வெளியிடப்பட்ட நேரம்: 12:43 (24/06/2017)

கடைசி தொடர்பு:13:13 (24/06/2017)

அறை எண் 404 முதல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வரை... சுவாதிக்கு என்ன நடந்தது? #RememberingSwathi #AreSwathisSafe?

சுவாதி

அந்த வெள்ளிக்கிழமையை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட இயலாது. பல கனவுகளோடு பயணித்த ஓர் இளம் பெண்ணின் எதிர்காலம், நிர்மூலமாக்கப்பட்ட நாள். 2016, ஜூன் 24-ம் தேதி அதிகாலையில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், பரனூர் செல்லும் ரயிலுக்கு காத்திருந்தவரை கொடூரமாக பதம் பார்த்தது ஒரு கோர ஆயுதம். 

எப்போதும் சிரித்த முகமே அவரின்  அடையாளம். ஆனால், அவர் புன்னகையைச் சிதைத்தது, வெறிகொண்ட அந்த ஆயுதத்தின் கூர்முகம். ரத்த வெள்ளத்தில், முகம், கழுத்து வெட்டுப்பட்டுக் கிடந்த அவரின் உடலை, நேரிலும் ஊடக வழியாகவும் பார்த்தவர்களது நெஞ்சங்களில் ஆழமான அதிர்வலை ஏற்பட்டது. 

'சுவாதி'- தம் மீது  நிகழ்த்தப்பட்ட மரணத்தின் மூலம் இந்திய இதயங்களை உலுக்கிவிட்டார். 2017, ஜூன் 24-ம் தேதியுடன் அவர் மரணமுற்று ஓராண்டு ஆகிறது. 

சுவாதி மரணத்திலிருந்து ராம்குமார் மரணம் வரையிலான  ஃபிளாஷ்பேக் சம்பவங்களின் தொகுப்பு இங்கே.... 

1) ஜூன் - 24

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அதிகாலையில் வெட்டிக் கொல்லப்படுகிறார் சுவாதி. 

2) 'பிலால் மாலிக் என்பவரே சுவாதியைக் கொன்றார்' என்று சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகின்றன. இதையொட்டி நடிகர் ஒய்.ஜி மகேந்திரனும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்துகிறது. 

3) ஜூன் - 27

ரயில்வேத் துறையிடம் இருந்து வழக்கு காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நுங்கம்பாக்கம் ஏ.சி தேவராஜ்  தலைமையில், 8 தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. 8 குழுக்களையும் 8 இன்ஸ்பெக்டர்கள் தலைமையேற்று குற்றவாளியைத் தேடிவந்தனர்.

ராம்குமார்

4) ஜூன் - 28

'ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், சி.சி.டி.வி கேமரா பொருத்தவேண்டும்' என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

5) ஜூன் - 28

கொலையாளி நடந்து செல்லும் வீடியோ ஒன்றைக் காவல்துறை வெளியிடுகிறது. 

6) காவல்துறையின் தொடர் விசாரணையில் பல்வேறு தடயங்கள் கிடைத்தன.... 'கொலை நடந்த அன்று சுவாதியின் செல்போன் காலை 6.40 மணிக்கு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, பிறகு மீண்டும் 8.40 மணிக்கு சுவிட்ச் ஆன் செய்யப்படுகிறது. பின்னர் மறுபடியும் செல்போன் ஆஃப் செய்யப்படுகிறது. இரண்டுமே சூளைமேடு செல்போன் டவர் அலைவரிசையைக் காட்டியது. இதன் தொடர்ச்சியாக இந்த டவர் வழியாக நடைபெற்ற சுமார் 2 லட்சம் செல்போன் பரிமாற்றங்களை ஆய்வுக்குட்படுத்தியது.'

7)  கொலையாளி சூளைமேட்டை ஒட்டிய பகுதியில் இருப்பதை மோப்பம் பிடித்த காக்கிப்படை அந்தப் பகுதியில் உள்ள வீடு, மேன்சன்களில் குற்றவாளியைத் தேடியலைந்தது.

8) சவுராஷ்டிரா நகர், 2-வது தெருவில் உள்ள ஏ.எல் மேன்சனில் அறை  எண் 404-ல் தங்கியிருந்தார் கணேசன். இவர், ரத்தக்கறை படிந்த ஒரு சட்டையை எடுத்து வந்து, காவல்துறையிடம் நீட்டியவாறே ''என் அறையில் ராம்குமார் என்பவர் இருக்கிறார். நீங்கள் வெளியிட்ட புகைப்படத்துக்கும் அவருக்கும் ஒற்றுமை இருக்கு....  இந்த சட்டையும் அவருடையதுதான்'' என்றார். தங்களுக்குக் கிடைத்தத் தகவல்கள், ஆதாரங்கள் அனைத்தையும் வைத்து ராம்குமார் என்பவரே குற்றவாளி என்ற முடிவுக்கு வருகிறது காவல்துறை.

ராம்குமார்

9) ஜுலை - 1

இரவு 10.20  மணிக்கு தென்காசி அருகே இருக்கும் மீனாட்சிபுரத்தைச் சுற்றி வளைத்து ராம்குமாரைக் கைது செய்கிறது காவல்துறை. அப்போது, 'தனது கழுத்தை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார் ராம்குமார்' என்று கூறிய காவல்துறை, அவரை தென்காசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கிறார்கள். அப்போது நேரம் இரவு 10.50 மணி. பின்னர், மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலும் ராம்குமாரைச் சேர்த்தது காவல்துறை. 

10) ஜுலை - 3

சிகிச்சை முடிந்து சென்னை ராயப்பேட்டை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ராம்குமார். அவருக்காக ராம்ராஜ் என்ற வழக்கறிஞர் ஆஜரானார்.

11) ஜுலை - 5

ராம்குமார், எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் பொறுப்பு கோபிநாத் முன் நிறுத்தப்படுகிறார். அவர்,  ராம்குமாரை  15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடுகிறார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ராம்குமார்.

12) ஜுலை - 7

சுவாதியின் ரத்த மாதிரியோடு, அரிவாள் மற்றும் ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்த மாதிரிகளை டி.என்.ஏ பரிசோதனைக்காக ஹைதராபாத்துக்கு அனுப்பியது காவல்துறை .

13) ஜுலை - 12

சுவாதியின் தந்தை, பிலால் மாலிக், மேன்ஷன் மேனேஜர், ரயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் எனப் பலரும் ராம்குமாரை அடையாளம் காட்டினார்கள்.

ராம்குமார் மற்றும் சுவாதி

14) ஜுலை 13

ராம்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில், போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றம் 3 நாள் விசாரணைக்கு அனுமதி அளித்தது. இந்தக் காவல் விசாரணையின் ஓர் அங்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு ராம்குமாரை அழைத்துச் சென்ற போலீசார், சுவாதியைக் கொலை செய்ததை நடித்துக் காட்டச் சொல்லி வீடியோ எடுத்துக்கொண்டனர்.

15) ஆகஸ்ட் - 8

மீண்டும் ஒரு நாள் காவல் கஸ்டடிக்கு அனுமதி அளிக்கிறது நீதிமன்றம்.  

16) செப்-18

'புழல் சிறையிலிருந்த ராம்குமார், தற்கொலை செய்யும் நோக்கில், மின் கம்பி ஒயரைக் கடித்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்' என்றது சிறைத்துறை.

மரணங்கள் எப்போதும் வலி நிறைந்தவை. செயற்கையாக நிகழ்த்தப்படும் மரணம், கொடூர வலி. ஒரு மரணத்துக்கு மற்றொரு மரணம் பதிலாகாது. துர் மரணங்களுக்கு காரணமான சமூக முறையை மாற்ற முயற்சிப்பதே மானுட அறம். சுவாதியின் நினைவுகள், மானுட அறத்துக்கான வழிகாட்டல்களை வழங்கட்டும்.


டிரெண்டிங் @ விகடன்