வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (24/06/2017)

கடைசி தொடர்பு:11:17 (24/06/2017)

குடியரசுத் தலைவர் தேர்தல்... பன்னீர்செல்வம் - பழனிசாமி திட்டங்கள் என்ன?

குடியரசு தலைவர் தேர்தல்

"ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்பது சந்தேகம் தான்"... அப்படியொரு தலைகீழ் மாற்றத்தை அ.தி.மு.க. கட்சி அடைந்து வருகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, மத்திய அரசுடனான அவரது நிலைப்பாடு கணிக்கமுடியாத ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 'பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள்வரை தன்னிடம் நேரில் வந்துபேச வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர் ஜெயலலிதா. பல்வேறு விஷயங்களில் மத்திய அரசின் நிலைப்பாட்டையும், திட்டங்களையும் எதிர்த்து பல முடிவுகளை எடுத்தவர். குறிப்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரும் தீர்மானத்தை, தமிழக சட்டப்பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றினார். சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, ஜெயலலிதா பயன்படுத்திய வார்த்தைகளை, அ.தி.மு.க-வை தற்போது கட்டிக் காப்பதாகச் கூறிக்கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்திற்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் நினைவுபடுத்த வேண்டியுள்ளது என்றே தோன்றுகிறது. 

அதிரடி முடிவும், ஜெயலலிதாவும்...

“உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசு அதிகாரத்தின் அடிப்படையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அரசின் இந்தமுடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு மூன்று நாள்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், மாநில அரசே அனைவரையும் விடுதலை செய்யும்" என்று ஜெயலலிதா அதிரடியாக அறிவித்தார். மாநிலத்தின் அதிகாரத்தை தீர்க்கமாக எடுத்துரைக்கும் இதுபோன்றதொரு தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் அதற்கு முன்புவரை நிறைவேறியிருக்குமா? என்பது சந்தேகம்தான்... 

அடுத்த சில மாதங்களில், பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்தபோதிலும், மத்திய அரசுடனான தமிழக அரசின் நிலைப்பாட்டில் ஜெயலலிதா சமரசம் செய்துகொள்ளவில்லை. குறிப்பாக, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  "இந்தச் சட்டம் மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும்செயல்" எனக் கூறினார். அந்தச்சட்டத்தில் இருந்து, தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதேபோன்று, மின்துறையில் நலிவடைந்த மாநிலங்களை கைதூக்கிவிட கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்படும் உதய் மின்திட்டத்தையும் ஜெயலலிதா எதிர்த்தார். உதய் திட்டத்தை அமல்படுத்தினால் தனியார் வங்கிகளும், மின்உற்பத்தி நிறுவனங்களும்தான் பயன்பெறும் என்று அவர் தெரிவித்தார். தவிர, மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வான நீட் தேர்வையும் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழக அரசின் சார்பில் நீதிமன்றத்துக்கும் சென்றார். 

ராம்நாத் கோவிந்த்

தியாகத் தலைவியின் புதல்வர்கள் வழிஎன்ன? 

“அம்மாவின் ஆணைக்கு இணங்க..., தியாகத் தலைவி... என்றெல்லாம் முழங்கிய  பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டதாகக் கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். மத்திய அரசின் திட்டங்கள் ஆகட்டும்; மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாடாகட்டும், அனைத்திலும் இருவரும் மத்திய அரசிடம் நிபந்தனையின்றி சரணடைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். தமிழக முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின்மீது எந்த அவப்பெயரும் வந்துவிடக் கூடாது என மிகுந்த கவனத்தோடு செயல்பட்டார் என்றும், அதே நிலைப்பாட்டில்தான் தற்போது எடப்பாடி பழனிசாமி அரசும் செயல்படுவதாகக் கூறுகின்றனர். 'மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றித் தருவேன்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள்  வெளியாகின.

மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் சாதனை மலரை தமிழகத்தில் தயாரித்ததன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது விசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டமான 'ரூபே' வேளாண் கடன்  திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இப்படி அரசின் கொள்கை அளவில் இருந்த ஆதரவு நிலைப்பாடு தற்போது பி.ஜே.பி-யின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரை ஆதரித்தன் மூலம் அ.தி.மு.க-வை அழிவுக்கு கொண்டுசென்று விட்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். முதல்வரின் இந்த முடிவுக்கு அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் சிலர் போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில், டெல்லியில் பி.ஜே.பி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்ச்சியிலும் பங்கேற்று அ.தி.மு.க எங்கே இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார் என்கின்றனர் அவர்கள். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர்செல்வமும் இந்த நிகழ்வில் பங்கேற்று, அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதை அவரே உறுதிப்படுத்திவிட்டார் என்கின்றனர். 

விழுந்தடித்து ஆதரவு தெரிவித்த ஒ.பி.எஸ் - ஈ.பி.எஸ்!

இதுகுறித்து அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான மயிலை பாலுவிடம் பேசியபோது, "குடியரசுத் தலைவர் பதவிக்கான மயிலை பாலுவேட்புமனு தாக்கல் நிகழ்வில் முன்னாள், இந்நாள் முதல்வர்கள் இருவருமே பங்கேற்று மனுவை முன் மொழிந்துள்ளனர். அவர்களுடைய இந்த செயல்பாடு, வரிந்துகட்டிக் கொண்டுபோய் ஆதரவு தெரிவிப்பதையே வெளிக்காட்டுகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தாலும், அவருமே பி.ஜே.பி வேட்பாளரைத்தான் ஆதரித்திருப்பார் என்றாலும், இவர்களைப்போன்று விழுந்தடித்துக் கொண்டு ஆதரித்திருக்க மாட்டார். அவருக்குகென்று சில யுக்திகளைக் கையாளக்கூடியவர். மத்திய அரசும், தமிழக அரசை இப்படி ஆட்டிவைத்து ஆட்சி நடத்த முடியாது. ஜி.எஸ்.டி சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த்திருப்பார். அதேபோன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஜே.பி-க்கான ஆதரவையும் அவ்வளவு சீக்கிரம் தெரிவித்திருக்க மாட்டார். 'எதிர்க்கட்சி வேட்பாளர் யார்? அவர்களுடைய பலம் என்ன? நாம் ஆதரிக்கும் நபர் ஜெயிப்பாரா?' என்பனவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்துதான் முடிவு எடுத்திருப்பார்.

37 மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கும் நாம் ஏன் டெல்லி செல்ல வேண்டும்? அவர்களுக்குத் தேவை என்றால் இங்கு வரட்டும் என்று காத்திருந்திருப்பார் ஜெயலலிதா. அதுமட்டுமன்றி, இந்த ஆதரவை வேறு மாதிரியான  விஷயங்களுக்காக பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டிருப்பார். ஆனால், எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தங்களுடைய சுயலாபத்துக்காக இப்படியான ஆதரவை அளித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவே ஆதரவு தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வமோ எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி தாங்கள் செய்துள்ள தவறுகளால் சிறைக்கு சென்றுவிடக் கூடாது என்ற பயம் ஒரு பக்கம் இருவருக்குமே உள்ளது" என்றார்.

'தியாகத்தலைவியை பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் புதல்வர்களின் சுய லாப ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும்?' என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு!


டிரெண்டிங் @ விகடன்