வெளியிடப்பட்ட நேரம்: 18:56 (25/06/2017)

கடைசி தொடர்பு:18:56 (25/06/2017)

தமிழகத்தின் அடுத்த போலீஸ் டி.ஜி.பி.யார்? முடிவெடுக்க  திணறுகிறதா அரசு?


                        தமிழக முன்னாள் முதல்வருடன் தமிழ்நாடு பொறுப்பு போலீஸ் டி.ஜி.பி 

மிழக காவல்துறையின் பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரன் பதவி வரும் 30-ம் தேதி முடிகிறது. இதுவரை அடுத்த டி.ஜி.பி. யார் என்பதை அரசு முடிவுசெய்திருப்பதாகத் தெரியவில்லை. அப்படியொரு 'பேனல்' போனதாகவும் தெரியவில்லை. போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த கு.ராமானுஜத்துக்கு டி.ஜி.பி.யாகவே பணி நீட்டிப்பு ஒருமுறையும், அரசு ஆலோசகராக பணி நீட்டிப்பு ஒருமுறையும் முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொடுத்துவிட்டுப் போனார். இந்நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைநகர் டெல்லியில் வைத்து நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படையின் தலைமை இயக்குநரான அர்ச்சனா ராமசுந்தரம்(தமிழ்நாடு ஐ.பி.எஸ்.கேடர்)  மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசியுள்ளார்.

மாநில காவல்துறையில் சட்டம் ஒழுங்குப் பிரிவு தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) பதவிக்கு நியமிக்கப்படும் ஐ.பி.எஸ்.அதிகாரி, பணி ஓய்வுக்கு முன் டி.ஜி.பி. மற்றும் தலைமைப் படை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டால், நியமன நாளில் இருந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அப்பதவியை வகிக்க முடியும்.பணி ஓய்வுபெற டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு இன்னும் ஐந்துநாட்களே உள்ள நிலையில் டி.ஜி.பி. மற்றும் தலைமைப் படை அதிகாரியாக அவரையே நியமிப்பார்களா... அல்லது  புதிய டி.ஜி.பி. யார் என்பதை தேர்வு செய்து அதை, 'பேனல்' மூலம் வைத்து, அதற்கான தேர்வு  நடைமுறைகாலமான மூன்றுமாதம் வரையில் டி.கே.ராஜேந்திரனே  டி.ஜி.பி.யாக இருப்பாரா என்ற எந்த விபரத்தையும் தமிழக அரசு இதுவரையில் தெளிவு படுத்தவில்லை. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.களான எஸ்.ஆர்.ஜாங்கிட், சி.கே.காந்திராஜன், ஜே.கே.திரிபாதி போன்றோருக்கு 'பேனல்' ( அரசின் பரிந்துரையை அமல் படுத்தும் குழு) காத்திருப்பால் இன்னமும் டி.ஜி.பி. பதவி உயர்வு கிடைக்காமல் ஓராண்டாக பேனலுடன் சேர்ந்து அவர்களும் காத்துக் கிடக்கிறார்கள்.

கூடுதல் டி.ஜி.பி.  அந்தஸ்தில் இருந்த டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி.யாகப் பதவி உயர்வு பெற்றும், அவரை  சென்னை போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து  மாற்றாமல், தொடர்ந்து  கமிஷனராகவே பணியாற்ற வைத்தனர். இனி  டி.ஜி.பி. அந்தஸ்து இருந்தால்தான்  சென்னை போலீஸ் கமிஷனராக முடியுமா? என்ற கேள்வியை பிற ஐ.பி.எஸ்.களுக்கு  உண்டாக்கிய தருணம் அது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் புதுப்புது குழப்பங்களில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஆட்சியாளர்கள் திணறடித்துக் கொண்டே இருக்கின்றனர்.

       சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் இருந்த போது...

முந்தைய கமிஷனரான ஜார்ஜூக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்துமாறுபாடு காரணமாக, மீண்டும் கமிஷனர் இருக்கைக்கு ஜார்ஜைக் கொண்டுவருவதில் கொஞ்சம் தயக்கம் இருப்பதாக ஒரு காரணம் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் இணக்கம் வந்ததும் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் உட்கார்ந்தார். கமிஷனராக இருந்த  டி.கே.ராஜேந்திரனை, உளவுப்பிரிவின் டி.ஜி.பி. மற்றும் மாநில சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஆகிய இரண்டு பதவிகளிலும் அதாவது ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகள் மீதும் ஏற்றிவிட்டனர். ஒரு இன்ஸ்பெக்டர் பார்க்கக்கூடிய அளவிலான வேலையை , கூடுதல்டி.ஜி.பி.அந்தஸ்திலான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பார்ப்பதும் இன்னொரு பக்கம் நடைமுறையில் உள்ளது.

ஜெயலலிதாவழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு கொடுத்தால், அவர்  பதவியில் தொடரலாம். அப்போதும் அவர் பொறுப்பு டி.ஜி.பி.தானா அல்லது நிரந்தர டி.ஜி.பி.யா என்பதும் உறுதிப் படுத்தமுடியாத நிலைதான் உள்ளது. பொறுப்பு முதல்வர் பதவி என்பது அரசியல் அதிகாரத்தில் சூழ்நிலைக்கேற்றபடி எடுக்கப்படும் இயல்பான முடிவுதான் என்று நமக்கு சொல்லப் பழகி விட்டது. அதையே காவல்பணியிலும் பழகச் சொல்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.  மொத்தத்தில் போலீஸ், போலீசாக இல்லை; அவர்களை அப்படி இருக்க விடவும் அரசுகள் தயாராக இல்லை என்பதுதான் நடைமுறையில் இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்