதிலும் அவர் கிளப்பின் உறுப்பினர் ஆகவில்லை. ஆனால், வி.கே.ராமசாமி உறுப்பினராக இருந்தார். எனவே அவருடன், கண்ணதாசன் அடிக்கடி கிளப்புக்கு வருவார். பஞ்சு அருணாசலம் போன்றவர்களும் அடிக்கடி தி.நகர் கிளப்புக்கு வந்து செல்வார். கதை விவாதங்களிலும் ஈடுபடுவார்.

காஃபியின் ருசி

தி.நகர் சோஷியல் கிளப்பின் தலைவர் இன்னோரா அசோக்கிடம் பேசினோம். "தி.நகர் கிளப்புக்கு அரசால் ஒதுக்கப்பட்ட 1 ஏக்கர் நிலத்துக்கு முத்தையா செட்டியார் அப்போது 5018 ரூபாய் பணம் கொடுத்தார்.1939-ம் ஆண்டு சோஷியல் கிளப்பை ராஜாஜி திறந்து வைத்தார். தொடர்ந்து 9 ஆண்டுகள் முத்தையா செட்டியார் கிளப்பின் தலைவராக இருந்தார்.

தி.நகர் மற்றும் அதனைச் சுற்றி வசித்து வந்த சினிமா பிரபலங்கள் எல்லோரும் இங்கு உறுப்பினர்களாக இருந்தனர். ஜெமினி கணேசன், நாகேஷ் போன்றவர்கள் ஷூட்டிங் இல்லாத சமயங்களில் இங்கு வந்து விடுவார்கள். அந்த சமயத்தில் இங்கு ஒரு கேன்டீன் இருந்தது. அதை செட்டி கேன்டீன் என்று சொல்வார்கள். கேன்டீனில் விற்கப்படும் காஃபியின் ருசிக்காகவே இங்கு பலர் வருவார்கள். இப்போது எங்கள் கிளப் கேன்டீனில் சமைக்கப்படும் பிரியாணி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதன் ருசிக்காவே பல பிரபலங்கள் மதிய உணவுக்காக இங்கு வருவார்கள்

போலீஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பலர் இங்கு தொடர்ந்து வருகின்றனர். இப்போது முன்னணியில் இருக்கும் நடிகர்கள் இங்கு தொடர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் பிரைவசி கருதி அவர்கள் பற்றிய விவரங்களை நாங்கள் வெளியிடுவதில்லை" என்றார்.

சமுதாயத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களுக்கான பொழுது போக்கு இடமாக தி.நகர் சோஷியல் கிளப் இருக்கிறது. சோஷியல் கிளப் இருக்கும் அதே வெங்கட்நாராயணா சாலையின் இன்னொரு கோடியில் எளியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஒரு அமைப்புத் தொடங்கப்பட்டது. அங்கு தொழிற்பயிற்சி பெறும் பலர் வாழ்க்கையில் உயர் நிலையை அடைந்துள்ளனர். மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலில் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு குறித்து அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்....

தொடரின் முந்தைய அத்தியாயங்களைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!