வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (25/06/2017)

கடைசி தொடர்பு:14:11 (25/06/2017)

தமிழகத்தை தவிர்க்கும் ஐ.பி.எஸ். அதிகாரிகள்! என்ன காரணம்? #VikatanExclusive


                                                                  ஐ.பி.எஸ்.  அடையாளச் சின்னம்

‘எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லையா' என்ற தமிழக காவல்துறையில் முன்பைவிட அதிகமாகக் கேட்கிறது, குரல். கீழ்நிலைக் காவலர் மட்டத்தில் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் இந்தக் குரல், இப்போது ஐ.பி.எஸ். மட்டத்திலும் கேட்கத் தொடங்கியுள்ளது. காவல்துறை வட்டாரத்தில்  ஒருநாள் முழுவதும் திரிந்து சேகரித்த குமுறல்கள் மிக அதிகம். அதில் சில குரல்களின் பதிவுகள் மட்டும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

"சார், முழுமையாக  பணியாற்றக் கூடிய சூழல் இப்போது இல்லை. அசாதாரணமான நிலையில் பணியாற்றுவது  எதிர்காலத்துக்கு சரிப்பட்டு வருமா என்று தெரியவில்லை. சரியாகச் சொல்வதென்றால்  நாங்கள் எந்த அதிகாரத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்?  எங்களை இயக்குவது யார் என்றே தெரியாத நிலையில், கீழே உள்ளவர்களை எந்த 'சேப்டி- ஜோன்' பக்கம் நின்று நாங்கள் வேலைவாங்குவது?’ ஸ்காட்லாண்ட் யார்ட் போலீசுக்கு இணையான போலீஸ் நம் தமிழ்நாடு போலீஸ்’ என்பார்கள். கணினித் தொழில்நுட்பம் உட்பட அனைத்து வசதிகளும் நூறு சதவீதத்தை நிறைவாகக் கையில் வைத்திருக்கிறது, லண்டன் காவல்துறை.   அந்த ஸ்காட்லாண்ட் போலீசாருடன், இன்னமும் பழைய 'பாரா துப்பாக்கி' யை கையில் பிடித்தபடி ஸ்டேசன் வாசலில் பாதுகாப்புக்கு நிற்கும் தமிழ்நாட்டு போலீசை ஒப்பிடுவது, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெருமைதான். இந்தப் பெருமைக்கு என்ன காரணம்? தமிழக போலீசாரின் வியக்கவைக்கும் மூளை மட்டும்தான் காரணம். இந்திய அளவில் எங்கும் பணியாற்ற வேண்டிய ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கனவு இன்றளவும் குறிவைத்துக் காத்திருப்பது, 'சென்னை போலீஸ் கமிஷனர்' நாற்காலியை மட்டும்தான்  அத்தனை பெருமையைக் கொண்டது இந்த நாற்காலி.

எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் 'தமிழ்நாடு கேடர்' தான் வேண்டும் என ஐ.பி.எஸ். செலக்‌ஷனில் 'டிக்' அடிக்கிற நிலை இன்னும் இருக்கிறது. இந்தியாவின் ஒரு மூலையில், மிகவும் பின்தங்கிய சமூக மக்களின் முன்னேற்றத்துக்கான அதிகாரியாக செயல்பட்டுவரும் அர்ச்சனா ராமசுந்தரம், அழகாக தமிழ் பேசக்கூடிய வட இந்தியர். தமிழ்நாடு காவல்பணியில் தன்னுடைய அதிகப்படியான சர்வீசை முடித்தவர். இவர் ஏன் இன்று தமிழ்நாட்டில் பணியாற்ற முடியவில்லை? உதாரணத்துக்கு இவர் பெயரைச் சொல்கிறோம். பட்டியலிட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட  ஐ.பி.எஸ். அதிகாரிகள் இப்படி மனம்நொந்துபோய் வெளிமாநிலங்களில் கிடக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் சட்டம் ஒழுங்கை பாரபட்சம் பார்க்காமல் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது.

ஓமந்தூரார், காமராஜர் போன்றோர்தான் இன்னமும் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பில் இருந்து விட்டார்கள். தமிழகத்தை மாறி, மாறி ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்கள், அவரவர் காலகட்டத்தில் தங்களுக்கு ஏற்றபடி பணியாற்ற ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆட்சியில் கம்பீரமாகப் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரி, அடுத்த ஆட்சியில் கடலோரக் காவல்படையிலும், அர்ச்சனா ராமசுந்தரம் போலவும் தூக்கிவீசப்படுகிறார்கள். ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும் சில குறைகள் உண்டு. சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சியாளர்கள் சொல்படி அவர்கள் கேட்டிருக்க வேண்டும். இடமாற்றம், பொய்வழக்கு, அவமதிப்புகளுக்கு அடிபணிந்து, ஆட்சியாளர்களின் ஐந்தாண்டு திட்டக்குழுத் தலைவர்களாக  மாறி இருக்கக் கூடாது" என்கிறார்கள்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் பல்வேறு உயர்பதவிகளை வகித்த உமாகணபதிசாஸ்திரி என்ற ஐ.பி.எஸ். அதிகாரியும், இப்படித்தான் உள்ளக் குமுறலை வெளிப்படுத்த முடியாமல்  தமிழ்நாட்டை விட்டே ஒதுங்கிக் கொண்டு விட்டார். இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கு கீழ் கடமையாற்றுவது என்ற குழப்பத்தில் பல ஐ.பி.எஸ்.கள் இருப்பது அனைத்து மட்டத்திலும் குமுறலாகவே கேட்கிறது. அதுபற்றி விசாரித்தோம்.


                               தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அர்ச்சனாராமசுந்தரம்

எஸ்.பி. பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வைப் பெற்றுள்ள அஸ்வின்கோட்னீஸ், தமிழகத்தைப் பெரிதும் நேசித்த ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. ‘அயலகப் பணிக்கு என்னை மாற்றிக் கொடுங்கள்’ என்று விருப்பம் தெரிவித்துள்ள முக்கிய அதிகாரிகளின் பட்டியலில் இவரின் பெயரும் இருக்கிறதாம். எந்த மாவட்டத்திலும், எந்த ஆட்சியிலும் இவரை அதிகபட்சமாக ஆறுமாதத்துக்கு மேல் பணியாற்றவிட்டதில்லை, ஆட்சியாளர்கள். அஸ்வின்கோட்னீஸ் போலவே சுறுசுறுப்பான பணியில் ஜொலித்தவர், நரேந்திரன் நாயர். தென்மாவட்டங்களில் பயிற்சி எஸ்.பி.யாக இருக்கும் போதே பொதுமக்களின் நண்பனாக அரசியல்வாதிகளை மிரள வைத்தவர்... 'உன்னை தூக்கி அடிக்கிறோம், பார்' என்று அடித்தவர்கள், அரசியல் அதிகார மையமான சென்னைக்கு  மாற்றினார்கள். சென்னைக்கு வந்த குறுகிய காலத்திலேயே அவரை அடுத்தடுத்து ஒரே ஊரில் மூன்று இடங்களுக்கு மாற்றி விட்டார்கள். நான்காவதாக ஒரு இடத்தைத் தேர்வுசெய்து வைத்துவிட்டு, 'நரேந்திரன் நாயர் எங்கே?' என்று தேடியபோது, அவர் சொந்த மாநிலமான கேரளத்தின் திருவனந்தபுரம் 'இமிக்ரேஷன்' பிரிவு எஸ்.பி.யாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

தமிழ்நாடு காவல்துறை, பலதரப்பட்ட ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடுகளைக் கடந்த ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியாற்றக்கூடிய இடமாகவே இருநூறு ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. இங்கே நேர்மையாகப் பணியாற்றக் கூடிய அதிகாரிகளின் பின்னால், ரமணா விஜயகாந்தின் பின் நிற்பதைப்போல மக்கள் நிற்பார்கள். அதைத்தான் அந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரசித்தார்கள், விரும்பினார்கள்.  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும் இது பொருந்தும். சென்னையின் அடுத்த கமிஷனர் வாய்ப்புப் பட்டியலில் சஞ்சய் அரோரா பெயரும் உண்டு. தமிழக அரசியல் சத்தத்தில், மனிதர் கலங்கிப் போய்விட்டார்; சத்தமே இல்லாமல் சி.ஆர்.பி.எஃப். பணிக்கு  மாறிவிட்டார்.

தேர்தல் ஆணையத்தால் சென்னை கமிஷனராக இருந்த ஜார்ஜ் மாற்றப்பட்டபோது, அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டவர், அசுதோஷ் சுக்லா. அஸ்வின் கோட்னீஸ் போலவே, இவரும் 'அயலகப் பணிக்கு என்னை மாற்றி விடுங்கள்'  என்று கேட்டிருப்பதாகத் தகவல்... என்கிறார்கள் காவல் வட்டாரத்தில். இப்படி அயல்பணியைக் கேட்கிறவர்களை, அப்படி கேட்கும் இடத்துக்கு மாற்றிவிடாமல் இருக்குமிடத்திலேயே அங்கீகாரத்துடன் வைத்திருந்தால், அவர்கள் 'செம்மை' யாக பணியில் கவனம் செலுத்த வாய்ப்புகள் அதிகம்.


டிரெண்டிங் @ விகடன்